தொடர்பாளர்கள்

Tuesday, July 6, 2010

ஈன்றாள் பசியும் தற்கொடை வீரனும்

ஈன்றாள் பசியும் தற்கொடை வீரனும்

இரா.திருமாவளவன்தன்முகம் மறைத்துத் தமிழ்ப்புகழ் நாட்டிய
தமிழ்மண் ஈன்ற தலைவனின் ஆக்கம்
உடல்பொருள் ஆவி அனைத்தும் ஈந்து
உயிர்த்தீ ஆன கரும்புலி மறவன்
தாய்மண் விலங்கினைத் தகர்ப்பதற் கென்றே
தன்னலம் பாரா தகைசால் நெஞ்சன்
கிடைக்கும் இன்பெலாம் தனக்கே என்னும்
கீழ்மன மாந்தர் கிடக்கும் உலகில்
இளைய அகவையில் இன்பம் துறந்தவன்
இனிது பெற்ற தாயும் தந்தையும்
பாசம் காட்டிய அன்புத் தங்கையும்
பட்டினி கிடக்க உடுத்த உடையும்
ஒண்ட குடிசையும் எதுவும் இன்றி
ஒடுங்கிய குடும்பினை எட்டிப் பார்த்திட
இயக்கம் வழங்கிய பணியினைச் சுமந்து
தயக்கம் இன்றிச் செல்கிறான் செல்வன்
விடுத்த பணிக்கென பைநிறை பணமும்
வீட்டுப் பணிக்கென வழங்கிய பணமும்
ஏந்திய செல்வன் ஏழ்மைப் பிடியில்
சிக்கித் தவிக்கும் குடும்பினைக் காண்கிறான்
ஐயா எங்கு நீ சென்றனை ஐயா
ஐயிரு திங்களாய்ச் சுமந்த வயிறு பார்
உன்னுடன் பிறந்த உயிர்க்குயிர் தங்கைபார்
உன்னைத் தோள்மேல் சுமந்த தந்தை பார்
உடுத்த உடையிலா தாகையால் தங்கை
ஊர்புறம் செல்கிறாள் இல்லை , தந்தையோ
இன்றோ நாளையோ என்றே கிடக்கிறார்
நன்றுனை ஈன்ற வயிற்றினைப் பாராய்
என்றே தாயார் அழுது புலம்ப
சென்று முடிக்கும் பணியினை ஏந்தியான்
கண்களில் கண்ணீர் கசிந்தது உருகினான்
கரங்களில் வீட்டுப் பணிக்கென வழங்கிய
பணத்தினைத் தாயார்க்குக் கொடுத்துத் தேற்றினான்
பத்து நாள் மட்டுமே பட்டினி தவிர்ந்தது
அடுத்தென் செய்வது அடுத்தென் செய்வது
அன்புச் செல்வனை நாடிய தாயார்
பை நிறை பணத்தினில் சிறிது வேண்டினள்
பையன் கொடுத்தாலும் தப்பிலை தானே
இயக்கம் விடுத்த பணிக்கென உள்ளதை
இம்மியளவும் தொடுகிலேன் தாயினும்
தாய்மண் மீட்பே பெரிதென செல்கிறான்
தமிழ்த்தாய் ஈன்ற கரும்புலி மறவன்!

விடுதலை ஒன்றுதான் நம் மூச்சு

விடுதலை ஒன்றுதான் நம் மூச்சு

இரா. திருமாவளவன்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் - எனும்
தணியாத வேட்கையை மறவாதே - நம்
தலைவன் காட்டிய பாதையில் செல்ல
ஒரு போதும் இங்குநீ தயங்காதே!

விடுதலை ஒன்றுதான் நம் மூச்சு - அதை
அடைந்திட விரைந்திடு போர் வீச்சு ( தமிழரின் )

காடு மலைதனைக் கடந்தாலும் - போர்
ஆடும் படையணி உடைந்தாலும்
வீடு வாசலை மறந்தாலும் - நீ
தேடிடு சேர்ந்திடு தலைவனையே

விடுதலை ஒன்றுதான் நம் மூச்சு - அதை
அடைந்திட விரைந்திடு போர் வீச்சு ( தமிழரின் )

பகைவன் குண்டடி பட்டு உந்தன் - நல்
பாசத் தோழர்கள் சாய்ந்தாலும்
பக்கம் இருந்தவர் பிரிந்தாலும் - நீ
பகையினை முடித்திட மறவாதே

விடுதலை ஒன்றுதான் நம் மூச்சு - அதை
அடைந்திட விரைந்திடு போர் வீச்சு ( தமிழரின் )

உலகம் திரண்டே எதிர்த்தாலும் - உன்
உறவினை வேலிக்குள் அடைத்தாலும்
கதறும் கூக்குரல் கேட்டாலும் - நீ
கண்ட கனவினை மறவாதே

விடுதலை ஒன்றுதான் நம் மூச்சு - அதை
அடைந்திட விரைந்திடு போர் வீச்சு ( தமிழரின் )

தானைத் தலைமகன் வரும் வரையில் - நீ
தந்தப் பணியினைத் தொடர்ந்தாற்று
ஈழம் பெறும்வரை போராடு - அந்தக்
காலக் கடமையை நிறைவேற்று

விடுதலை ஒன்றுதான் நம் மூச்சு - அதை
அடைந்திட விரைந்திடு போர் வீச்சு ( தமிழரின் )

Monday, July 5, 2010

இன்று கரும்புலி நாள்: விடுதலைப் புலிகளின் அறிக்கை வெளியாகியுள்ளது

இன்று கரும்புலி நாள்: விடுதலைப் புலிகளின் அறிக்கை வெளியாகியுள்ளது
05 July, 2010 by admin
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/10
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
05/07/2010

இன்று கரும்புலிகள் நாள். எமது உரிமை போராட்டத்தினை நசுக்கவும் அடக்கி ஒடுக்கவும் பெரும் எடுப்பில் வந்த பகைவர்களை எல்லாம் தனித்து நின்று தம்மையே அர்ப்பணித்து, தகர்த்து சின்னாபின்னமாக்கிய எம் தேசப்புதல்வர்களின் திருநாள்.

கரும்புலிகள் எம் மண்ணின் மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்த தற்கொடையாளர்கள். எமது போராட்ட இலட்சியத்தின் உறுதியினை எடுத்துக்காட்டும் குறியீடுகள். எமது மக்களின் நியாயபூர்வமான அரசியல் வேட்கையினை அடைவதற்கான தடைகளை அகற்றி முன்னே சென்ற அதிசயப் பிறவிகள்.

எமது அரசியல் இலக்கினை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் பலவீனமான இனத்தின் பலங்களாகவும் எம் மக்களின் உறுதிக்கு உரமாகவும் விளங்கியவர்களே எம் தற்கொடைப் போராளிகள்.

1987 ஜூலை 5 ஆம் நாள் கப்டன் மில்லரினால் தொடக்கி வைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதல் 23 வருடங்களாக நூற்றுக்கணக்கான தற்கொடைப் போராளிகளை உருவாக்கியும் அர்ப்பணித்தும் எமது போராட்டத்தினை நகர்த்திச் சென்றுள்ளது.

அன்பார்ந்த மக்களே,

எமது இனமும் மொழியும் நிலமும் என்றுமில்லாதவாறு ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படும்போது எந்தச் சக்திகளும் அதனைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. எமது இனத்தின் பலவீனங்களையும், வளப்பற்றாக்குறையினையும் பயன்படுத்தி முற்றுமுழுதாக எம்மை அழிக்க சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் முயன்ற வேளைகளிலெல்லாம் அதை எதிர்கொள்ளும் பலமான ஆயுதமாகவே கரும்புலிகள் செயற்பட்டார்கள்.

ஓர் இனத்தின் அழிவில் தமது நலன்களை நிறைவேற்ற நினைத்த சக்திகளுக்கு எதிராகவும் அந்தச் சக்திகளைப் பயன்படுத்தி எம் மக்களை முற்றாக அழித்து நில ஆக்கிரமிப்பைச் செய்யும் சிங்களப் பேரினவாதத்தை, எதிர்கொள்ளும் ஒரு தடுப்பரணாகவே எம் தற்கொடைப் போராளிகள் செயற்பட்டார்கள்.

எம் தற்கொடை போராளிகள் மனித குலத்திற்கு எதிராகவோ, இன்னோர் இனத்தினை அச்சுறுத்தவோ தம்மை அர்ப்பணிக்கவில்லை. எதிரியின் இராணுவ, பொருளாதார இலக்குகளைத் தாக்கியழிப்பதே எமது தற்கொடைப் போராளிகளின் நோக்கமாக இருந்தது.

எமது தற்கொடைப் போராளிகள் எம் இனத்தின் மீதான படையெடுப்புக்களைத் தடுத்தார்கள். எம் மண் ஆக்கிரமிக்கப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். எமது போராட்டம் பேரிடர்களை எதிர்கொண்ட நேரங்களிலெல்லாம் முன்கூட்டியே எதிரியின் இதயப்பகுதியில் இடியாக இறங்கி வரவிருந்த பேரழிவுகளைத் தடுத்தார்கள்.

எம் பலம் சிதைக்கப்படும் போது எம் மக்களும் எம் மண்ணும் எப்படி அழிக்கப்படுவார்கள் என்பதற்கு முள்ளிவாய்க்கால் பேரவலமும் அதன் பின்னரான சிங்களத்தின் திமிர்த்தனமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

கடந்த 23 ஆண்டுகளாக எம் போராட்டத்தின் பாதுகாப்பரணாக விளங்கிய எம் தற்கொடைப்போராளிகளை இன்று நாம் எம் மனதில் நிறுத்திப் பூசிக்கின்றோம். எம் மாவீர்களினதும் மக்களினதும் தியாகங்கள் இலட்சியத்தை அடையும்வரை எம்மைத் தொடர்ந்து வழிநடத்தும். எந்த அரசியல் இலட்சியத்திற்காக அவர்கள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம். எம் அரசியல் உரிமைப் போராட்டத்தில் வரும் தடைகளை காலச் சூழலிற்கேற்ப, உலக ஓட்டத்திற்கு அமைவாக ஒற்றுமையுடன் எதிர்கொண்டு பயணிப்போம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.