1943 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களை அலகாபாத்தில் நடந்த ஓர் இலக்கிய மாநாட்டிற்கு பேச அழைத்திருந்தனர். அவ்வழைப்பினை ஏற்றுக் கொண்ட காந்தி மாநாட்டில் பேசச் சென்றார்.
மாநாட்டில் பேசும் போது காந்தி அவர்கள் வருகையாளர்களைப் பார்த்து பின்வருமாறு கேட்டார்.
"அன்பர்களே இங்கு பல்வேறு நிலைகளில் அறிவு பெற்றோர் வந்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் எனப் பல தரப்பட்டாரும் இங்கு வந்துள்ளீர்கள். உங்களோடு பேசுவது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. இந்தச் சூழ்நிலையில் நான் உங்களிடம் ஒரு வினாவினைத் தொடுக்க விரும்புகின்றேன். இந்த வினாவிற்கு நீங்கள் ஏற்புடைய விடையளிப்பீர்களேயானால் நான் அளவிடற்கரிய மகிழ்ச்சி அடைவேன்.
உங்களில் எத்தனை பேர் திருக்குறளைப் படித்திருக்கிறீர்கள்? எத்தனை பேர் திருக்குறளை ஆய்வு செய்திருக்கிறீர்கள்? எனக்குத் தெரியப் படுத்துங்கள். உங்களில் எத்தனைப் பேருக்குத் திருக்குறளைத் தெரியும்?
அந்த அரங்கம் ஒரே அமைதியில் ஆழ்ந்தது. ஒருவர் கூட எழுந்து விடைகூற முன் வரவில்லை.
ஒருவர் கூட இதற்கு உரிய விடையைக் கூற முன் வராதது கண்டு நான் மிகவும் வருந்துகின்றேன். திருக்குறளை அறியாத நீங்கள் உங்களைக் கல்வியாளர்கள் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள் ஆனால் ஒரு போதும் இந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உங்களை இலக்கிய வாதிகள் என்று கூறிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நான் கருதவில்லை. திருக்குறளை அறிந்திருப்பவர்களையே நான் உண்மையான இலக்கியவாதிகளாக நான் கருதுவேன் என்றாராம்.
காந்தியும் உருசிய எழுத்தாளாரான லியோ தால்சுதாயின் திருக்குறள் பற்றினை அறிந்தே இந்த உணர்வுக்கு வந்தார் என்று அறியமுடிகின்றது. நான் மீண்டு பிறவி எடுத்தால் திருக்குறளைப் படிப்பதற்காக ஒரு தமிழனாகப் பிறக்க விரும்புகின்றேன் என்று காந்தி கூறியுள்ளார்.
காந்தியின் இந்தக் கூற்றுகள் தமிழர்க்கு திருக்குறளைப் புரட்டிப் பார்க்க ஆராய அதன் படி வாழ ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தட்டும்.
திருமாவளவன்
No comments:
Post a Comment