தொடர்பாளர்கள்

Sunday, March 20, 2011

வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி 1 - இரா.திருமாவளவன்

வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி 1 - இரா.திருமாவளவன்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

நம் மனத்தைப் போகின்ற திசைகளில் எல்லாம் போக விடாது , தீமைகளை நீக்கி நன்மையின் பக்கம் செலுத்துவது அறிவின் பணியாகும் . மனம் ஒரு குரங்கு போல ;ஆசைக்கு ஆட்பட்டது ; அதைக் கட்டுப்படுத்த தவறிவிட்டால் எதை எதையெல்லாம் விரும்பிகிறதோ அதை அடைய எண்ணும்; இதனால் நமக்குத் துன்பமே ஏற்படும் ; கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா ? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா ? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ? என்பது நல்வழி காட்டும் ஒரு பழைய பாடல் . மனிதனை மனிதப் பண்புகளோடு வாழச் செய்வது அவனிடம் உள்ள அறிவு. அவன் மனம் போன போக்கிலே வாழ முற்பட்டால் அவனுக்கும் பிறருக்கும் துன்பத்தையே விளைவித்து விடுவான் ; கடிவாளம் இன்றி செல்லும் உணர்வினை நெறிப்படுத்தி ஒழுங்கு படுத்தி நல்லவற்றின் பக்கம் படியச் செய்கின்ற பொழுதுதான் ஒரு மனிதன் பிறருக்கு எந்தக் கெடுதலையும் செய்ய மாட்டான் . இவ்வாறு ஒரு மனிதனை மனிதனாக நெறியாளனாக, பண்பாளனாக, ஒழுங்குடையவனாக எண்ணிப் பார்க்கக் கூடியவனாக நல்லவனாக உருவாக்கக் கூடியது அறிவு ; எனவே ஆசைக்கு அடிமையாகி பெரும் சிக்கலுக்குள் மாட்டாமல் அறிவு வழிபட்டு நின்று நன்மை புரியுங்கள் இதனால் துன்பம் நீங்கும் , எல்லா உயிரும் இன்புற்று வாழும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

Saturday, March 19, 2011

திருக்குறளை அறியாதவர்கள் இலக்கியவாதிகளே அல்லர். மகாத்மா காந்தி

1943 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களை அலகாபாத்தில் நடந்த ஓர் இலக்கிய மாநாட்டிற்கு பேச அழைத்திருந்தனர். அவ்வழைப்பினை ஏற்றுக் கொண்ட காந்தி மாநாட்டில் பேசச் சென்றார்.

மாநாட்டில் பேசும் போது காந்தி அவர்கள் வருகையாளர்களைப் பார்த்து பின்வருமாறு கேட்டார்.
"அன்பர்களே இங்கு பல்வேறு நிலைகளில் அறிவு பெற்றோர் வந்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் எனப் பல தரப்பட்டாரும் இங்கு வந்துள்ளீர்கள். உங்களோடு பேசுவது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. இந்தச் சூழ்நிலையில் நான் உங்களிடம் ஒரு வினாவினைத் தொடுக்க விரும்புகின்றேன். இந்த வினாவிற்கு நீங்கள் ஏற்புடைய விடையளிப்பீர்களேயானால் நான் அளவிடற்கரிய மகிழ்ச்சி அடைவேன்.
உங்களில் எத்தனை பேர் திருக்குறளைப் படித்திருக்கிறீர்கள்? எத்தனை பேர் திருக்குறளை ஆய்வு செய்திருக்கிறீர்கள்? எனக்குத் தெரியப் படுத்துங்கள். உங்களில் எத்தனைப் பேருக்குத் திருக்குறளைத் தெரியும்?
அந்த அரங்கம் ஒரே அமைதியில் ஆழ்ந்தது. ஒருவர் கூட எழுந்து விடைகூற முன் வரவில்லை.
ஒருவர் கூட இதற்கு உரிய விடையைக் கூற முன் வராதது கண்டு நான் மிகவும் வருந்துகின்றேன். திருக்குறளை அறியாத நீங்கள் உங்களைக் கல்வியாளர்கள் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள் ஆனால் ஒரு போதும் இந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உங்களை இலக்கிய வாதிகள் என்று கூறிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நான் கருதவில்லை. திருக்குறளை அறிந்திருப்பவர்களையே நான் உண்மையான இலக்கியவாதிகளாக நான் கருதுவேன் என்றாராம்.

காந்தியும் உருசிய எழுத்தாளாரான லியோ தால்சுதாயின் திருக்குறள் பற்றினை அறிந்தே இந்த உணர்வுக்கு வந்தார் என்று அறியமுடிகின்றது. நான் மீண்டு பிறவி எடுத்தால் திருக்குறளைப் படிப்பதற்காக ஒரு தமிழனாகப் பிறக்க விரும்புகின்றேன் என்று காந்தி கூறியுள்ளார்.

காந்தியின் இந்தக் கூற்றுகள் தமிழர்க்கு திருக்குறளைப் புரட்டிப் பார்க்க ஆராய அதன் படி வாழ ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தட்டும்.

திருமாவளவன்

Pop of Thirukkural by Navaneethan

Pop of Thirukkural by Navaneethan

Hi all,

Thirukkural is the tolerable one for specially for Tamilian’s life,Becasue It has the description of ”How the Ideal life or family should be“

“What we have to do to get the idealness in our society” which is great thing to make the peple saint after their’s life

It s my pleasure to explore about thirukkural….I m enjoying

One Small story about the pop-of-THIRUKKURAL Leo Tolstoy is one of the greatest persons in the world especially he was a good writer,He had written many books

Once our Father-Of-Nation Respected Mahathma Gandhiji was reading his book(that book was written by tolstoy).At that time Gandhiji had red line that is ” People have to do help or goodthing even for their enemies ” “They should not be remain their actions (Enemies action) which may be affect you but you should be able to do help or being good to your enemy”

These lines which was attracted by Gandhiji

Gandhiji suddenly wrote a letter to tolstoy “These lines are very nice I like more than other lines”

Tolstoy replied that “the Respected Gandhiji These lines are taken from The great tool THIRUKKURAL

(kural starts )

Inna Seitharai oruthal……..

Gandhiji at that time got pleasure and he whispered to others “If I were possible to born at next generation then I would be very glad when i am having my mother tongue is TAMIL“

Moral

The Tamil is very good language which has all specialities …But we people can’t able to understand the pop of tamil

We are migrating to other languages like English or Hindhi etc….

We should be ready to feel for that

shortly I m saying (please read the belowth lines like tamil pronun)

” Puriyatha piriyam
Pirium pothu purium”

At least we have to do whatever we can for tamil growth!!

Wednesday, March 16, 2011

கிரந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம்!

தென்மொழி இதழ், மீனம்,2042

கிரந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம்!



திரு இரமணசர்மாவும், திரு கணேசனும் கொடுத்த முன்மொழிவுகள் இந்திய அரசால் ஏற்கப்பட்டு ஒருங்குகுறி ஆணையத்திற்கு 06 -09- 2010-இல் அனுப்பியது. இந்திய அரசின் கிரந்த – தமிழ்க் கலப்புக் குழுவில் பங்கேற்ற காஞ்சி மட சர்மா போதும் போதாதற்கு 27-10-2010- அன்று, தனிப்பட்ட முறையிலும் கிரந்த ஒருங்கு குறி வேண்டுமென்று இந்திய அரசின் வரைவை அனுப்பியும் வைத்தார். தவறி அரசியல் அழுத்தங்களின் விளைவாக அரசு திரும்பப் பெற்றாலும் தன் வரைவின் அடிப்படையில் கிரந்தம் இடம்பெற்றாக வேண்டும் என்பதற்காக!

நாம் கேட்டவை என்ன?

மேலும் தமிழக அரசும், ஏன் இந்திய அரசும் எதிர்த்தாலும் கூட கிரந்தக் குறியீட்டை யூனிகோடுதரமாக அறிவிக்கப் போவது என்னவோ திண்ணம். யூனிகோடு குறியீடுகளில் எண்ணற்ற பல பழைய பட எழுத்துகள், சிந்து சமவெளிக் குறிகள் உட்பட, தரப்பாட்டுக்குள் வந்து கொண்டு இருக்கின்ற போது, கிரந்தம் மட்டும் கூடாது என்ற கூக்குரலுக்கு அறிவுசார் சான்றுகள் எவையும் இல்லை. தமிழுக்குக் கேடுசெய்யும் கிரந்தம் வந்தே தீரும்

என்று சில தமிழர்கள் கூறிவருகிறார்கள். காஞ்சிமடமோ, ஆரியக் கூட்டமோ கூறியிருந்தால் கூட அது அவர்களின் கருத்து; எதிர்ப்பது நம் கடமை என்று இயல்பாக எண்ணியிருக்கலாம்!



எதிர்காலத்தில் இந்திய அரசும் கிரந்தத்தையே இந்திய மொழிகளுக்கு (தமிழுக்கும்) எழுத்தாக்கிவிடும் எண்ணம் உள்ளது. இதனை திரு. வா.செ.கு. அவர்கள்,

“காந்தியடிகள் காலம் முதற் கொண்டு தேவநாகரி வரிவடிவத்தை இந்திய மொழிகட்குப் பொது வரிவடிவம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது காலப் போக்கில் வலுவடையக் கூடும். அதற்கு மாற்றான வரிவடிவமானத் திரவிட மொழிக் குடும்பத்தினர்க்குக் கிரந்த வரிவடிவம் அமையக் கூடும் என்பதே என் கணிப்பு.” (வா.செ.கு. – 12-02-2011)



திரு இரமண சர்மாவும் திரு நா.கணேசனும் கூறியதைத் திரும்பப் பெறுவதுபோல் கூறி, இரண்டு பேர் கூறியதையும் இணைத்து கிரந்தத்தைத் தனியே கொண்டுவந்து தமிழ் உள்ளிட்ட தென்னாட்டு மொழிகளை கிரந்ததிற்கு எதிர்காலத்தில் மாற்றத்திட்டமிட்டுள்ளனர். இதற்கு இர்மண சர்மாவும் காஞ்சிமடமும் இந்திய அரசுக்குத் துணைபோகின்றனர்; அறியாத நம்மவர்களும் உடந்தையாக உள்ளனர். தமிழின் வீழ்ச்சிக்கு வித்திட்டது கிரந்தமே என உணரின் அன்றோ தமிழின் மீட்சிக்கு இன்றைய ஆங்கிலமும் கமுக்க கிரந்தத் திணிப்புமே எதிரிகள் என உணரமுடியும்.

“தமிழை நவீனப்படுத்துவதை விட்டுவிட்டு இவர்கள் தமிழை தேவநாகிரிக்கேற்ப மாற்றுகிறார்கள். இது தமிழுக்கு மட்டுமல்ல, தேவநாகிரி மொழி அற்ற சகல மொழிகளையும் மாற்றும் முயற்சியில் தான் இந்திய அரசு ஈடுப்பட்டுக்கொண்டுள்ளது. இந்திய அரசு, ஒட்டுமொத்த இந்திய மொழிகளின் வரிசையை தேவநாகிரி வரிசைக்கேற்ப ஒழுங்கு மாற்றி ஒருங்குறியில் ஏற்றியதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அத்தனை தேவநாகிரி எழுத்துக்களுக்கும், ஒரு "தமிழ்" எழுத்தை உருவாக்கியே இந்த முயற்சியை அவர்கள் கைவிடுவார்கள். ( திரு. காபிடல், கனடா; 28-11-2010 )



கிரந்தம் கலந்த கல்வெட்டுகளின் மூலமாக வரலாற்றை அறியக் கிரந்தத்தை ஒருங்கு குறியில் சேர்க்கவேண்டும் என்று சில தமிழர்கள் கூறுகின்றனர். கல்வெட்டில் உள்ளவை தமிழ் எழுத்துக்களும் , வருக்கக் குறியீடுகளும்தான்! தமிழல்லாத கிரந்தக் குறியீடுகளையும் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ, மேடவாக்கக் கூட்டத்தில் கூறியவாறு அதனைத் தொழில் நுட்பத் துணையுடன் பட வடிவில் (கிளிஃப்) பதிவு செய்து தமிழில் வெளியிடலாம் ! மணிப்பிரவாள நடையில் உள்ள ஈட்டுரைகளைத் தமிழ் எழுத்துகளிலேயே மாற்றிச் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது!அறிவியல், வரலாற்று, பிறமொழிச் சொற்களைத் தவிர்க்கவியலா இடங்களில் குறிக்க வேண்டுமானால், மலேசியக் கணினி அறிஞர் முத்துநெடுமாறன் குறிப்பிட்டது போல மீக்க்குறியெண்களால் குறிக்கலாம்,அல்லது பிரான்சுத் தமிழறிஞர் லெபோ கூறியது போல மொழியியல் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.கிரந்தக் கேட்டை வரவேற்கத் தேவையில்லை.

தமிழில் கலந்துள்ள 6 கிரந்த எழுத்துகளால் தமிழில் எண்ணற்ற பிறமொழிச்சொற்கள் நுழைந்து கேடு செய்து வருவதால் அவற்றைக் களைய நாம் பாடுபட்டுவருகிறோம்; மேலும் பொருந்தாத வடமொழி வல்லொலிகளைத் திணிக்கக் கிரந்தம் வரக்கூடாது; கிரந்தம் ஒரு மொழியில்லை, வழக்கிலும் இல்லை;அது ஒரு மொழியல்ல என்றாலும் கூட, பிற வரலாற்றுக் குறியீடுகள் போல் தனியே வரலாம் என்று நம்மவர்களே எதிரிக்குத் துணைபோகிறார்கள்; அப்படி அக்கிரந்தம் தனியே வரும், வந்தே தீரும் எனில் , எம் தமிழ் எழுத்துக்கள் 31 தமிழ் ஒலிகள் இல்லாமல் வெறும் வர்க்கக்குறியீடுகள் 15 மட்டும் கொண்டு வரட்டும்! தமிழர்களே ! கிரந்ததைத் தடுக்காமல் தூங்காதீர்கள்!ஏமாறாதீர்கள்!

-------------------------------------------------------------------------------------

தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர் இருக்கின்றார் - அவர்
தமிழர்களின் தாலிகளை அறுக்கின்றார்!
கட்சிபேசும்; தலைமை தாங்கும் தமிழால் - பெருங்
கயவர்களின் கூட்டஞ் சேர்க்கும் தமிழால்!
எச்சிலைக்கு நாக்கை நீட்டிப் படுக்கும் - மேல்
இருப்பவர்க்கே இனத்தைக் காட்டிக் கொடுக்கும்!

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

Wednesday, March 2, 2011

முகம் தமிழே - முனைவர் கு. அரசேந்திரன்

முகம் தமிழே - முனைவர் கு. அரசேந்திரன்

'முகம்' சொல்லின் மூலத்தைத் தமிழில் காணமுடிகிறதா அல்லது வட மொழியில் காணமுடிகிறதா என்பதே இங்கு ஆய்வு. உடம்பின் ஓர் பகுதியைச் சுட்டும் face என்னும் 'முகம்' ஆகிய இவ்வுறுப்பு எதனால் இப்பெயரைப் பெற்றது? சமற்கிருத வேர்ச்சொல் ஆய்வாளர்களில் முன்னவர் - மூலவர் மானியர் வில்லியம்சு ஆவார். அவர், இச்சொல் வரலாற்றை எப்படி விளக்கு கிறார்? 'mukha' என்னும் ஒலிப்பில் இச்சொல்லை வடமொழியில் ஒலிக்க வேண்டும். அவர் இச்சொல்லிற்கு உரைக்கும் முதற் பொருள் mouth; இரண்டாவது பொருள் face .

மானியர் வில்லியம்சு 'mukha' ஆகிய சொல்லிற்கு வாய் (mouth) ஆகிய பொருளை முதற்பொருளாகக் கூறுவதிலிருந்து நாம் எதைத் தெரிந்து கொள்கிறோம்! சமற்கிருதத்தில் 'முக' என்பதற்கு முதற்பொருள் 'வாய்' என்பதுதானே!

வாய் என்ற பொருளை அச் சொல்லிற்கு மானியர் வில்லியம்சு எதன் அடிப்படையில் கண்டுபிடித்தார்? mukha ஆகிய சொல்லை அவர் mukhan என்ற வடிவ வழியது என்று உணர்ந்தார். அதனால் அவரால் 'வாய்' என்ற பொருளைக் கூறமுடிந்தது. 'மு' என்பதை ஓர் முன்னொட்டாகக் கொண்டு கன் - (கன்னம் = துளை) என்பதற்குத் துளை என்றொரு பொருள் இருப்பது கண்டு முன்னுள்ள துளை அதாவது 'வாய்' என அவர் எண்ணிப் பார்த்திருக்கிறார். இந்த எண்ண ஓட்டமே அவர் முகத்திற்கு 'வாய்' என்ற பொருள் தந்ததற்கு அடிப்படை. 'keras' ஆகிய கிரேக்கச் சொல் 'கொம்பு' என்னும் பொருளது. இது இலத்தீனில் ceras எனக் க-ச திரிபில் திரியும். கொம்பைக் குறித்த இக் கிரேக்கச் சொல்தான் வடமொழியில் பிறகு சிரசு எனக் கொம்புள்ள இடத்தை அதாவது தலையைக் குறித்தது. இதைப் போலவே மு-கன் என்பது முதலில் வாயைக் குறித்துப் பின் வாயுள்ள இடத் தைக் குறித்திருக்கலாம். இவை நிற்க.

தமிழில், முகம் எவ்வாறு பிறந்தி ருக்கின்றது என்பதை இனி எண்ண வேண்டும். 'முகம்' என்ற சொல் முதலில் face ஆகிய உடற்பகுதியைக் குறிக்கத் தோன்றவில்லை. அது, முன் பகுதி, முதற்பகுதி என்ற பொருளி லேயே முதற்கண் கருக்கொண்டு உருக்கொண்டது.

'முல்' என்பது முதன்மை குறிக் கும் சொற்கள் பல ஈனும் வேர்ச்சொல். இது முல்-முன்; முல்+து-முது-முது+ அல்-முதல்; முல்-முள்-முள்+து-முட்டு -மொட்டு; முல்+கு=முகு-முகை; முகு+இல்-முகில்-முகிழ்; முகு-முகன். முகனை-மொகனை; முகு-முக்கு; முகு-முகுடி-முகடி=முன்தோன்றிய மூதேவி; முகு-முகுடு; முகடு-மோடு; முகட்டெருமை-மோட்டெருமை; முகு-முகுப்பு-முகப்பு என்றெல்லாம் முதன்மையானது; தலைமையானது என்ற பொருள்தரும் பலப் பல சொற்களை உருவாக்கும்.

corn என்ற ஆங்கிலச் சொல் கொம்பினைக் குறிக்கும். corn இதுதான் பிறகு கொம்புபோல் முன்துருத்திக் கொண்டிருக்கும் பகுதியைக் குறிக்க corner என்ற சொல்லையும் அளித்தது. தமிழின் முக்குச் சொல்லும் தெருவின் முன்துருத்திய மூலைப்பகுதியையே குறிக்கும்.

இல்லின் முன் உள்ள பகுதி முன்+இல்=முன்னில் - முன்றில் என்று கூறப்படும். இந்த முன்றில்-முற்றில்- முற்றம் என்றும் தமிழில் வழங்கப்படும். முன்றில் - முற்றம் ஆகிய இவ் வீட்டுப் பகுதியை 'முகப்பு' என்றும் சொல்கி றோம். இங்கு முகப்பு முன்உள்ளது என்ற பொருளில் மட்டும் வழங்கப் படு கிறது. வீட்டிற்கும் வாய் உண்டு. அது, இல்வாய்; வாய்+இல்-வாயில் என்றெல் லாம் அழைக்கப் பெறுவதுண்டு.ஆனால் வீட்டு முகப்பு என்பது வீட்டின் முன் பகுதி மட்டுமே சுட்டும் தனிச் சொல்.

பருவம் வந்த பெண்ணின் உறுப்புமாற்றம் அகநானூற்றுப்பாடல் (பா:7) ஒன்றில் சொல்லப்படும். ''மார்பு முகம் செய்தன'' என்பது அப்பாடலின் தொடரில் ஒன்று. இங்கு மார்பின் முன்பகுதியே 'முகம்' எனப்படுதல் காண்க. கோயில்களில் முன்னே உள்ள மண்டபம் முகமண்டபம் என்று அழைக்கப்படுகிறதல்லவா? அந்த முக மண்டபம் முன்மண்டபத்தைத் தானே குறிக்கிறது. யாப்பில்-செய்யுளில் 'மோனை' என்ற சொல் உள்ளதே அது முதல் ஒத்து வருதலைக் குறிப்பது. இம் 'மோனை'ச் சொல்லானது முக- முகனை-மொகனை-மோனை என்று 'முகன்' வழி வந்தது. இங்கு வந்த 'முகன்' முன்மைப் பொருளதல்லவா?

எனவே, தமிழில் 'முகம்' என்பது 'துளை' என்ற பொருளில் தோன்றிய சொல் அன்று என்பதை முதற்கண் உணர்தல் வேண்டும். முகம் ஆகிய உடற்பகுதி மாந்தனுக்கு முகப்பான பகுதி அதாவது முதன்மையான பகுதி என்ற பொருளில் தமிழில் தோன்றியது என்பதே பொருத்தமாகத் தெரிகிறது. முகம் சொல் பெற்றிருக்கும் பிறபிற பொருள்களெல்லாம் உடல் உறுப்பு குறித்ததன்பின் தோன்றிய அதன்வழிப் பொருள்களே. இடம் என்ற பொருளை இம்முகம் குறித்ததைத் திரு.வீ இராம மூர்த்தி குறித்துள்ளார். உடல் உறுப்பு குறித்த சொற்களாகிய பல இடப்பொரு ளைக் குறிப்பதை இவ்விடத்துச் சுட்டலாம். கண், கால், தலை, இடை, வாய் ஆகிய சொற்களெல்லாம் உடல் உறுப்புகளைக் குறிப்பதுடன் இடப் பொருள்களைக் குறிக்கும் ஏழாம் வேற் றுமை உருபாகவும் வருவதை எண்ணுக.

'கல்' (கல்லு), தோண்டுதற் பொருள் தரும் ஓர் தமிழ் வேர். இது, கல்-கலம்; மரக்கலம்; மட்கலம்; கல்-கல்லுவம்-கலுவம்; கல்-கன்-கன்னம் போல் பலப்பல துளைப் பொருட்சொற் களை உருவாக்கும். ஆதலின், மு-கன் (முன் உள்ள துளை அதாவது வாய்) என மானியர் பிரித்தது சரியெனக் கொண்டாலும் அதன் துளை உணர்த் தும் 'கன்' ஓர் தமிழ்வேர் வழியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தால் மலேசியாவில் பல இடங்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

நாடு முழுமையிலும் பல்வேறு இடங்களில் மலேசியத் தமிழ் நெறிக் கழகம் திருக்குறள் தமிழ் நெறி வாழ்வியல் வகுப்புகளை நடத்தி வருகின்றது. பத்துமலை, தெலுக் பங்க்லிமா காராங், காப்பார், கோலா குபு பாரு, பாடாங் செராய் , கூலிம் பாய பெசார், சிறி கூடாய் சொகூர், லெமா கெடாய் சொகூர், செமினி, ஊத்தான் மெலிந்தாங் பேராக் முதலான இடங்களில் நடக்கும் திருக்குறள் வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்பர்களை வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : தமிழ்வாணன் 0164171441,
நிலவன் : 0133185423
கதிரவன் :0163559550,
கன்னித்தமிழன் : 0167316944