தொடர்பாளர்கள்

Wednesday, September 30, 2009

தமிழகப் பெருந்தலைவர் ஐயா பழ . நெடுமாறன் அவர்களின் மலேசிய சுற்றுச் செலவில் எடுக்கப் பெற்ற காட்சிகள்

திரு இளஞ்செழியன் குடும்பத்தாருடன் ஐயா

திரு முனியாண்டி குடும்பத்தாருடன் ஐயா

திருமாவளவன் குடும்பத்தாருடன் ஐயா

திரு முரளி குடும்பத்தாருடன் ஐயா

தமிழ் நெறிக் கழக தேசிய உதவித் தலைவரும் பொதுச் செயலரும்

தேசியப் பொருளர் தமிழ் வாணன் குடும்பத்தாருடன் ஐயா


நெடுமாறன் ஐயாவுடன் செல்வம் குடும்பத்தினர்.

செல்வன் அருளாளன் வழங்கும் மறவர் படைதான் தமிழ்ப் படை

எனும் பாடல்


டத்தோசிரி சாமிவேலு அவர்களுடன் ஐயா


ஐயா அவர்களுடன் திரு குணா குடும்பத்தினர்

ஐயா அவர்களுடன் தமிழழகன் குடும்பத்தினர்

ஐயா அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

நீலாய் தெள்ளியர் ஒன்றிய அமைப்பினருடன் ஒரு சந்திப்பு.

தமிழகப் பெருந்தலைவர் ஐயா பழ . நெடுமாறன் அவர்களின் மலேசிய சுற்றுச் செலவில் எடுக்கப் பெற்ற சில காட்சிகளைக் காண்க.

Thursday, September 24, 2009

மன நிறைவோடு தமிழகம் திரும்புகிறேன் பழ.நெடுமாறன் பெருமிதம்


மன நிறைவோடு தமிழகம் திரும்புகிறேன் பழ.நெடுமாறன் பெருமிதம்

அண்மையில் மலேசியத் திருநாட்டிற்கு குறுகிய கால வருகை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து பேருரை நிகழ்த்திய தமிழகப் பெருந்தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் மன நிறைவோடு தமிழகம் திரும்புவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு பணிகளை விட்டு விட்டு இங்கு வருகிறோமே என்ற மனத் தயக்கம் எனக்கிருந்தது. ஆனால் இங்கு வந்து மக்களை சந்தித்து தமிழீழ விடுதலை தொடர்பாகவும் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் உறுதியான நம்பிக்கையினை ஏற்படுத்த முடிந்தமையினால் நான் மன நிறைவு கொள்கிறேன். என் வருகை பயனுடைய ஒன்றாக அமைந்ததனால் மகிழ்கிறேன் என்று ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் விடைபெற்றுச் செல்கையில் குறிப்பிட்டார்.

மலேசிய தமிழர் பலர் அவரை சந்திக்கின்ற பொழுதெல்லாம் கேட்கின்ற ஒரே ஒரு கேள்வி, தலைவர் இருக்கிறாரா? எப்படி இருக்கிறார்? என்பதே. ஐயா அவர்கள் எல்லாருக்கும் தலைவர் இருக்கிறார் நலமாக இருக்கிறார் விரைவில் தமிழீழ விடுதலைப் போரினை அவரே தலைமையேற்று நடத்துவார். அவர் தலைமையில் தமிழீழம் உறுதியாக மலரும் என்று நம்பிக்கையோடும் தெளிவோடும் விடை கூறுகின்ற பொழுது மக்கள் பெரு மன நம்பிக்கையோடும் உறுதியோடும் செல்வதை காண முடிந்தது. மொத்தத்தில் அவருடைய வருகையினால் மலேசியத் தமிழர்கள் தலைவர் பிரபாகரன் மீதிருந்த ஆராப் பற்றினை வெளிப் படுத்தி மன உறுதியடைந்தனர் என்றால் அது மிகையாகாது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிடும்
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான
உலகத் தமிழர் பரந்துரை

தொன்மைச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் மிக்க தமிழினம், மிகப்பெரும் நெருக்கடியையும், அறைகூவல்களையும் எதிர்நோக்கியுள்ளது. இலங்கையில் பூர்வீகக் குடியினரான ஈழத் தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருகிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.

தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இந்தக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுக்காலம் அறவழியிலும் 30 ஆண்டுக்காலம் மறவழியிலும் போராடினார்கள். கடந்த 60 ஆண்டுக்காலத்தில் சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஏதிலிகளாக உலக நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.

உள்நாட்டில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளிலிருந்தும், ஊர்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்களின் தாயக மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 3 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இராணுவச் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுப் போதுமான உணவு, மருந்து மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அல்லல்படுகிறார்கள். இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இளம் பெண்களும், சிறுமிகளும், சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப் படுகிறார்கள்.

தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகளும், சிங்கள குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. புகழ் பெற்ற கதிர்காமம் முருகன் கோயில் இப்போது புத்த பிட்சுக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் இழந்து தவிக்கும் நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு இன அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசின் நடவடிக்கைகள் மிகக் கடுமையான போர்க் குற்றமாகும். இன அழிப்பு (Genocide), போர்க்குற்றங்கள் (War Crimes), மனித உரிமை மீறல்கள் (Human Rights Violations) என்ற கொடும் குற்றங்களை வரைமுறையற்ற அளவில் - ஈழத் தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தொழிக்கும் திட்டத்தோடு, உலகநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன்படுத்தி, வக்கிரமான வழிமுறைகளில் - சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்தியுள்ளது என்பதை உலக சமுதாயத்திற்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

இட்லரின் ஜெர்மனி யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரசுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. கிழக்கு அய்ரோப்பாவில் மட்டும் யூத மற்றும் சிலாவிய இன மக்கள் ஏறத்தாழ 120 இலட்சம் பேர் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். அதைப் போல இலங்கையில் இராசபக்சேவின் அரசு தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமைக்கப்பட்ட நூரம்பர்க் - டோக்கியோ சர்வதேச நீதிமன்றங்கள் இனப்படுகொலை தண்டிக்கத்தக்க மிகப்பெரிய குற்றம் என கூறியுள்ளன.

"இனப்படுகொலை" என்ற பெருங்குற்றத்துக்குள் அடங்கக்கூடிய செயல்பாடுகள் அனைத்தையும் சிங்களப் பேரினவாத அரசு செய்து முடித்துள்ளது.

- தமிழின மக்கள் இரண்டு இலட்சம் பேரை இதுவரை படுகொலை செய்துள்ளது. மே 16 முதல் 18 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்டு, வன்னி மண்ணே பிணக்காடாக்கப்பட்டது.
- போரில் 25,000 தமிழர்கள் ஊனமுற்றதாகச் செய்தி வெளியானாலும், ஊனமுற்றவர் எண்ணிக்கை அதைவிடப் பலமடங்கு ஆகும்.
- ஈழத் தமிழ் மக்களுக்கு உணவும், நீரும், மருந்தும் கிடைக்கவிடாமல் தடை செய்து, அவர்களைப் பட்டினி போட்டும், மருத்துவ உதவியில்லாமலும் கொன்றொழித்தது.
- வதை முகாம்களில் அடைபட்டுள்ள இளைஞர்கள் சிங்களப் படையினரால் நாள்தோறும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் முகாமுக்குத் திரும்புவதே இல்லை. வதைமுகாமுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப் படுகின்றனர்.
- தமிழினத்தில் குழந்தைகள் பிறப்பு வலுவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது; நடைமுறையில் தடை செய்யப்பட்டிருக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கட்டாயக் கருச்சிதைவு, பிற பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடை - ஆகியவை சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வதை முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.
- குழந்தைகள் தாய் தந்தையரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் இருத்தப்படுகிறார்கள். அவர்களை உளவியல் அடிப்படையில் ஊனமாக்குவது திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது.

இவை அனைத்தும் சர்வதேசக் குற்றவியல் நீதிக்குழுவினால் (International Penal Tribunal) விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்கள். இச்செயல்பாடுகள் அனைத்தும் இனப் படுகொலை பற்றிய ஐ.நா.வின் தீர்மானத்தின் 3-வது கூறுபடி, (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide - Adopted by Resolution 260 (III)A of the United Nations General Assembly on 9 December 1948) தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்.

அய்.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள், இனப்படுகொலைத் தடுப்பு - தண்டித்தல் குறித்த சிறப்பு மாநாட்டில் (1948) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை உலக நாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உலகத் தமிழர்களாகிய நாம் வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அய்.நா. பேரவை கூடி மனித குலத்தின் வாழ்வுரிமையையும், தேசிய இன உரிமையையும் அங்கீகரிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. 90 நாடுகள் இந்த பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏகாதிபத்திய நுகத்தடியில் பிணைக்கப்பட்டுத் தவித்த காலனிய ஆதிக்க நாடுகளுக்கும், மக்களுக்கும் விடுதலை வழங்குவது பற்றிய இந்தப் பிரகடனம் அடிமைப்பட்ட மக்களுக்கான விடுதலைப் பட்டயமாகக் கருதப்பட்டது. அது வருமாறு:

அய்.நா. பரந்துரை

(Declaration on Granting Independence to Colonial Countries and Peoples, 1960: General Assembly Resolution 1514 (XV), 14 December 1960)

1. அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது, சுரண்டுவது ஆகியவை அம்மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். அய்.நா. பட்டயத்திற்கு முரணானதாகும். உலக அமைதிக்கும் கூட்டுறவிற்கும் எதிரானதாகும்.

2. அனைத்து மக்களுக்கும் (All Peoples), சுய நிர்ணய உரிமை (Right to Self-determination) உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களது அரசியல் அமைப்பையும், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியையும் குறித்துச் சுதந்திரமாக முடிவு செய்து கொள்ளலாம்.

3. அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கியிருப்பதைக் காரணமாகக் காட்டி எந்த மக்களுக்கும் சுதந்திரம் அளிப்பதைத் தாமதப்படுத்தக்கூடாது.

4. அடிமைப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து இராணுவ நடவடிக்கைளும் மற்றும் சகலவிதமான ஒடுக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும். அம்மக்கள் அமைதியாக வாழவும், முழுமையான சுதந்திர உரிமைகளைப் பெறவும் அவர்களின் தாயக மண்ணின் ஒருமைப்பாடு மதிக்கப்படவும் வேண்டும்.

5. சுதந்திரம் பெறாத அனைத்து நாடுகளுக்கும், தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ள முடியாத நாடுகளுக்கும் உடனடியாகவும் எவ்வித நிபந்தனையும் இல்லாமலும் அம்மக்கள் சுதந்திரமாக வெளியிடும் விருப்பப்படி அதிகார மாற்றம் செய்யப்பட வேண்டும். முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க யாருக்கும், இனம், சமயம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் எத்தகைய வேறுபாடும் காட்டப்படக்கூடாது.

6. ஓர் தேசிய இனத்திற்குச் சொந்தமான நாட்டின் நில ஒருமைப்பாட்டினையோ, தேசிய ஒற்றுமையையோ முழுமையாக அல்லது பகுதியாகச் சீர்குலைக்கச் செய்யப்படும் முயற்சிகள் அய்.நா. பட்டயத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கு எதிரானதாகும்.

7. அனைத்து அரசுகளும் நேர்மையாகவும் கண்டிப்பாகவும் அய்.நா. பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படியும், மனித உரிமைக்கான உலகளாவிய பிரகடனத்திற்கு ஏற்பவும், இந்தப் பிரகடனத்தின் அடிப்படையிலும் அனைத்து மக்களின் இறைமையான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் தாயக ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்.

அய்.நா. பேரவை வெளியிட்ட மேற்கண்ட பிரகடனத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென உலகத் தமிழர்களாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சிங்கள இனவெறிப் படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும், உலகத் தமிழர்களும் இணைந்து நின்று அய்.நா. அமைப்பினையும் உலக நாடுகளையும் பன்னாட்டு சமுதாயத்தையும் வற்புறுத்திச் செயல்பட வைக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஆறரைக்கோடி தமிழ் மக்களுக்கு பெரும் பொறுப்பும் வரலாற்றுக் கடமையும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் தங்களின் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கு மேலான அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும், ஆளாகியிருக்கிறார்கள். இந்த இழிநிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்வதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் அணியமாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பதை நெஞ்சார உணர்ந்து உலகத் தமிழர் பிரகடனத்தை பன்னாட்டு சமுதாயத்தின் முன் வெளியிடுகிறோம்.

உலகத் தமிழர் பிரகடனம்

1. ஈழத் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகமான தமிழீழத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும் அதற்கேற்ற அரசியல் அமைப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முறையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவை திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக் கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றே அவர்களின் பிரச்னையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்.

2. தங்கள் தாயகத்திலும் உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்கள் ஊர்களிலும், வீடுகளிலும், மீண்டும் குடியேறவும் அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணுகிறோம்.

3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும் சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டுமென அய்.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும் அவர்களை ஏவி விட்ட சிங்கள அரசியல்வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையும், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும், அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலை நிறுத்திக் கொள்ள அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணைநிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6. அளப்பரிய தியாகங்களைச் செய்து ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும் வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாகப் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும், நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொண்டு, எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில் உலகெங்கிலும் உள்ள சனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறும், உலகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களையும், அரசுகளையும் ஈழத்தமிழர் சிக்கலுக்கு ஆதரவாகத் திருப்புவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் வேண்டிக் கொள்வதற்காக தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி இப்பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம்.

தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகத்தான ஒரு கடமையை மேற்கொள்வதற்காகவே நாம் கூடி உலகறிய செய்துள்ள இப்பிரகடனம், ஈழத்தமிழர்களுக்கு வாழ்வளிக்கப்போகும் பிரகடனம் மட்டுமல்ல, உலகத்தமிழர் அனைவருக்கும் விடிவைக் கொண்டு வருவதற்கான வழிகாட்டும் பிரகடனமுமாகும் என்பதை உணர்ந்து தமிழர்கள் கட்சி, சாதி, மத வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட முன்வருமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்

Thursday, September 10, 2009

வ.உ.சி இன ஈகமும் காங்கிரசின் இரண்டகமும்


கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் விடுதலைப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
வெள்ளையர்களுக்கு எதிராக மிக சொற்பமான சில்லரை போரட்டங்களில் ஈடுபட்ட நேரு, இராசாசி போன்ற தலைவர்கள் அதற்கு விலையாக இந்த நாட்டையே பெற்றார்கள். இதுவா தியாகம்?
தியாகம் என்பது முற்றிலுமாக தன்னை இழப்பது.
கட்டபொம்மன், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், பகத்சிங் என்று பலபேர் வெள்ளையரை எதிர்த்து, தன் நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தார்கள். அந்த தியாகிகளின் வரிசையில் அர்பணிப்போடு பிரிட்டிசு அரசை எதிர்த்து போராடிய கடைசி தமிழன் வ.உ.சி.
மற்ற எந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நேராத அவலம் வ.உ.சிக்கு மட்டுமே நேர்ந்தது. அவர் ஒருவர்தான் பிரித்தானிய அரசின் ஒடுக்குமுறைககும் உள்ளானர். தான் சார்ந்திருந்த காங்கிரசு கட்சியின் துரோகத்திற்கும், சதிக்கும் ஆளானார்.
வ.உசி வாழ்க்கையின் முற்பகுதி பிரித்தானிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சீரழிந்தது. அவரின் பிற்பகுதி அவர் சார்ந்த காங்கிரசு கட்சி செய்த துரோகத்தில் சிக்கி பாழானது. வாழும் காலத்திலேயே, தான் கொண்ட கொள்கையின் இரண்டு நேர் எதிர் நிலைகளையும் சந்தித்த தியாகி, அநேகமாக வ.உ.சிதம்பரமாக மட்டுமாகத்தான் இருப்பார்.
5-9-2009 அன்று அவரின் பிறந்த நாள் என்பதால் அவரை பற்றிய நினைவுகளுக்காக…இந்தக் கட்டுரையை வெளியிடுகின்றேன் .

பார்சி குமுகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரித்தானிய இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு வழங்கல் செய்து அந்த “சிற்றுண்டி ஒப்பந்தம் ‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.

இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.

இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.

ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரித்தானியருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.

“வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி.

சுதேசிக் கப்பல் என்பது வணிகம் அல்ல, அது பிரித்தானிய வல்லாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய குழுமத்திற்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு தண்டல் செய்தார் வ.உ.சி.

1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரித்தானிய இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரித்தானிய அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய தொடங்கின .

தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.

ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரித்தானிய அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.

சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ‘வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது’ என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.

திருநெல்வேலியே திகுதிகுவென்று தீப்பற்றி எரிகிறது

கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரித்தானிய ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.

வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.

கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.

”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் சிக்கலை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி.

மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்தனர். வணிகர்கள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.

நிலைமை எல்லை மீறியது. நிருவாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் சிக்கலை வல்லாதிக்க எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த உத்தி வியக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரித்தானிய அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.

வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.

அன்றைய காங்கிரசு கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.

உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர பற்றாளரான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார்.

சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.

எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.

மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.

சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.

சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார்.

அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.

காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள்.

கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.

சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்” என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.

அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரசு தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரசு உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரசு கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.

வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம்

1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது.

19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்‘ என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரசு மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார்.

1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று சிறை அதிகாரியிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரசு கைவிடவில்லை.

திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.

1939 இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் நீதி கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரசு மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.

பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரசு “சிறப்பிக்க ‘ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய மேல் ஆளுநராக இருந்த இராசாசி :

“கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.

இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார்.

அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.

எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது `சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

-வே. மதிமாறன் தமிழ்நாடு

தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?

தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?
- பழ. நெடுமாறன்
விதியே, விதியே, தமிழச் சாதியை

என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடிய தற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.

நூறாண்டு காலம் முடிந்த பிறகும் கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

இலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலைசெய்யப்பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப் பட்டு சொல்லொண்ணாத சித்திர வதைகளுக்கு ஆளாகிவருகின்றனர். குறைந்தபட்ச அடிப்படைத் தேவை களும் சுகாதார வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்துவைக்கப் பட்டுள்ள தமிழர்களை சிங்கள இராணுவம் மட்டுமல்ல இயற்கையும் கொடுமைக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தமிழர்களைச் சூழ்ந் திருக்கிறது. கூடாரங்களுக்குள்ளும் வெளியிலும் பெரும் வெள்ளம் புகுந்து கொண்டதால் அதற்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் நடுக் கும் குளிரிலும் நோயாளிகள், குழந்தை கள் உட்பட அனைவரும் மழையில் நனைந்தவண்ணம் தவிக்கிறார்கள். கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ள வர்களுக்கு கடந்த சில நாட்களாக உணவும் வழங்கப்படவில்லை. வெள்ளத் திலிருந்தும் மழையிலிருந்தும் தப்பித்து வெளியேறுவதற்கு முயற்சி செய்த மக்களை சிங்களப்படையினர் சுற்றி வளைத்துத் தடுத்துத் தப்பிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

முகாமிலுள்ள மக்களைப் பராமரிக் கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக் காத நிலையிலும் அவர்களுக்குத் தேவையான கூடாரங்கள், சமையல் பாத் திரங்கள் போன்றவற்றை அய்.நா. அகதி கள் அமைப்பு (மசஐஈத) வழங்கிவரு கிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக் கும் தேவையான உணவுப் பொருட்கள் அய்.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த அமைப்பே அந்த உதவியை மக் களிடம் நேரடியாக வழங்குவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்கவில்லை. இராணுவம் மூலம் மட்டுமே எந்த உத வியும் அளிக்கப்படவேண்டும் என பிடி வாதமாக கூறுகிறது. ஆனாலும் அவர் களும் அதைச் சரிவரச் செய்வதில்லை.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்து 25,000க்கு மேற்பட்ட இளைஞர்களை தனியாகப் பிரித்து அவர் களுக்கு புலிகள் என்று முத்திரையிட்டு மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கிவருகின்றனர்.

3000க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தினரி டமிருந்து பிரித்து இராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அவர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை.

போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிகையாளர்களையும் மற்ற ஊடகங் களையும் சிங்கள அரசு அனுமதிக் காததை சர்வதேச பொது மன்னிப்புச் சபை மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளது.

மற்றொரு கடுமையான குற்றச் சாட்டினையும் சர்வதேச பொது மன்னிப் புச் சபை கூறியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிக்கியிருந்த பகுதிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகள் அமைக்கப்பட்டிருந்ததை காட்டும் சான்றுகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுவதாகவும் இப்பகுதியில் சிங் கள இராணுவம் தாக்குதலைத் தீவிரப் படுத்துவதற்கு முன்பாக ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங் களில் இடுகாடு எதுவும் காணப்பட வில்லை என்றும் ஆனால் போர் முடி வடைந்த பிறகு மே 24ஆம் தேதி எடுத்த படத்தில் அந்தப் பகுதியில் 1346 சவக்குழிகள் இருப்பதை காணமுடிகிறது என்றும் ஒவ்வொரு சவக்குழியிலும் நூற் றுக்கணக்கான உடல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை மிகக்கடுமையான குற்றச்சாட்டினை கூறியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது இட்லரின் நாஜிப்படையினர் யூத இன மக்களைக் கொடூரமாக கொன்றுகுவித்த செய்திகள் உலகையே அதிரவைத்தன. ஆனால் அதையும் விஞ்சும் அளவுக்கு இராசபக்சேயின் இராணுவம் தமிழர் களுக்கு எதிரான அட்டூழியங்களை எவ் விதமான தங்குதடையின்றி நிறை வேற்றிக்கொண்டுள்ளது.

அய்.நா.பேரவையோ அல்லது இந்தியா உள்பட உலக நாடுகளோ இந் தக் கொடுமைகளை தடுத்து நிறுத்தவும் குறைந்த பட்சம் ஏன் என்று கேட்கவும் கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இன்றைய மனித உரிமை மீறல்கள் நாளைய அகதிகள் உருவாக்கத் திற்கு அடிப்படை என்ற உண்மையை உலகம் உணரத் தவறியது ஏன்?

வாழையடி வாழையாக தாங்கள் வாழ்ந்துவந்த பாரம்பரியமான ஊர் களையும் வீடுகளையும் துறந்து மக்கள் வெளியேறவேண்டிய அவசியம் எப் போது நேர்கிறது? கொலை, கொள்ளை, சித்திரவதை, பாலியல் வன்முறை, சிறைக்கொடுமை, சுற்றிவளைக்கப்படுதல் போன்ற மிரட்டல்கள் உருவாகும்போது மக்கள் தங்கள் மண்ணில் இருந்து ஏதிலிகளாக வெளியேறுகிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது பல்வேறு நாடுகளில் அகதிகள் உருவா னார்கள். எனவே இதுபற்றி ஆராய்ந்த அய்.நா. பேரவை அய்.நா அகதிகள் ஆணையர் ஒருவர் தலைமையில் அமைப்பு ஒன்றினை உருவாக்குவதென முடிவு செய்தது. அப்படி உருவாக்கப் பட்ட அமைப்புதான் மசஐஈத ஆகும். 1951ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி யன்று இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிற்று. உலகெங்கும் எந்த நாட் டில் அகதிகள் உருவானாலும் அவர்களு டைய துயரம் துடைக்கும் பணியில் இது முழுமையாக ஈடுபட்டது. இதற்கான பட் டயத்தில் 125 நாடுகள் கையெழுத்திட் டன. ஆனால் இந்தியாவும் இலங்கையும் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகமுழுவதிலும் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் அந்நிய நாடு களுக்கு இடம் பெயர்ந்த 70க்கும் மேற் பட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 145 இலட்சமாகும். உள்நாட் டிலேயே அகதிகளாக தவிப்பவர்களின் எண்ணிக்கை 54 இலட்சமாகும். அய்.நா. அகதிகள் ஆணையம் தலையிட்டதின் பேரில் அதன் துணையோடு சொந்த வீடு களுக்கு திரும்பிய அகதிகளின் எண் ணிக்கை 40 இலட்சமாகும். அகதிகள் என்ற தகுதி வழங்கப்படாமல் அய்.நா. வின் பாதுகாப்பில் உள்ள அகதிகள் எண்ணிக்கை 35 இலட்சமாகும். இப்படி உலகமுழுவதிலுமுள்ள பல்வேறு நாடு களைச் சேர்ந்த அகதிகளை அய்.நா. அகதிகள் ஆணையம் பராமரிப்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எந்த நாடும் மீறுவதில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே அய்.நா. அகதிகள் ஆணையம் தங்கள் நாடுகளில் உள்ள அகதிகள் பிரச்சினை யில் தலையிடுவதை அனுமதிக்க மறுத்து வருகின்றன.

ஆசியாவில், கம்போடியா, மியான் மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர் களின் விளைவாக ஏராளமான மக்கள் அகதிகளாகியுள்ளனர். 1948ஆம் ஆண்டு அய்.நா. பேரவை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப்பிரகடனம் மிக மிக முக்கியமானதாகும். மனித உரிமை களிலிருந்து அகதிகள் பாதுகாப்பு என்பதை பிரிக்க முடியாது.சொந்த நாட் டில் வாழ இயலாத நிலையில் அந்நிய நாடுகளில் அடைக்கலம் புகுவது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கது என மனித உரிமை குறித்த உலகப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அடைக்கலம் புகுந்த நாட் டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் அகதிகளுக்கும் உண்டு என்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.

ஆனால் அய்.நா. பட்டயத்தில் கையெழுத்திடாத இந்தியாவும் இலங்கையும் அகதிகளை அய்நா. பிர கடனங்களுக்கு எதிராக நடத்துகின்றன. இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாட்டு அகதிகளையும் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்திய அரசு நடத்துகிறது.

இந்தியாவில் அடைக்கலம் புகுந்த திபேத் அகதிகள் சுதந்திரமாக நடமாட வும் சொந்தமாக தொழில் வணிகம் புரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் புரிய அந்நிய நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் விளை வாக இந்தியாவில் அவர்களின் குடியிருப் புகள் வழிபடு தளங்கள், பள்ளிக்கூடங் கள், மருத்துவமனைகள் போன்றவை சகலவசதிகளுடன் அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது.

அதைப்போல இந்தியாவிற்கு வந்து சேர்ந்த வங்க அகதிகள் நடுவே தொண்டாற்றுவதற்கு அன்னைத் தெரசா தலைமையிலான தொண்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. வேறு பல நாடு களும் உதவிகள் புரிந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் வங்க அகதிகளுக்கு உதவுவதற்காக மக்களிடம் நிதி திரட்டி அளித்தன. எல் லாவற்றிற்கும் மேலாக வங்க அகதிகள் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் குடி யேற்றப்பட்டு விவசாயம் செய்வதற்கு நிலமும் வீடுகட்ட உதவியும் வழங்கப் பட்டு அவர்கள் மிக நல்ல நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உதவிகள் எதுவும் இலங்கை யில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. மற்ற நாடுகளோ, உலகத் தொண்டு நிறுவனங்களோ அவர்களுக்கு உதவவும் இந்தியா அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் திபேத் அகதிகள் 10,80,000 பேர்களும், வங்க தேச அகதிகள் 5,35,000 பேர்களும் இலங்கை அகதிகள் மலையகத் தமிழர்கள் உட்பட 7,35,000 பேர்களும் உள்ளனர். இவர்கள் தவிர, மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உட்பட பல்வேறு நாட்டு அகதிகளும் உள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சுதந் திரமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். தமிழ் அகதிகளுக்கு மட்டுமே சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தரும் சொற்ப உதவியில் அவர்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர் களுக்காக அரசாங்கம் கட்டித்தந்த குடி யிருப்புகள் காலப்போக்கில் சிதிலமாகி விட்டது. அவர்களுடைய குழந்தை களுக்கு பள்ளிகள் கிடையாது. மருத்துவ மனைகள் கிடையாது. மொத்தத்தில் வேண்டாத விருந்தாளிகளாக அவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள்.

1965ஆம் ஆண்டு சிறீமாவோ- சாஸ்திரி உடன்பாட்டின் விளைவாக இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்த ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றளவும் வாழமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். அவர்களை அந்தமான் தீவில் குடியேற்றி நிலமும் வீடும் அளிக்கவேண்டுமென மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துக்கட்சி குழு டில்லி சென்று பிரதமர் இந்திராவை சந்தித்து வலியுறுத்தியது. ஆனால்அந்தக் கோரிக்கை இன்று வரையிலும் நிறைவேற்றப்பட வில்லை.

1983ஆம் ஆண்டிலிருந்து சிங் கள இராணுவ வெறியர்களின் தாக்குதல் களுக்குத் தப்பி படகுகள் மூலம் தமிழ கத்திற்கு தப்பி ஓடிவரும் ஈழத் தமிழர் களை சிங்களக் கடற்படை துரத்தித் துரத்தித் சுடுகிறது. அதில் தப்பி இராமே சுவரம் வந்து சேரும் அகதிகளை தமிழ கப் போலிசும் இந்திய அரசின் உளவுத் துறையும் மிகக்கடுமையான விசார ணைக்கு உட்படுத்துகின்றனர். போராளி கள் என சந்தேகிக்கப்படும் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருப்பவர்கள் சொல்லமுடியாத சோகங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பலர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. போராளிகள் என்ற சந்தேகத் தின் பேரில் ஆண்டுக் கணக்கில் விசா ரணை எதுவுமில்லாமல் வாடுகிறார்கள். இலங்கைக்கு பொருட்களை கடத்தினார் கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணை விடுதலை பெற்றபிறகும் கூட அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. இன்னும் சிலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்த பிறகும் அரசு அவர்களை விடு தலை செய்ய மறுக்கிறது. சட்ட விரோத மான முறையில் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து தாங்கள் கொடுமைப் படுத்தப்படுவதை எதிர்த்து சில நாட்களுக்கு முன்னால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற் கொண்ட பிறகு சிலரை மட்டும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் போரில் படுகாயம் அடைந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனை களில் சிகிச்சைபெற்றிருந்தவர்களை தமி ழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத் தது. அங்ககீனமான பலர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தேசிய மனித உரிமைக் கமி ஷனிடம் நான் புகார் செய்தபோது கமிஷனின் தலைவராக இருந்த நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா அவர்களே வேலூர் சிறப்பு முகாமிற்கு வந்து நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களையெல்லாம் உடனே விடுதலைசெய்யும் ஆணை பிறப்பித்தார். ஆனால் இதற்கு சில ஆண்டுகள் ஆயின என்பதுதான் மிகக் கொடுமையானதாகும்.

இந்தியாவில் 25 ஆண்டு காலத் திற்கு மேலாக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடி யேறியோர் அந்தஸ்து வழங்கவேண்டு மென வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த குரு இரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதன்முதலாக இத்தகைய கோரிக்கையை துறவுக்கோலம் பூண்ட ஒருவர் எழுப்பியிருப்பது வரவேற்கத்தக் கது மட்டுமல்ல பாராட்டத்தக்கதுமாகும்.

இலங்கையில் மின்வேலி முகா மிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் 3 இலட் சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை உட னடியாக விடுவித்து அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கை அரசோ அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அலட்சியமாக பதில் கூறுகிறது. 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக முகாம்களில் ஈழத்தமிழர்களை இந்தியா அடைத்து வைத்திருக்கும் போது நாங்கள் சில ஆண்டுகள் அவர்களை முகாம்களில் வைப்பதில் என்ன தவறு என்று அவர்கள் கேட்கிறார்கள்.

கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு 3 ஆண்டு காலத்தில் குடியுரிமையே வழங்கப் படுகிறது. வேறுபல அய்ரோப்பிய நாடு களிலும் இவ்வாறே செய்யப்படுகிறது. இங் கெல்லாம் வாழுகிற ஈழத்தமிழ் அகதிகள் சொந்தமாக தொழில் செய்யவும், வணிகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய குழந்தைகள், அந்தந்த நாடுகளின் பள்ளிகளில் சேர்ந்து பயிலு கிறார்கள். அந்தந்த பள்ளிக்கூடங் களிலேயே அவர்கள் தமிழைக் கற்கவும் அந்த அரசுகள் வசதிசெய்து கொடுத் துள்ளன. அந்நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளில் எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்களும் மருத்துவ உதவிபெறு கிறார்கள். ஆனால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இத்தகைய மனித நேய உதவிகள் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவின் பாராமுகத்திற்குரிய காரணம் நமக்கு புரிகிறது. ஆனால் அய்.நா.வும் மற்றும் உள்ள உலக அமைப்புகளும் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து ஏன் தவறினார்கள் என்பது இன்னமும் புரியாத புதிர்தான். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக் கொண்ட பல இலட்சம் தமிழர்கள் பதைக் கப் பதைக்க படுகொலை செய்யப்படு வதை தடுத்து நிறுத்த இந்தியா தவறியது வேறு ஆனால் உலகம் ஏன் தவறிற்று? குறிப்பாக அய்.நா. பேரவை அடியோடு செயலற்றுப்போயிற்றே அது ஏன்? இந்த கேள்விகள் உலகத் தமிழர்களின் உள்ளங் களைக் குடைந்துகொண்டு இருக்கின்றன.

1991ஆம் ஆண்டில் ஈராக்கின் வடபகுதியிலிருந்து 15 இலட்சம் குர்தீஷ் இன மக்கள் ஈராக்கிய இராணுவத்தினரால் சுற்றிவளைத்துக்கொள்ளப்பட்டபோது 5-4-1991இல் அய்.நா. பாதுகாப்பு குழு கூடி குர்தீஷ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயம் சர்வதேச அமைதிக்கும் பாது காப்பிற்குமே அபாயகரமானது என்ற தீர்மானத்தை (எண் 688) நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, அந்த மக்களைக் காப் பாற்றுவதற்கு எல்லாவகையான உதவியும் செய்யவேண்டுமென அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. மேலும் அய்.நா. பட்டயத் தின் ஏழாவது பிரிவு கூறியுள்ளபடி குர்தீஷ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசிய மாகும் என்றும் அதற்காக வான், கடல், நில வழியாக படைகள் உடனடியாக அனுப்பப்பட்டு சர்வதேச அமைதியை நிலைநிறுத்த உதவவேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்திற்று. இந்தத் தீர்மானத்தைப் பயன்படுத்திதான் அமெ ரிக்கா தனது படைகளை ஈராக்குக்கு விரைந்து அனுப்பியது. 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் குர்தீஷ் மக்களை பராமரிக்கும் பொறுப்பு அய்.நா.அகதிகள் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைப்போல முன்னாள் யுகோஸ் லேவியாவில் இணைந்திருந்த போஸ்னி யோவைச் சேர்ந்த சரஜிவோ நகரில் சிக் கிக்கொண்ட ஐந்து இலட்சம் மக்களைப் பாதுகாக்க அய்.நா. பாதுகாப்பு படையை அனுப்புவது என பாதுகாப்புக் குழு முடிவு செய்தது. அதேபோல குரோஷி யாவில் உள்ள செர்பிய மக்களைப் பாதுகாக்கவும் அய்.நா. பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 35 இலட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். போஸ்னியோ நாட்டில் பல்வேறு பகுதி களில் சிக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானம் மூலம் உதவிப்பொருட்களை வீசி அவர்களைப் பாதுகாக்கும் கடமை யையும் அய்.நா. செய்தது. இந்தப் பணி யில் கனடா, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன் அமெரிக்கா உட்பட 20க்கு மேற்பட்ட நாடுகள் பங்கு எடுத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் பல பகுதிகளில் இவ்வா றெல்லாம் மனித நேயமுடன் செயல்பட்ட அய்.நா.வும். மேற்கு நாடுகளும் இலங்கை யில் சிங்கள இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லையே ஏன்?

மேற்கு நாடுகளின் சரக்குகளை விற்பனை செய்வதற்குரிய மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருவதும் அந்த இந்தியா இலங்கைப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பதும் இதற்குக் காரணமா? அல்லது தங்களின் பெரிய சந்தையை இழக்க மேற்கு நாடுகள் விரும்பாதது இதற்கு காரணமா?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதமான தத்துவத்தை உல கிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர் கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித் தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப் படி உலகம் முழுவதும் மனித குலத் திற்குச் சொந்தமானது. உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கை யில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர் களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந் தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி.

Wednesday, September 2, 2009

"இராசபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது" அமெரிக்கப் பேராசிரியர் பாய்ல் நேர்காணல்

அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

செப்டம்பர் 2000-ல் இதழில் பாய்ல் எழுதிய கட்டுரை, உலக ஒழுங்கியல் பற்றிய வரலாற்று ஆவணமாக உலக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.
உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான "அம்னஸ்டி இன்டர் நேஷனலின்" உயர்மட்டக் குழு இயக்குநராக பாய்ல் பணியாற்றியுள்ளார். பாஸ்னியா மற்றும் ஹெர்ச்கோவினாவுக்கும், பாலஸ்தீனத்தின் தற்காலிக அரசுக்கும் இவர் ஆலோசகராக இருக்கிறார். பாஸ்னியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம் இன அழிப்புக்குக் காரணமான மிலோசெவிச்சுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றத்தில் வாதாடி, பாஸ்னிய மக்களுக்கு நீதி கிடைக்க காரணமாக இருந்தவர், "உயிரியியல் ஆயுதங்கள் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம 1989-அய் அமெரிக்க அரசுக்காக தயாரித்து கொடுத்தவர். இச்சட்டம ஜார்ஜ் புஷ் அரசால்அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டவடிவம் பெற்றுள்ளது.
இலங்கையில் நடைபெறுவது உள்நாட்டுப் போரல்ல; திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை ஆதாரப்பூர்வமாக உலக அரங்கில் இடையறாமல் வலியுறுத்தி வரும் பிரான்சில் பாய்ல், "தமிழ்நெட்" இணையத்தில் இதுதொடர்பான விரிவான ஆய்வு கட்டுரைகளை எழுதி வருகிறார். அமெரிக்காவின் இலினாயி பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் பாய்ல், "தலித் முரசு"க்கு (சூலை 2009) தொலைபேசி மூலம் அளித்துள்ள சிறப்புப் பேட்டியிலிருந்து...
தற்பொழுது மூன்று இலச்சத்திற்கும் மேலான தமிழர்கள் இலங்கை அரசின் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கும் போது அய்க்கிய நாடுகள் அவை போன்ற பன்னாட்டு உரிமை அமைப்புகள் தலை யிட்டு தீர்வு காண்பதற்கு வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக அவை தலையிட வேண்டும். 1948இன் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் படியும் 1949 செநிவா ஒப்பந்தத்தின் படியும், இப்பிரச்சினையில் தலையிடுவதற்கு அய்க்கிய நாடுகள் அவை கடமைப் பட்டுள்ளது. ஏற்கனவே பல நேரங்களில், அய்.நா.வும் உலக நாடுகளும் தலை யிட்டு முகாம்களில் இருக்கின்ற மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை பற்றி தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதை முகாம்களைப் போன்ற மரண முகாம்களாக இருக்கின்றன!


"இலங்கையில் போர் முடிந்து விட்டது" என்று இலங்கை ராணுவம் தன்னிச்சையாக அறிவித்த பின்பும் உலக சமூகமும், ஊடகமும், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மை நிலையை வெளிக் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்கு இருப்பவை "மரண முகாம்கள்" என்று நீங்கள் ஏற்கனவே குறிப் பிட்டுள்ளீர்கள். இலங்கை ஒரு பாலஸ் தீனமாகவோ, மேற்கு அய்ரோப்பிய நாடாகவோ இருந்திருந்தால், உலக ஊடகங்கள் இவ்வாறு அமைதி காத்திருக்குமா?

பாலஸ்தீனத்தின் மீதும் பாஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக, அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இனவெறி என்றே நான் கூறுவேன். தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைகளையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டு கொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் பாஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர் - சனவரி யில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால், இலங்கைத் தமிழர்கள் பற்றி அவை கூறாததற்கு இனவெறியே காரணம். தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள், கறுத்த தோலுடையவர்கள், இந்தியாகூட வெள் ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக் களில் பாதிப்பை ஏற்படுத்துபவை.


இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்டபோது. உலக ஒழுங்கு வேறு மாதிரியாக இருந்தது. வெகுசில வல்லரசுகள் மட்டுமே இருந்தன. அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப உலகம் இயங்கியது. இன்று பல வல்லரசு கள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆசியாவில் குறிப் பாக இலங்கையைச் சுற்றி உருவாகி யுள்ளன. இப்போதைய சூழ்நிலைகளில் இஸ்ரேல் போன்றதொரு தீர்வு தமிழ் மக்களுக்கு சாத்தியமா?

மிகச்சரியாகக் கூற முடியவில்லை. எனினும் ஒரு கட்டத்தில் இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை அமெ ரிக்கா ஆதரித்தது. இரட்டைக் கோபுர தாக்குதலான செப்டம்பர் 11-க்குப் பிறகு புஷ் நிர்வாகத்தின் கீழ் அனைத்துமே மாறிவிட்டன. அண்மையில் நடைபெற்ற சோக நிகழ்வாக இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை குடியரசுத் தலை வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றும் கூறியுள்ளார். இது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 30 ஆயிரம் தமிழர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று அவர்கள் செயல்படப்போகி றார்கள். சீனா இலங்கையுடன் இணைந்து செயல்படுகிறது. பாகிஸ்தான் இலங்கை யுடன் நட்பு பாராட்டுகிறது. இந்நிலையில் இநதியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஆறரைக் கோடி தமிழர்கள் கிளர்ந் தெழுந்து, இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த இனப்படுகொலையின்போது நிகழாத அது இப்போது முதல் நிகழ வேண்டும்.

இந்திய அரசு தன் நிலையை மாற்றி ஏதேனும் செய்ய முயன்றால், அமெரிக்கா அதற்கும் மேலாக செய்யும். சீனாவுடன் இலங்கை நெருக்கமாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்திய அரசின் சிந்தனையில் கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தால், அமெரிக்காவும் ஏதேனும் செய்ய முயலும், இந்திய அரசு ராஜபக் சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது படுபயங்கரமானது. நாஜி படைகளால் யூதர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கொடுமை களைப் போல, இலங்கைத் தமிழ் மக்கள் அனுபவிக்கிறார்கள். உலகமே கண்களை மூடிக்கொண்டு விட்டது. நாம் இந்தப் பேட்டியை தொடங்கிய நேரம் முதல் இந்த 10 நிமிடங்களில் 10 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதைய நிலைமைகளைப் பார்க்கும் போது, இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத் தும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை கை கழுவிவிட்டது போன்றே தோன்றுகிறது.


இலங்கை இனப்படுகொலையின் இறுதிக் கட்ட கள நிகழ்வுகள் பற்றி அறிய, உலகமே இலங்கை ராணுவத்தின் பிடியில் இருந்த மருத்துவர்களைத்தான் நம்பி இருந்தது. கடைசியில் ஊடகங்கள் முன் கொண்டு வரப்பட்ட மருத்துவர் களும், இலங்கை அரசின் பொய்ப் பிரச் சாரத்தையே தங்கள் செய்தியாக சொன் னார்கள். இந்நிலையில் உண்மை வெளி வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கிறதா?

அது உங்களிடம், என்னிடம், செய்தி ஊடகங்கள் மற்றும் தமிழ்நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழ் மக்களின் கைகளில்தான் உள்ளது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவது நம்மைச் சார்ந்து இருக்கிறது. போரின் இறுதிக்கட்ட காலத்தில் உண்மையிலேயே சில நல்ல ஆதாரங்கள் இருந்தன. இப்போது பொய்களின் மூலமும், ஏமாற்றி மூடி மறைப்பதன் மூலமுமே - விமர்சகர்கள் அனைவரும் இலங்கை அரசால் அடக் கப்பட்டு விட்டார்கள். இதே போன்ற தொரு நிலைதான் யூதர்கள் அழிக்கப் பட்ட காலத்திலும் இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு நாஜிகளின் கொடுமைகள் தெரிந்த போதும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இப்போதும் இலங் கையில் என்ன நடக்கிறது என்று அமெ ரிக்காவுக்குத் துல்லியமாகத் தெரியும். எனினும் மவுன சாட்சியாக உலகம் இருப் பதால், தமிழினப் படுகொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக் கின்றன.


போரில் வெற்றி பெற்றுவிட்ட தாகக் கூறி இலங்கையை பாராட்ட விழுந்தடித்து ஓடி வந்த நாடுகள், இப்போது "போர் முடிந்து" மூன்று மாதங்களாகியும் இடம் பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் குறித்த எதுவுமே பேசவில்லையே?

அவற்றிற்கு தமிழ் மக்கள் குறித்த எந்த அக்கறையும் இல்லை. அதனால் தான் பிப்ரவரி - மே மாதங்களக்கு இடை யில் ராஜபக்சேவினால் நிகழ்த்தப்பட்ட 50 ஆயிரம் தமிழர் படுகொலையை எதிர்த்து எதுவும் பேசவில்லை. படு கொலையை நிறுத்தக்கோரி துரும்பைக் கூட அசைக்கவில்லை. இப்போது பன் னாட்டு நிதியத்தின் கடனும் இலங்கைக்கு கிடைக்கப்போகிறது. இது குறைந்த பட்சம் அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ஒப்புதல் இன்றி சாத்தியமே இல்லை. அவர்கள்தான் அதை கட்டுப் படுத்துகிறார்கள். வல்லரசுகளைப் பொருத்தவரை, 50 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. இது, இனவெறியன்றி வேறு எதுவும் இல்லை. 1930-களிலும் இரண்டாம் உலகம் போர் காலத்திலும் யூதர்கள் மீதான எண்ணமும் இதுபோலத்தான் இருந்தது. போர் முடிந்த பிறகுதான் யூத இனப்படுகொலை பற்றி உலகம் உணரத் தொடங்கியது. ஆனால் அவை மிகவும் தாமதமாக நிகழ்ந்ததால் எல்லாம் பயனற்றுப் போனது.


உலக நாடுகளுக்கு அக்கறை இல்லை என்றால், இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கவும் அவசியமில்லையே?

நான் சொல்வது, அவர்களுக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை. இலங் கையின் பூகோள நலன்களை தங்க ளுக்கு சாதகமாக்க அக்கறை உண்டு. தங் களின் வர்த்தக நலன்களுக்கு இலங்கை யின் துறைமுகங்களையும் நிலப்பரப்பு களையும் மற்றும் தென்னிந்தியத் துறை முகங்களையும் பயன்படுத்திக் கொள்வதில் அக்கறை உண்டு.

இலங்கைத் தமிழர்கள் பலம் கொண்டி ருந்த போதும், தங்களுக்கென்று வலிமையான பிரதிநிதிகள் இருந்த போதும் - அவர்களின் நியாயமான நல்வாழ்வை உறுதிப்படுத்தாத இலங்கை அரசு, இப் போது அவர்கள் வலுவிழந்து, மேய்ப்பன் இல்லாதது போன்ற நிலையில் பரித விக்கும்போது - அவர்களின் உரிமைகளை யும், விருப்பங்களையும் அரசு நிறை வேற்றுமா?

நிச்சயமாக நிறைவேற்றாது. உண் மையில் அவர்களை முற்றிலுமாக அழித் தொழிக்கும் வேலையிலேயே அது ஈடு பட்டுள்ளது. போர் வெற்றி மனநிலையில் இருக்கும் அவர்கள், இப்போதும் முகாம் களிலேயே தமிழர்களை வைத்திருக்கிறார் கள். உண்மையில் 300 தமிழர்களுக்கு 1,400 சிங்கள போலீஸ் என்ற விகிதத்தில் நிலைமை இருக்கிறது. இது, இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்திற்கும் எதிரானது திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒரு குழுவை அழிக்க நினைப்பதும், இன்று இலங்கையில் நாம் பார்ப்பதும் தமிழ் இன அழிப்பே. அதை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

வல்லரசு நாடான அமெரிக்கா, இலங் கையின் இறுதிக்கட்ட இன அழிப்புப் போரின் போது எடுக்கப்பட்ட (மிக முக்கிய ஆதாரமான) செயற்கைக் கோள் படங்களை வெளியிட மறுப்பது ஏன்?

செயற்கைக்கோள் படங்களை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகள் அமெரிக்காவுக்குத் தெரியும். இலங்கை யின் கனரக ஆயுதங்கள், பீரங்கி மற்றும் விமானங்கள் தமிழர்களை துண்டாடி யதை உலகமே பார்த்தது, பாஸ்னியா போரிலும் அமெரிக்கா இவ்விதமே நடந்து கொண்டது. அமெரிக்க செயற் கைக்கோள்கள் எப்போதும் பாஸ்னி யாவை சுற்றியே இருந்தன. பாஸ்னி யாவில் என்ன நடந்தது என்பது அவற்றில் துல்லியமாக பதிவாகியிருக்கும். ஆனாலும் அவை வெளியிடப்பட வில்லை. அமெரிக்கா வெளியிடாது. ஏனென்றால் மக்கள் கோபமுற்று அதனிலும் பெரிதாக ஏதேனும் செய்து அமைதிக்கு வழிவகுக்க நிர்ப்பந்திப் பார்கள் என்பதால்.


இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? அமெரிக்கா எதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளதா?

என்னைப் பொருத்தவரை, அமெ ரிக்கா ராஜபக்சேவையே ஆதரிக்கும். அண்மையில் பன்னாட்டு நிதியத்தின் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளதே அதற்கு சான்று. அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துடன் அமெரிக்கா பேசி வந்தது. அமைதிப் பேச்சு வார்த்தையை அமெரிக்கா ஆதரித்தது. இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை. அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டியது, இலங்கையில் நடப்பது தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை என்பதைத்தான். இப்போது அமெரிக்கா இனப்படுகொலையை அங்கீ கரிக்க மறுப்பதன் காரணம் இதுதான்: அப்படி அங்கீகரித்தால் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் முதலாம் சட்டப் பிரிவின்படி-இனப்படுகொலையைத் தடுக்கவும், நிறுத்தவும் அது கடமைப் பட்டதாகிவிடும் அதை செய்ய அமெரிக் காவுக்கு விருப்பமில்லை. இதுதான் பாஸ்னியாவிலும் நிகழ்ந்தது. ஒரே ஆறுதல் (வேறுபாடு) பாஸ்னியா மீது உலக ஊடகங்கள் பார்வையை செலுத்தின.


புலம்பெயர்ந்த தமிழர்கள், "நாடு கடந்த தமிழீழ அரசை" நிறுவுவது பற்றி சிந்திக் கிறார்கள். நாளை உள் நாட்டிலோ, வெளி நாட்டிலோ "தமிழீழம்" என்றொரு நாடு பிரகடனப்படுத்தப்பட்டால், அமெரிக் காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

நான் ஏற்கனவே சொன்னபடி, அமெரிக்கா அது குறித்து எந்த அக்கறை யும் காட்டாது. குறிப்புகளின்படி ராஜபக்சே ஒரு தலைப்பட்சமாக முறித்த அமைதி ஒப்பந்தம் நடப்பில் இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் அமெரிக்கா திரைக்குப் பின்னால் தொடர்பு கொண்டிருந்தது. ஜார்ஜ் புஷ் ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான பார்வை மாற்றப்பட்டபோது, அமெரிக்கா ராஜபக்சே அரசாங்கத்தை ஆதரிக்கத் தொடங்கியது.


அரை நூற்றாண்டிற்கும் மேலாக இனப் படுகொலைக்கு ஆளாகிவரும் தமிழர் களுக்கான அரசியல் தீர்வு என்னவாக இருக்க முடியும்?

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும். அரசியல் தீர்வு கள் இவ்வாறாக இருக்கலாம்: 1. தங்களுக் கென்று சுதந்திரமான, இறைாயண்மை கொண்ட தனிநாட்டை உருவாக்கிக் கொள்வது. 2. ஒரு சுதந்திர நாட்டுடன் இணைந்து செயல்படுவது. 3. மக்களால் தீர்மானிக்கப்படும் அரசியல் வேறு அரசியல் நிலைப்பாடுகள். இவற்றில் எது வாக இருந்தாலும், அது இலங்கைத் தமி ழர்களாகலேயே தேர்வு செய்யப் படவேண்டும். இலங்கை அரசாங்கமோ, நானோ அல்லது இந்தியாவில் வாழும் தமிழர்களோகூட எந்தத் தீர்வையும் சொல்ல முடியாது. பன்னாட்டுச் சட்டங் களின்படியும் செயல்முறைகளின்படியும் தங்கள் சுயநிர்ணய உரிமையை இலங் கைத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும் எனினும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்று தீரியாகப் பார்க்கும்போது. இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படு கொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழு வும், தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக்கொண்ட பிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட போது, எந்த ஒரு நாடும் அந்த வெறித் தனமான படுகொலைநிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்யவேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே, இலங்கை அரசிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள, தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங் கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டத் திட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள் வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பிடும் ஆகும்.

இந்திய அரசு இலங்கைத் தமிழர் கள் பிரச்சினையில் தலையிடாததற்கு சொல்லும் காரணம், இலங்கைத் தமிழர் களின் சுயநிர்ணய உரிமைப் போராட் டத்தை, தான் அங்கீகரித்தால், இந்தியா வில் வாழும் 6 கோடி தமிழர்களும் அதைப் போல் தனி நாடுகேட்டுப் போராடுவார்கள் என்பதே. இது, பன்னாட்டுச் சட்டங்களின்படி ஒரு பொய் யான இரட்டை கூறு நிலை. எனவே இவ்வாறான காரணத்தைச் சொல்லி, இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறுவது இந்தியாவுக்கு இழுக்கு.

இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு "மக்கள் குழு"வினர். எனவே, சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந் தத்தின்படி (International Covenant on Civil and Politcal Rights) இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைபெறத் தகுதியானவர்கள் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெ ழுத்திட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கென்று தனியாக ஒரு மொழி, இனம் மற்றும் மதத்தைக் கொண்டிருக்கும் மக்கள். இதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் இலங்கை அரசு தமிழ் இன அழிப்பில் ஈடுபடுகிறது.

இன்னும் தெளிவாக சொல்லு கிறேன். இலங்கையும் கையெழுத் திட்டுள்ள சமூக மற்றும் அரசியல் உரி மைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் பன்னாட்டு சட்டங்களின்படி அங்கீகரிக் கப்பட்டுள்ளன. அதில் இந்த உரிமையின் படி அவர்கள் சுதந்திரமாக தங்கள் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச் சிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.நன்றி: "தலித் முரசு" சூலை 2009