தொடர்பாளர்கள்

Tuesday, October 20, 2009

தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா?

தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா?

மலேசியாவிலிருந்து
தொல் திருமாவளவனுக்கு ஒரு வெளிப்படையான வினா


மதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம்.

அண்மையில் தாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை கொலை வெறி அரசால் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பெற்று சொல்லொணா துன்பத்திற்கு ஆளான தமிழ் மக்களில் எஞ்சியவரைக் கொத்தடிமைக் கொட்டடிக்குள் சந்தித்து உரையாடி வந்தமையினை ஊடகங்கள் வாயிலாக படித்தறிந்தேன்.

தமிழின வீரத்தின் மொத்த வடிவமாகவும் தமிழினத்திற்குக் காலம் கொடுத்த அருங்கொடையாகவும் வாய்க்கப் பெற்ற அரும்பெறல் தலைவர் மேதகு பிரபாகரன் கரங்களைக் குலுக்கிய கைகள் தமிழனின் குருதிக் கறைகள் படிந்த கொலை வெறியன் மகிந்தவின் கரங்களைக் குலுக்கியதையும் அவனோடு சிரித்து மகிழ்ந்து உணவுண்டதையும் ஊடகங்களில் கண்டு மனம் நொந்து போன தமிழுள்ளங்களில் நானும் ஒருவன்.

தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த கரணியத்திற்காகவும் தங்கள் இயக்கத் தொண்டர்கள் பலருக்குத் தூயதமிழ் பெயர் சூட்டியமைக்காகவும் மேலும் பல்வேறு மொழி நலன் செயற்பாடுகளுக்காகவும் தங்கள் மீது எனக்கு உயர்ந்த மதிப்பிருந்தது. அதனால் மலேசியாவிற்குத் தங்களை முதன்முறையாக பல்வேறு எதிர்ப்பிற்கிடையே அழைத்து நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இதனை தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றேன்.

ஆனால் அண்மை காலமாக தங்களின் செயற்பாடுகளில் பிறழ்ச்சி நிலை தென்படுவது தங்களின் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள மதிப்பை பாதித்துள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்களா?

ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடு இணை சொல்ல முடியாத அளவில் வீரஞ்செறிந்த போர் புரிந்து கொண்டிருந்த வேளையில் அதனை முறியடிக்கும் நோக்கில் சிங்கள் இன வெறி அரசுக்கு முட்டு கொடுத்த இந்திய காங்கிரசு கூட்டணிக்குத் தாங்கள் முட்டு கொடுத்தீர்கள். அக்கால் தமிழீழ மக்களைக் குறிவைத்து சிங்களப் படை கொலை வெறி தண்டவம் ஆடியது. ஈழத் தமிழ் மக்கள் அவலக் குரல் எழுப்பினர். கதறினர். காப்பாற்றக் கோரி இந்தியாவை நோக்கிக் கெஞ்சினர். உங்கள் அன்பு முதல்வர் நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாள்களில் நின்று விடுமா என்று கேட்டார். எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என சட்ட மன்றத்திலேயே அறிவித்தனர். இந்திய நடுவண் அரசின் நிலைப்பாடே எங்களுடைய நிலைப்பாடும் என உங்கள் முதல்வர் திட்டவட்டமாகவே அறிவித்துவிட்டார். மற்றொரு பக்கம் ஈழத் தமிழ் மக்களுக்காக என்னையே நான் தியாகம் செய்யத் துணிந்து விட்டேன் என்று ஒரு நாள் நோன்பிருந்தார். கொடிய தாக்குதல் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் படுகையிலேயே போர் நிறுத்தம் வந்து விட்டது என்று கூறினார். இவை எல்லாம் யாரோ கூறுபவை அல்ல. உங்கள் தமிழகத் தலைவர்களாலேயே பதிப்பிக்கப் பட்டவை. ஏடுகளில் வந்தவை. காட்சிகளில் பதிவானவை. கொலை வேறி சிங்களவனுக்கு எல்லா வகையாலும் ஒத்தாசை வழங்கி விட்டு,

"அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. முகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே ராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது.

மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன. தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரை தாரையாய் நீர் கொட்டுவதை காண முடிகிறது.

2 பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கூடாரங்களில் 8 பேர், 10 பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. "

என்று தாங்கள் அறிக்கை விட்டிருப்பதைக் கண்டு நாங்கள் யாரிடம் சொல்லி அழ? இவற்றுக் கெல்லாம் ஏதொவொரு வகையில் தாங்களும் துணையாகி விட்டீர்களே! அதை உங்கள் மனச்சான்றிலிருந்து மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா?

"நல்ல வேளை நீங்கள் பிராபாகரனோடு அன்று இல்லை. இருந்திருந்தால் நீங்களும் செத்திருப்பீர்கள்" என்று இந்திய நாடாளுமன்ற குழுவில் தங்களைப் பார்த்து அந்தக் கொலை வெறியன் கேளி செய்தானே! அதைக் கண்டு என் நெஞ்சம் கொதித்தது. ஆனால் அது தங்களுக்கு நகைச்சுவையாகப் பட்டது.

பிரபாகரன் என்கின்ற தமிழினத்தின் உயர் தலைவனின் பக்கத்தில் நின்று உரையாடியவர் தாங்கள். விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தாங்கள். கொஞ்சமாவது அந்த வீரத்தின் வாடை வீசியிருக்க வேண்டாவா?

"வேடிக்கை பார்க்கும் இந்தியா

ஆனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் பெரும் கொடுமையாக உள்ளது.

இந்திய அரசு ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. "

இது நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள குறிப்பு. இது என்ன இந்தியா புதிதாக செய்கின்ற வேலையா? அன்று களத்தில் நின்ற தமிழனைக் கொல்ல துணை நின்ற இந்தியா, இன்று கொத்தடிமைக் கொட்டடிக்குள் கிடக்கும் தமிழனை அழிக்க உதவுகிறது. அப்படிப் பட்ட கூட்டணி தானே உங்கள் கூட்டணி.

அடங்க மறு திருப்பி அடி என்பதெல்லாம் ஏட்டளவில் இருந்தால் போதுமா?

உண்மையான அப்பழுக்கில்லாத உணர்வு மிக்க செயல் வீரம் கொண்ட தமிழனாகவே தங்களை உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐயா பழ நெடுமாறன் மலேசியா வந்த பொழுது ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்காற்ற கூடிய முழு பொறுப்புக்குரியவர்கள் முந்தைய தலைமுறையோ பிந்திய தலைமுறையோ அல்ல. இன்றைய தலைமுறையினராகிய நாம் தான். நாம் நம்முடைய கடமையை சரிவர ஆற்றத் தவறி விட்டால் வரலாற்றுப் பழிப்பிலிருந்து தப்ப முடியாது.

உங்கள் முதல்வர் இன்று பொறுப்பிலிருக்கின்ற இக்கால்தான் ஆயிரக்கணக்கான் தமிழீழத் தமிழர்கள் சிங்களக் காடையர்களால் ஊரறிய உலகறிய பச்சைப் படுகொலை செய்யப் பட்டார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டிருக்கிறது. இலக்கக் கணக்கான தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் அடைக்கப் பட்டு வதைப் படுத்தப்படுகின்றனர். இவற்றை எல்லாம் தடுப்பதற்கு ஆட்சியிலிருக்கும் உங்கள் கூட்டணிக்கு எண்ணம் இல்லையே? தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா?

தொடரும்

இரா.திருமாவளவன்

மலேசியா



No comments:

Post a Comment