தொடர்பாளர்கள்

Sunday, May 15, 2011

தமிழகத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன?

தமிழகத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன?

௧. தமிழீழ மக்கள் மீது இலங்கை பேரினவாத அரசு நிகழ்த்திய இனப் படுகொலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நின்ற கொடியவர்களுக்கு சரியானப் பாடத்தை வழங்கியுள்ளனர்.

௨. 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப் பட்ட பொழுது தமிழக அரசும் இந்திய அரசும் வேடிக்கை பார்த்தனரே ஒழிய தமிழ் மக்களை எவ்வகையிலும் காப்பாற்ற வில்லை. அதற்குரிய பாடத்தை வழங்கியுள்ளனர்.

௩. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது தமிழரின் மெய்யியல். கலைஞர் கருணாநீதி தமிழை வைத்து பிழைப்பு நடத்தினார் . நாளொரு பேச்சு பொழுதொரு நடிப்பு. இதனை அவரோடு கூட்டு சேர்ந்த பா.ம.க. இராமதாசே கூறினார். தமிழீழ மக்கள் துடித்து அழுது கொண்டிருக்கையில் போர் நின்று விட்டதாக அறிக்கை விட்டார். தம் தம் குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே இவர் அதிரடி நடவடிக்கை இருக்கும். தமிழின துயர்துடைப்புக்கு இவர் கடிதம் மட்டுமே விட்டார். அதனால் இவரைக் கடித கருணாநிதி என்றும் அழைக்க லாயினர். தமிழக வழக்கறிஞர்கள் மீது காவல்துறையின் அடாவடித் தனங்கள் எல்லாரும் அறிந்தவை. மலேசியத் தமிழர்களாயினும் இலங்கைத் தமிழர்களாயினும் அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று இவருடைய அமைச்சர் அன்பழகன் சட்டமன்றத்தில் பேசினார். எனவே இவர்களைத் தமிழினக் காவலர்களாக உலகத் தமிழர்களே ஏற்றுக் கொள்ளவில்லை.
௪. தலைவரின் தாயார் மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு மருத்துவம் நிமித்தமாகச் சென்றார். படுத்த படுக்கையாகவே இருந்த அவ்வம்மையாரை நோயாளி என்றும் மூதாட்டி என்று கூட பார்க்காமல்தமிழக மண்ணை மிதிக்க கூட விடாமல் வானூர்தியில் வைத்தே திருப்பி அனுப்பினர். கொஞ்சமாவது மனிதநேயம் இருந்ததா ? தமிழினப் பற்று இருந்ததா? செய்த பாவம் சும்மா விடுமா?
௫. இராசபக்சே தமிழின மக்களைப் படுகொலை செய்து குருதிக் கறை கூட மறையவில்லை.. அவனுக்கு கைகுலுக்கல்.. பொன்னாடை..பரிசு அவனோடு விருந்து உண்டாட்டு எல்லாம்... இதற்கெல்லாம் சேர்த்துக் கொடுத்த அடிதான் இந்த அடி.
௬. கலைஞர் முன்பு ஒன்று கூறினார்.. இந்த முறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று தமிழக மக்களைப் பார்த்து முந்தைய தேர்தலில் கெஞ்சினார்.. ஆனால் வழங்கிய வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்தினாரா? தமிழீழம் தான் எங்கள் இலட்சியம் என்று இந்த இறுதி நேரத்திலும் ஒரு ஏமாற்றுப் பேச்சு. தமிழீழம் அமைவதற்கும் தமிழீழ மக்களைக் காப்பதற்கும் கிடைத்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட்டு விட்டு அவர்களின் அழிவில் இந்திய அரசோடு கைகோர்த்த வரலாற்று பிழையைச் செய்து விட்டு .... தமிழீழந்தான் எங்கள் இலட்சியம் என்றால்... உலகத் தமிழர்கள் என்ன கேணையர்களா? ...
௭. தமிழீழம் அமைய கருணாநிதி உதவியிருந்தால் எவருக்குமே கிடைக்காத வரலாற்றுப் புகழ் அவருக்குக் கிடைத்திருக்கும்.. அழிய விட்டு வேடிக்கைப் பார்த்து நாடகம் வேறு நடித்தீர்களே பெரும்பாவிகளே ... என்று தமிழ் மக்கள் நெஞ்சம் நொந்து கூறிய சொற்கள் சும்மாவா விடும்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் ....காலம் எல்லாவற்றுக்கும் ஒரு விடை சொல்லும்.. தமிழ் தேசியம் கண்டிப்பாய் வெல்லும்.. தமிழீழம் மலர்ந்தே தீரும்...