தொடர்பாளர்கள்

Monday, January 28, 2013

மலேசியத் தமிழர்களைக் கூறுபோடும் வேலையில் மக்கள் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம் மலேசியத் தமிழ் நெறிக் கழகம் கடும் கண்டனம்

மலேசியத் தமிழர்களைக் கூறுபோடும்
வேலையில் மக்கள் தொலைக்காட்சி
ஈடுபட வேண்டாம்
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் கடும் கண்டனம்

மக்கள் தொலைக்காட்சி ,இந்நாட்டில் இயங்கும் வன்னியர் சங்கத்தின் விழா ஒன்றினையும் அதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் கொ .க.மணி ,மருத்துவர் இராமதாசு அவர்களும் ,தேசிய முன்னணித் தலைவர் டத்தோ முகமது ஸி அவர்களும் பேசியதையும் ஒளிபரப்பியது. இந்நாட்டில் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழுக்கும் தமிழர்க்கும் நலன் சேர்க்கும் என்ற பேரவாவில்தான் எமது இயக்கம் மக்கள் தொலைக்காட்சி தொடக்கத்தில் ஒளிபரப்பினைத் தொடங்கியப் பொழுது பெரிதும் வரவேற்றது.தமிழ் நலம் பேணுவதில் மக்கள் தொலைக்காட்சியை நாம் பெரிதும் போற்றினோம்.ஆனால் தமிழைப் பேணு ம் அதன் கொள்கையும் படிப்படியாக தேய்ந்து வருகின்றது. அதே வேளை ஒட்டு மொத்த தமிழினத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியில் மக்கள் தொலைக்காட்சி தற்கால் ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வன்னியர் என்ற சாதி வெறியை ஊட்டுவதும்,தமிழ் நலம் தமிழர் நலம் என்று பேசுவதை விடுத்து வன்னியர் சமூகம் ,வன்னியர் குலம் ,வன்னியர்க் கல்வி ,வன்னியர் நலம் என்று பேசுவதும் ,ஒன்று பட்டு இயங்க வேண்டிய ,வாழ வேண்டியத் தமிழின ஒற்றுமையைத் திட்டமிட்டு சிதைக்கும் சதிச் செயலாகும். வன்னியர் சங்கம் என்ற சாதிப் பெயரால் நடத்தப்பட்ட விழாவில் நம் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துக்கொண்டு பாராட்டு தெரிவிப்பது வருந்தத்தக்கது ,கண்டிக்கத்தக்கது .

இக்கால் சாதிப் பெயரைக் கூறிக்கொண்டு ஒட்டு மொத்த தமிழரின் வரலாற்றுத் தொன்மையை சாதிச் சார்பாக்கிக் கொண்டு வருகிறார்கள்.வரலாற்று அறிஞர்கள் உலகில் மூத்தக் குடியாக "தமிழ்க் குடி"என்றே கூறுகிறார்களே ஒழிய வன்னியர்க்குடி என்று கூறவில்லை . வரலாற்றில் தொன்மை மிக்கவர்கள் ,வீரப் பரம்பரைகள் வன்னியர்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் வேளை தேவேந்திர குல வர்க்கம் பள்ளர் மள்ளர் தான் உலகில் மூத்த வீரப் பரம்பரை என்று ஒரு பிரிவினரும், இல்லை முக்குலத்தோர்தான் என்று இன்னொரு பிரிவினரும் இல்லை பறையர் தான் உலகில் முன்னோடிகள் என்று மற்றொரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் உயர்த்தியும் தாழ்த்தியும் இழித்தும் பழித்தும் பேசுவது எவ்வகையிலும் பெருமையைச் சேர்க்கப் போவதில்லை ,தமிழருக்கு நன்மையையும் சேர்க்கப் போவதில்லை .

மக்கள் தொலைக்காட்சியின் இத்தகு கொடியச் செயலால் இத்தொலைக்காட்சியைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்களில் சாதி வெறித் தனம் நஞ்சாக விதைக்கப்பட்டு தமிழ் தமிழன் என்ற ஒன்று பட்ட உயிர்ப்புச் சிந்தனை சிதைக்கப்படும். ஒன்று பட்டு வலிமையோடு தமிழினம் இருக்கும் வரை தமிழினத்தைச் சிதைக்க முடியாது என்று கருதி சூழ்ச்சி வலைப் பின்னும் தமிழினப் பகைவர்களுக்கு மருத்துவர் இராமதாசு போன்ற தலைவர்கள் தங்களை அறியாமலும் ,சாதி வெறியாலும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் .

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே தமிழர்கள். ,தமிழர் என்னும் இனமான உணர்வோடு தமிழர்கள் வலிமையோடு ஒன்றிணைய வேண்டும். சாதிப் பிரிவுகள் இனத்தைக் கூறு பிரிக்கும் கேடுகள் .சாதிகள் இனத்தின் அடையாளம் ,ஆகா. சாதிக்கு மொழி கிடையாது .இந்நாட்டில் வாழும் தெலுங்கு ,மலையாள,பஞ்சாபிய அன்பர்கள் சாதியால் பிரித்திருக்க வில்லை. அவர்கள் அனைவரும் மொழி இன உணர்வால் ஒன்று பட்டு இருக்கிறார்கள் ,அதனால் வலிமையோடு இருக்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறார்கள் .ஆனால் தமிழன் தன்னைத் தமிழன் என்று அடையாளம் காட்டாமல் சாதியால் பிளவுற்றால் அது நமக்கு நாமே குழி தோண்டி புதைத்துக் கொள்ளும் பேதைமைத் தனமாகும்.மக்கள் தொலைகாட்சி மக்களுக்கானத் தொலைகாட்சியாகத் ,தமிழினத் தொலைகாட்சியாக விளங்க வேண்டுமே ஒழிய வன்னியர் தொலைகாட்சியாக விளங்குதல் கூடாது .இத்தகு தீயப் போக்கினை உடனடியாக நிறுத்திக்கொண்டு உண்மையாகவே மண் பயனுற மக்கள் தொலைகாட்சி செயல்பட வேண்டுகிறேன்.இவ்வாறு மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா திருமாவளவன் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

Sunday, January 6, 2013

வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி 3

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும் .

பேசுகின்ற பேச்சுகளை எண்ணிப்பார்த்து பேசாத போது அடக்கமில்லாமல் பிறரைப் புண்படுத்திப் பேசுகின்ற சூழல் உருவாகி விடலாம். ஆயிரம் நல்ல கருத்துகளைக் கூறியிருப்போம் ,அவற்றுக் கிடையே ஏதாவது தீமை பயக்கும் சொற்களையோ பேச்சுகளையோ பேசிவிடாமல் ;அதனால் கேடு உருவாகி விட்டால் ஆயிரம் கருத்துகள் பேசினாலும் எல்லாமே பாழ்பட்டு போய்விடும்.அவ்வளவு நேரம் கூறிய நல்லனவற்றை பற்றி யாரும் பேசமாட்டார்கள் .ஆனால் இடையே உதிர்த்த தீய பேச்சே எல்லாரையும் உறுத்திக்கொண்டிருக்கும். அந்தத் தீய பேச்சால் தீமை விளையும் என்பதால் நல்லன அங்கு மறைந்து விடுகின்றன . எனவே நாம் பேசும் போது எண்ணிப்பார்த்து அடக்கமாக பேசுவதே என்றும் பாதுகாப்பானது .பேச்சு சூழலை மாற்றி யமைக்க கூடியது ;நல்ல ; சூழலை உருவாக்குவதும் உருவாகிய நல்ல சூழலை கெடுப்பதும் பேச்சுதான். எனவே அடக்கமாக பேசுவது என்றுமே பாதுகாப்பானதும் நன்மை தரக்கூடியதும் ஆகும். நாம் உதிர்க்கும் தீய பேச்சுகள் இன்னொரு மனிதரைக் கண்டிப்பாக பாதிக்கும்; எதிர்மறையான அதிர்வளையாகும் ;குழந்தை முதலாகவே அடக்கமாக பேசும் தீய வற்றை புறந்தள்ளும் போக்கினை கைக்கொண்டால் சிக்கல் எழுமா ?.... துன்பந்தான் எழுமா ?....எனவே அடக்கமாகப் பேசுக ,பெருமைக்குரியவராக வாழுக .........................

ஆக்கம் : ஐயா இரா திருமாவளவனார்

வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி 4

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு .

மனத்தூய்மை அதன் அடிப்படையில் செய்யப்படும் செயலுமாகிய அறச்செயல் மண்ணில் பிறந்த மாந்த உயிருக்கு எத்தகு ஆக்கத்தை தரும் தெரியமா ?....மிகப்பெரிய ஆக்கத்தை தரும்...செல்வத்தை தரும்....இந்த அறச்செயலால் மேலும் மேலும் இந்த ஆக்கங்கள் பெருகும் என்கிறார் வள்ளுவர் .எனவே மாந்தப் பிறப்பின் வாழ்வுக் கடப்பாடு அறம் புரிவதே .அறம் என்பது பொய்மையை தீமைகளை அறுத்தெரிவது ...நாம் செய்கின்ற நன்மைகளால் தீமைகள் அகலும் :ஒளிப்பட்டு இருள் அகலுவது போல அறச்செயலால் கேடுகள் விலகும்..உலக வாழ்க்கையில் மாந்தர்க்கு சூழும் கேடுகளை அகற்றக் கூடிய வல்லமை அறச்செயலுக்கு மட்டுமே உண்டு.நன்மை புரிந்ததால் தீமைகள் அகன்றதால் உலக மக்கள் மகிழ்ச்சியுறுவார்கள் .அதனால் அறப்பணி புரிபவர்க்கு பேரும் பெருமையும் சேரும் .எல்லோரும் அத்தகையாரைப் பாராட்டுவார்கள் :புகழ்ந்துரைப்பார்கள் .நற்பணி செய்கின்ற காரணத்தினால் நல்லோர்களால் அவர்களுக்கு செல்வமும் வந்து சேரும் .மாந்தருக்கு இந்த அறத்தை விட வேறு எந்த ஆக்கமும் உண்டா ?என வினவுகின்றார் வள்ளுவர் .இக்குறளின் வாயிலாக மாந்தன் ஒருவன் இந்த உலகுக்கு நன்மை புரிய வேண்டும் ... அந்நன்மையால் உலகம் சிறந்தோங்கும் ..,உலகம் சிறப்பதால் அதன் விளைவாக என்றென்றும் போற்றப்படும் நிலையை அம்மாந்தன் எய்துவான் என்பதை உணர்த்த வேண்டும் என்பதே வள்ளுவர் நோக்கம் .இல்லாதார்க்கு கொடுத்து உதவுதல் ,பசிப்பிணியால் வாடுபவர்க்கு உணவளித்தல்,கல்வி அறிவினை ஊட்டுதல் நல்ல நெறிகளைப் புகட்டுதல் ,அவற்றின் படி வாழுதல் முதலானவை நல்லறச்செயல்களாகும் ;இவ்வுலகத்தில் பலர் இவ்வாறான நற்பணிகள் பல புரிந்து புகழ் பெற்றுள்ளனர் என்பதை பல்வேறு சான்றுகளால் நாம் அறியலாம்...குட்ட நோயால் பாதிக்கப்பட்ட கருப்பின நோயாளிகளுக்கு மனிதநேய உணர்வோடு பண்டுவம் செய்த அல்பிரெட் சுவைச்சர் இணையரின் அறச்செயல் இன்றும் உலகோரால் போற்றப் படுகின்றது ஆயிரம் ஆயிரம் தொழுநோயாளிகளை பேணிப்புரந்த அன்னைத் திரேசாவின் அறப்பணியால் அவருக்கு கிடைத்த பேரும் புகழும் அவற்றோடு அவருக்கு கிடைத்த நோபல் பரிசும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கன ;அப்பழுக்கற்ற உண்மை உணர்வால் எவ்வகையான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் அறப்பணியால்தான் இத்தகு சிறப்பும் செல்வமும் சேரும். எனவே எங்கும் எப்பொழுதும் நல்லன எண்ணுக :நல்லன செய்க நல்லதே நடக்கும்.


ஆக்கம் : ஐயா இரா திருமாவளவன்