தொடர்பாளர்கள்

Wednesday, March 2, 2011

முகம் தமிழே - முனைவர் கு. அரசேந்திரன்

முகம் தமிழே - முனைவர் கு. அரசேந்திரன்

'முகம்' சொல்லின் மூலத்தைத் தமிழில் காணமுடிகிறதா அல்லது வட மொழியில் காணமுடிகிறதா என்பதே இங்கு ஆய்வு. உடம்பின் ஓர் பகுதியைச் சுட்டும் face என்னும் 'முகம்' ஆகிய இவ்வுறுப்பு எதனால் இப்பெயரைப் பெற்றது? சமற்கிருத வேர்ச்சொல் ஆய்வாளர்களில் முன்னவர் - மூலவர் மானியர் வில்லியம்சு ஆவார். அவர், இச்சொல் வரலாற்றை எப்படி விளக்கு கிறார்? 'mukha' என்னும் ஒலிப்பில் இச்சொல்லை வடமொழியில் ஒலிக்க வேண்டும். அவர் இச்சொல்லிற்கு உரைக்கும் முதற் பொருள் mouth; இரண்டாவது பொருள் face .

மானியர் வில்லியம்சு 'mukha' ஆகிய சொல்லிற்கு வாய் (mouth) ஆகிய பொருளை முதற்பொருளாகக் கூறுவதிலிருந்து நாம் எதைத் தெரிந்து கொள்கிறோம்! சமற்கிருதத்தில் 'முக' என்பதற்கு முதற்பொருள் 'வாய்' என்பதுதானே!

வாய் என்ற பொருளை அச் சொல்லிற்கு மானியர் வில்லியம்சு எதன் அடிப்படையில் கண்டுபிடித்தார்? mukha ஆகிய சொல்லை அவர் mukhan என்ற வடிவ வழியது என்று உணர்ந்தார். அதனால் அவரால் 'வாய்' என்ற பொருளைக் கூறமுடிந்தது. 'மு' என்பதை ஓர் முன்னொட்டாகக் கொண்டு கன் - (கன்னம் = துளை) என்பதற்குத் துளை என்றொரு பொருள் இருப்பது கண்டு முன்னுள்ள துளை அதாவது 'வாய்' என அவர் எண்ணிப் பார்த்திருக்கிறார். இந்த எண்ண ஓட்டமே அவர் முகத்திற்கு 'வாய்' என்ற பொருள் தந்ததற்கு அடிப்படை. 'keras' ஆகிய கிரேக்கச் சொல் 'கொம்பு' என்னும் பொருளது. இது இலத்தீனில் ceras எனக் க-ச திரிபில் திரியும். கொம்பைக் குறித்த இக் கிரேக்கச் சொல்தான் வடமொழியில் பிறகு சிரசு எனக் கொம்புள்ள இடத்தை அதாவது தலையைக் குறித்தது. இதைப் போலவே மு-கன் என்பது முதலில் வாயைக் குறித்துப் பின் வாயுள்ள இடத் தைக் குறித்திருக்கலாம். இவை நிற்க.

தமிழில், முகம் எவ்வாறு பிறந்தி ருக்கின்றது என்பதை இனி எண்ண வேண்டும். 'முகம்' என்ற சொல் முதலில் face ஆகிய உடற்பகுதியைக் குறிக்கத் தோன்றவில்லை. அது, முன் பகுதி, முதற்பகுதி என்ற பொருளி லேயே முதற்கண் கருக்கொண்டு உருக்கொண்டது.

'முல்' என்பது முதன்மை குறிக் கும் சொற்கள் பல ஈனும் வேர்ச்சொல். இது முல்-முன்; முல்+து-முது-முது+ அல்-முதல்; முல்-முள்-முள்+து-முட்டு -மொட்டு; முல்+கு=முகு-முகை; முகு+இல்-முகில்-முகிழ்; முகு-முகன். முகனை-மொகனை; முகு-முக்கு; முகு-முகுடி-முகடி=முன்தோன்றிய மூதேவி; முகு-முகுடு; முகடு-மோடு; முகட்டெருமை-மோட்டெருமை; முகு-முகுப்பு-முகப்பு என்றெல்லாம் முதன்மையானது; தலைமையானது என்ற பொருள்தரும் பலப் பல சொற்களை உருவாக்கும்.

corn என்ற ஆங்கிலச் சொல் கொம்பினைக் குறிக்கும். corn இதுதான் பிறகு கொம்புபோல் முன்துருத்திக் கொண்டிருக்கும் பகுதியைக் குறிக்க corner என்ற சொல்லையும் அளித்தது. தமிழின் முக்குச் சொல்லும் தெருவின் முன்துருத்திய மூலைப்பகுதியையே குறிக்கும்.

இல்லின் முன் உள்ள பகுதி முன்+இல்=முன்னில் - முன்றில் என்று கூறப்படும். இந்த முன்றில்-முற்றில்- முற்றம் என்றும் தமிழில் வழங்கப்படும். முன்றில் - முற்றம் ஆகிய இவ் வீட்டுப் பகுதியை 'முகப்பு' என்றும் சொல்கி றோம். இங்கு முகப்பு முன்உள்ளது என்ற பொருளில் மட்டும் வழங்கப் படு கிறது. வீட்டிற்கும் வாய் உண்டு. அது, இல்வாய்; வாய்+இல்-வாயில் என்றெல் லாம் அழைக்கப் பெறுவதுண்டு.ஆனால் வீட்டு முகப்பு என்பது வீட்டின் முன் பகுதி மட்டுமே சுட்டும் தனிச் சொல்.

பருவம் வந்த பெண்ணின் உறுப்புமாற்றம் அகநானூற்றுப்பாடல் (பா:7) ஒன்றில் சொல்லப்படும். ''மார்பு முகம் செய்தன'' என்பது அப்பாடலின் தொடரில் ஒன்று. இங்கு மார்பின் முன்பகுதியே 'முகம்' எனப்படுதல் காண்க. கோயில்களில் முன்னே உள்ள மண்டபம் முகமண்டபம் என்று அழைக்கப்படுகிறதல்லவா? அந்த முக மண்டபம் முன்மண்டபத்தைத் தானே குறிக்கிறது. யாப்பில்-செய்யுளில் 'மோனை' என்ற சொல் உள்ளதே அது முதல் ஒத்து வருதலைக் குறிப்பது. இம் 'மோனை'ச் சொல்லானது முக- முகனை-மொகனை-மோனை என்று 'முகன்' வழி வந்தது. இங்கு வந்த 'முகன்' முன்மைப் பொருளதல்லவா?

எனவே, தமிழில் 'முகம்' என்பது 'துளை' என்ற பொருளில் தோன்றிய சொல் அன்று என்பதை முதற்கண் உணர்தல் வேண்டும். முகம் ஆகிய உடற்பகுதி மாந்தனுக்கு முகப்பான பகுதி அதாவது முதன்மையான பகுதி என்ற பொருளில் தமிழில் தோன்றியது என்பதே பொருத்தமாகத் தெரிகிறது. முகம் சொல் பெற்றிருக்கும் பிறபிற பொருள்களெல்லாம் உடல் உறுப்பு குறித்ததன்பின் தோன்றிய அதன்வழிப் பொருள்களே. இடம் என்ற பொருளை இம்முகம் குறித்ததைத் திரு.வீ இராம மூர்த்தி குறித்துள்ளார். உடல் உறுப்பு குறித்த சொற்களாகிய பல இடப்பொரு ளைக் குறிப்பதை இவ்விடத்துச் சுட்டலாம். கண், கால், தலை, இடை, வாய் ஆகிய சொற்களெல்லாம் உடல் உறுப்புகளைக் குறிப்பதுடன் இடப் பொருள்களைக் குறிக்கும் ஏழாம் வேற் றுமை உருபாகவும் வருவதை எண்ணுக.

'கல்' (கல்லு), தோண்டுதற் பொருள் தரும் ஓர் தமிழ் வேர். இது, கல்-கலம்; மரக்கலம்; மட்கலம்; கல்-கல்லுவம்-கலுவம்; கல்-கன்-கன்னம் போல் பலப்பல துளைப் பொருட்சொற் களை உருவாக்கும். ஆதலின், மு-கன் (முன் உள்ள துளை அதாவது வாய்) என மானியர் பிரித்தது சரியெனக் கொண்டாலும் அதன் துளை உணர்த் தும் 'கன்' ஓர் தமிழ்வேர் வழியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment