தொடர்பாளர்கள்

Monday, April 18, 2011

"ஈழத் தமிழருக்குக் கருணாநிதி இழைத்தத் துரோகம்” - பழ. நெடுமாறன் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகள்

"ஈழத் தமிழருக்குக் கருணாநிதி இழைத்தத் துரோகம்” - பழ. நெடுமாறன் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகள்




குட்டிமணியைப் பிடித்துக் கொடுத்தவர்

டெலோ இயக்கத் தலைவர்களான க. ஜெகன்னாதன், (எ) ஜெகன், செ. யோகச்சந்திரன் (எ) குட்டிமணி ஆகிய இருவருக்கும் சிங்கள நீதிமன்றம் மரணதண்டனையை விதித்த செய்தி தமிழகப் பத்திரிகைகளில் பரபரப்புடன் வெளியாயிற்று. அச்செய்தியை படித்தவுடன் அளவற்ற வேதனையில் ஆழ்ந்தேன்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8-9-82 அன்று இது குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வருவதென முடிவுசெய்தேன். உடனடியாக அன்று காலையிலேயே தமிழகச் சட்டமன்ற செயலாளர் அலுவலகத்திற்குச் சென்று கீழ்க்கண்ட தீர்மானத்தைக் கொடுத்தேன். இத்தீர்மானத்தில் என்னுடன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் துணைத் தலைவர் கருப்பையா, மார்க்சிஸ்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.உமாநாத், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் என்.எஸ்.வி. சித்தன் ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர். தீர்மான விவரம் வருமாறு:

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 187ன் கீழ் கீழ்க்கண்ட தீர்மானத்திற்கு முன்னறிவிப்பு கொடுக்கிறோம்.

"இலங்கையில் தமிழர் உரிமை காக்கப் போராடிய திரு. செ. யோகச்சந்திரன் என்ற குட்டிமணி, திரு. க. ஜெகநாதன் ஆகிய இரு தமிழ் இளைஞர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்யத் தலையிட்டு ஆவன செய்யும்படி இந்தியத் தலைமை அமைச்சருக்கு சிபாரிசு செய்யும்படி தமிழக அரசை இப்பேரவை வேண்டிக்கொள்கிறது.

பிரச்சனையின் முக்கியத்துவம் குறித்து விதியில் இருந்து விலக்குக் கொடுத்து இதனை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.




அலுவலகத்தில் கொடுத்துவிட்டு உடனடியாகப் பேரவைத் தலைவர் மாண்புமிகு க. இராசாராம் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். பிரச்சினையின் அவசரம் கருதி இன்றைக்கே இத்தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென வேண்டிக்கொண்டேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெறுமாறு அறிவுரை கூறினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அனைத்துக்கட்சித் தலைவர்களிடம் ஏற்கனவே பேசிவிட்டேன் என்றும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் பேசியபோது சட்டமன்றத்திற்கு வந்த பிறகு சந்திக்குமாறு கூறியிருக்கிறார் என்பதையும் தெரிவித்தேன்.

காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சட்டமன்ற வளாகத்திற்கு வந்தார். அவரது அறையில் அவரைச் சந்தித்துத் தீர்மான விவரத்தையும், அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஆதரவு தருவதாகக் கூறியிருப்பதையும் தெரிவித்தேன். எதிர்க்கட்சித் தலைவர் என்ன கூறினார் என்று கேட்டார். அவரும் ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் என பதிலளித்தேன்.

"ஆதரவு தெரிவித்துப் பேசுவதோடு நின்றுவிடாமல் பிரச்சினைக்குரியவாறு எதாவது பேசினால் நான் பதில் சொல்லவேண்டியிருக்கும்'' என முதலமைச்சர் கூறினார்.

"இதில் பிரச்சினைக்கு இடமேயில்லை. இரு இளைஞர்களின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்பதுதான் அனைவரின் நோக்கம். எனவே வேறு விசயங்களுக்கு இடமில்லை'' என்று கூறினேன்.

""இல்லை இல்லை. கலைஞரைப்பற்றி உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். ஏதாவது வம்பு இழுக்கும் வகையில் அவர் பேசுவார். அப்படிப் பேசினால் நான் பதில் கூறவேண்டியிருக்கும்'' என முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கூறியபோது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

முதலமைச்சர் மேசையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோப்பை எடுத்து என்னிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கும்படி கூறினார்.

அவ்விதமே அந்தக் கோப்பைப் புரட்டிப் பார்த்தேன். 1973ஆம் ஆண்டில் குட்டிமணியை தமிழகக் காவல்துறை கைதுசெய்து காவலில் வைத்தபோது அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டு சிங்களக் காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னைக்கு வந்து வற்புறுத்தியது, இது தொடர்பாக தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதங்கள், அங்கிருந்து வந்த பதில் போன்ற முக்கியமான ஆவணங்கள் அந்தக்கோப்பில் இருந்தன. இறுதியாக குட்டிமணியை சிங்களக் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் படி முதலமைச்சர் கருணாநிதி எழுதியிருந்த குறிப்பையும் நான் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

"அவர் தேவையில்லாமல் பேசுவாரேயானால் இந்தக் கோப்பை நான் அப்படியே சட்டமன்றத்தில் வாசிக்க வேண்டி நேரிடும்'' என எம்.ஜி.ஆர். கூறினார்.

"அதற்கு அவசியம் இருக்காது. நான் கலை ஞரிடம் பேசுகிறேன்'' என்று கூறிவிட்டு விடைபெற்று எழுந்தேன். அவ்வாறே க. அன்பழகன் அவர்கள் மூலம் சர்ச்சைக்குரிய எதையும் பேசவேண்டாம் என்ற செய்தியை மு. கருணாநிதிக்குத் தெரிவித்தேன்.

அன்று காலை 11 மணிக்கு சட்டமன்றத்தில் எனது தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து நான் பேசியதைத் தொடர்ந்து அனைத்துக்கட்சித் தலைவர்களும் வழிமொழிந்து பேசினார்கள். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.கருணாநிதி அவர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். பேச்சின் இறுதிக்கட்டத்தில் "இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிக்கவேண்டும் என்று நாம் கூறும் இந்த வேளையில் தமிழ்நாட்டிலும் போராளிகளைச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது'' என்று கூறி தன் பேச்சை முடித்தார்.

அதாவது பாண்டி பசார் துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியையொட்டி பிரபாகரன், உமாமகேசுவரன் உட்பட சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைதான் தனது பேச்சில் அவர் சுட்டிக்காட்டினார்.

பதில் கூற எழுந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் எனது தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவு அளித்ததோடு மத்திய அரசுக்கும், தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படும் எனத் தெரிவித்தார். பிறகு "எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுக்குப் பதில் கூறாமல் போனால் வரலாற்று நிகழ்ச்சிகளை மறைப்பதாகிவிடும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சில ஈழ இளைஞர்களைக் கைது செய்து சிறையில் வைத்திருக்கிறோம். அவர்கள் மீதான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆனால் அந்த இளைஞர்களைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சிங்கள அரசு வற்புறுத்தியபோது நான் அதை ஏற்கவில்லை. ஒருபோதும் ஏற்கமாட்டேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த போது அவர் என்ன செய்தார் என்பதற்கு இந்த கோப்பு சாட்சியமாக விளங்குகிறது என்று கூறிவிட்டு. அந்தக் கோப்பிலிருந்த அனைத்தையும் படித்துக் காட்டினார். சட்டமன்றமே திடுக்கிட்டுப்போய்விட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பதில்கூற வழியில்லாமல் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்.

அவைத் தலைவரான மாண்புமிகு இராசாராம் அவர்கள் உடனடியாக இந்தத் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவித்து உடனே மன்றத்தை ஒத்திவைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அவர் உடனடியாக அவ்வாறு செய்யாமலிருந்தால் தி.மு.க.வினர் கூச்சல் குழப்பம் எழுப்பியிருக்கக் கூடும்.

அன்று குட்டிமணியை சிங்களக் காவல்துறை அதிகாரிகளிடம் கருணாநிதி ஒப்படைத்ததன் விளைவாக 1983 ஆம் ஆண்டில் சிங்களச் சிறையில் காடையர்களால் கொடூரமான முறையில் குட்டிமணி படுகொலை செய்யப்பட்டார். சிறந்த போராளியான குட்டிமணியின் சாவுக்குக் கருணாநிதியே பொறுப்பாளியாவார்.


போராளிகள் ஒன்றுபடுவதைக் கெடுத்தவர்

1984ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழவிடுதலைப் போராளிகள் அமைப்புகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இக்கருத்தினைச் செயல்படுத்துவதற்காக போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பினார். எம்.ஜி.ஆர். அவர்களின் இந்த அழைப்பை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆரின் அழைப்பு விடுக்கப்பட்ட மறுநாளே இவரிடமிருந்து மற்றொரு அழைப்பு அனைத்துப் போராளிகளின் இயக்கத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது. போராளிகளின் தலைவர்களைச் சந்திக்க எம்.ஜி.ஆர் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளில் தம்மைச் சந்திக்குமாறு கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பினையும் தமிழக பத்திரிகைகள் பரபரப்புடன் வெளியிட்டன.

தமிழீழ விடுதலைப் போராளிகளின் இயக்கங்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் போட்டா போட்டியில் இறங்கியது, போராளிகளுக்கு சிக்கலையும் சங்கடத்தையும் ஏற்படுத்திற்று. யார் அழைப்பை ஏற்பது? யாரின் அழைப்பை ஏற்க மறுப்பது? என்பது குறித்து முடிவு செய்ய இயலாத நிலைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தமிழக அரசியலில் எவ்விதத்திலும் தலையிடுவதில்லை என்பது அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. தமிழக அரசியலில் எப்பக்கமும் சாராமல் நடுநிலை வகித்து அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெறுவதே புலிகளின் கொள்கையாக இருந்தது. எனவே இந்த நிலைமையில் இரு தலைவர்களின் அழைப்பினை ஏற்பதா இல்லையா என்பது குறித்து பிரபாகரன் இயக்கத்தின் பிற தோழர்களுடன் கலந்தாலோசித்தார். கலைஞரின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தால் எம்.ஜி.ஆரைப் பகைக்க நேரிடும். எம்.ஜி.ஆரைச் சந்தித்தால் கலைஞரைப் பகைக்க நேரிடும். இந்த இருதலைவர்களினதும் மற்றும் அவர்கள் தலைமை தாங்கும் கட்சிகளது ஆதரவும் அனுதாபமும் தங்களுக்கு இன்றியமையாதது எனவே பக்கச் சார்பு நிலையெடுத்து யாரையும் பகைத்துக்கொள்வது உசிதமற்றது என பிரபாகரன் முடிவு செய்தார்.

ஆனால் கருணாநிதி விடுத்த அழைப்பினை ஏற்று டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் ஆகிய இயக்கத் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். ஆனால் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனும், பிளாட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரனும் அவரைச் சந்திக்கவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் தலைவர் பத்மநாபா, ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் ஆகியோரை தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்திக்க அழைத்துவந்து புகைப்படம் எடுக்க வைத்ததில் சிறீ சபாரத்தினத்தின் பங்கு மிகப்பெரியதாகும். இந்தப் படத்தை கருணாநிதி அனைத்துப் பத்திரிகை களிலும் வெளியிடவைத்தார். இதன் மூலம் ஈழத்தமிழ் போராளிகள் தனது பக்க மும் இருக்கிறார்கள் என் பதை நிலைநிறுத்த முயன்றார்.

போராளி இயக்கத் தலைவர்களை தான் சந்திப் பதற்குக் குறித்த நாளிற்கு முதல் நாளிலேயே கருணா நிதி மூன்று போராளி இயக்கத் தலைவர்களைச் சந்தித்து ஒரு அரசியல் நாடகத்தை மேடையில் ஏற்றி அதனை ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது கண்டு எம்.ஜி.ஆர். கடுங்கோபம் அடைந்தார். நல்ல நோக்கத்துடன் தான் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சியை தன்னல அரசியல் நோக்கத்திற்காக கருணாநிதி குழப்ப முயல்வதைக் கண்டு அவர் சினமடைந்தது இயற்கையே.

இதற்குப் பின்னர் தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான அலெக்சாண்டர் புலிகளின் அலுவலகத்திற்குச் சென்று பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேசினார். தனது உன்னதமான முயற்சியை சீர்குலைப்பதற்காக கருணாநிதி விரித்த வலையில் பிற போராளி இயக்கத் தலைவர்கள் சிக்கியது குறித்து முதலமைச்சர் பெரும் வேதனை அடைந்திருப்பதாகவும், புலிகள் இயக்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேச அவர் ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறினார்.

அலெக்சாண்டர் கூறிய விவரங்களை பாலசிங்கம் பிரபாகரன் அவர்களுக்குத் தெரிவித்தார். இந்த அழைப்பையும் ஏற்க மறுப்பது நல்லதல்ல என பிரபாகரன் முடிவுசெய்தார். ஆனாலும் பிரபாகரன் சார்பில் பாலசிங்கம், இளங்குமரன், கர்னல் சங்கர்,

மு. நித்தியானந்தன் ஆகியோர் முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசுவது என்றும் பின்னர் பிரபாகரன் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதற்கிணங்க பாலசிங்கம் தலைமையில் புலிகளின் குழுவினர் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசினர். புலிகளின் கோட்பாடு, செயற்பாடு ஆகியவை குறித்து எம்.ஜி.ஆர். எழுப்பிய கேள்விகளுக்கு பாலசிங்கம் திருப்திகரமான பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரத்திற்குமேல் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் இறுதியில் புலிகள் இயக்கத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. அதன் விளைவாக புலிகள் இயக்கத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்க அவர் முன்வந்தார். பிரபாகரனைச் சந்திக்கவும் அவர் விருப்பம் தெரிவித்தார். அந்தக் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். அளிக்க முன்வந்த இரண்டு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். பணப்பற்றாக் குறையினால் பெரிதும் அவதிப்பட்டுக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எம்.ஜி.ஆரின் உதவி பேருதவியாகும். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான புலிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கவும் அவர்களுக்கு ஆயுதங்கள் வாங்கவும் இந்த உதவி பெரிதும் பயன்பட்டது. புலிகள் இயக்கம் வலிமை வாய்ந்த இயக்கமாக உருவெடுத்ததற்கும் இந்த உதவியே அடிப்படை ஆகும்.

தன்னைச் சந்தித்த 3 போராளி இயக்கத் தலைவர்களோடு புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்ட கருணாநிதி அவர்களுக்கு உதவவோ, ஒற்றுமைப் படுத்தவோ முன்வரவில்லை. அவர்கள் எம்.ஜி.ஆரையும் சந்திக்க இயலாதபடி செய்ததுதான் கருணாநிதியின் சாதனையாகும்.


உடன்பாட்டிற்கு ஆதரவு

1987ஆம் ஆண்டு சூலை 29ஆம் தேதி இந்திய பிரதமர் இராஜீவ் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா ஆகியோர் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட உடன்பாடு அடிப்படையிலேயே தவறானதாகும். ஈழத்தமிழர் பிரதிநிதிகளும் இலங்கை அரசப் பிரதிநிதிகளும் செய்துகொள்ளவேண்டிய உடன்பாட்டில் இந்தியா நடுவராக விளங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவே ஒரு தரப்பாக மாறி இலங்கை அரசுடன் உடன்பாடு செய்தது என்பது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

ஆனால் இந்த உடன்பாட்டினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் - நாயகமான அ. அமிர்தலிங்கம் வரவேற்று அறிக்கை வெளியிட்டதைக்கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக அவரைச் சந்தித்து இந்த உடன்பாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகள் எதுவும் காணப்படாதபோது இந்த உடன்பாட்டை ஆதரித்தது ஏன்? என்று கேட்டேன். அப்போது அவர் சொன்ன பதில் என்னைத் திடுக்கிட வைத்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியபடி தான் அறிக்கை வெளியிட்டதாக அவர் கூறினார். மேலும் அத்தகையை அறிக்கையை வெளியிட்டதற்கான பின்னணியையும் அவர் விளக்கிக் கூறினார்.

இந்த உடன்பாட்டை ஆதரித்து அறிக்கை வெளியிடும்படி இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவ்வாறு தான் அறிக்கை வெளியிட்டால் தி.மு.க. தலைவர் கருணாநிதி தன்னைக் கண்டித்தால் தன் நிலைமை என்ன ஆகும் என தான் மறுத்தபோது அந்த அதிகாரிகள் தி.மு.க. தலைவர் ஒருபோதும் அவரைக் கண்டித்து அறிக்கை கொடுக்கமாட்டார் என உறுதிகூறினர். அவர்கள் கூறியதில் அமிர்தலிங்கத்திற்கு நம்பிக்கையில்லை எனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது கருணாநிதி அவரிடம் பின்வருமாறு கூறினார்.

"தலைவர் செல்வா காலத்திலிருந்து நீங்களும் உங்களைப் போன்ற பல தலைவர்களும் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற தியாகம் செய்திருக்கிறீர்கள். ஆனால் நேற்றுப் பிறந்த பிரபாகரன் உங்களை யெல்லாம் புறந்தள்ளி தன்னை முன்நிறுத்தப் பார்க்கிறான். இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்திய இராணுவம் இலங்கை சென்றுவிட்டது. இன்னும் ஒரு வார காலத்தில் பிரபாகரனுக்கு சரியான பாடத்தைப் புகட்டும். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். இந்த உடன்பாட்டை வரவேற்று அறிக்கைக் கொடுங்கள்' என்று கருணாநிதி கூறினார். அதன்பிறகே அமிர்தலிங்கம் அத்தகைய அறிக்கையைக் கொடுத்தார்.

இராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்பாட்டை இதுவரை தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, அவரது கட்சியின் செயற்குழுவோ, பொதுக்குழுவோ கண்டிக்க வில்லை என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த உடன்பாடு செய்வதற்கு முன்னா லேயே இந்திய உளவுத்துறை உயர் அதிகாரிகள் கருணாநிதியைச் சந்தித்து அவரது சம்மதத்தைப் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் உண்மை.


இராஜீவின் கையாள்

இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களைத் தேடித் தேடி அழிப்பு வேட்டை நடத்திய காலத்தில் அதிலிருந்து தப்பி பாலசிங்கமும் அவருடைய துணைவியாரும் பெங்களூரில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த னர். அப்போது 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து ஒரு அவசரச் செய்தி பாலசிங்கம் அவர்களுக்குக் கிடைத்தது. தமிழ் நாட்டில் அப்போது இரகசியமாக இயங்கிக்கொண்டி ருந்த புலிகள் மூலமாக இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாலசிங்கத்தை சென்னையில் தனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ சந்திக்க கருணாநிதி விரும்பவில்லை. சேலத்தில் சந்திக்கும்படி கூறினார். அதற்கிணங்க சேலத்தில் ஒரு விடுதியில் நள்ளிரவில் யாரும் அறியாதவண்ணம் மிக இரகசிய மாக நடந்த இந்தச் சந்திப்பில் கருணாநிதியுடன் அவருடைய மருமகன் முரசொலி மாறனும் உடனிருந்தார்.

தமிழீழத்தில் நிலவும் போர் சூழ்நிலை குறித்தும் விடுதலைப் புலிகளின் தலைமை எந்த நேரத்திலும் அழிக்கப்படும் ஆபத்து இருப்பது குறித்தும் தனக்கு மிகுந்த கவலையும் வேதனையும் ஏற்பட்டிருப்பதாகக் கருணாநிதி கூறினார். வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்துடன் மோதி அழிந்து போவதைவிட ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடைவது நல்லது என்றும் தமிழீழத் தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு மாகாண அரசுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதே சிறந்ததாகும் என்றும் அறிவுரை கூறினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. "தி.மு.க.வைத் தடைசெய்ய இந்திய அரசு சட்டம் கொண்டு வந்தபோது இலட்சியமா? கட்சியா? என்ற கேள்வி எழுந்தது அப்போது கட்சியைக் காப்பாற்றுவது என முடிவு செய்து திராவிடத் தனிநாடு கோரிக்கையை நாங்கள் கைவிட்டதால்தான் இன்றைக்கு தமிழகத்தின் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்கும்படி'' கூறினார்.

அவரது இந்தச் சந்திப்பின் உள்நோக்கம் என்ன என்பது பாலசிங்கத்திற்கும் அவருடன் சென்றிருந்த புலிகளுக்கும் புரிந்தது. பாலசிங்கத்துடன் வந்திருந்த மூத்த புலித் தோழர் ஒருவர் இலட்சியத்திற்காகத்தான் இயக்கம் கண்டோம். இலட்சியத்தையே கைவிட்டால் இயக்கம் எதற்கு? இத்தனை பேர் உயிர்த்தியாகம் செய்தது எதற்காக? என்று கேட்டார். அவர் இவ்வாறு கூறியதும் கருணாநிதி கடும் கோபமடைந்தார்.

அப்போது பாலசிங்கம் குறுக்கிட்டுப் பின்வருமாறு கூறினார்:

"விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போரியல் மரபில் சரணாகதி என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரபாகரனும் அவரது தோழர்களும் உன்னத இலட்சியத் திற்காக உயிரைத் துறக்கவும் தயாராக இருப்பார்களே யன்றி எந்தச் சூழ்நிலையிலும் எதற்காகவும் சரணடைந்து இழிவைத் தேடிக்கொள்ளமாட்டார்கள். தமிழீழ சுதந்திரப் போராளிகளாக விளங்கும் விடுதலைப் புலிகள் அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்கள். இலட்சிய உறுதி கொண்டவர்கள். எத்தகைய துன்பங்களையும் சுமந்து நின்று போராடும் திராணி படைத்தவர்கள். இந்திய இராணுவத்திற்கெதிராக நீண்ட கால கொரில்லாப் போரை நடத்துவதற்கு அவர்கள் உறுதிபூண்டு நிற்கிறார்கள். போர் நிறுத்தம் செய்து சமாதானப் பேச்சுக்களை நடத்தி இந்திய அரசுடன் சமரச இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கிறது. ஆனால் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி டெல்லியில் பிரபாகரனுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப வட-கிழக்கில் ஒரு இடைக்கால அரசு நிறுவப்பட்டால் நாங்களும் எமது ஆயுதங்களை ஒப்படைத்து இந்தியாவுடன் ஒத்துழைக்க தயாராக இருப்போம்'' என்று அவருக்கு கூறினார்.

ஆனால் முதல்வர் கருணாநிதி இதை ஏற்கவில்லை. இருந்தாலும் எமது நிலைப்பாட்டை பிரதமர் இராஜிவ் காந்திக்குத் தெரிவிப்பதாகக் கூறிச் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

இராஜீவ் காந்தியின் சார்பில் புலிகளிடம்பேசி அவர்களைச் சரணடைய வைப்பதுதான் முதல்வர் கருணாநிதியின் உள்நோக்கமாக இருந்தது. புலிகள் தரப்பில் உள்ள நியாயத்தையோ அல்லது இந்திய இராணுவம் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பது குறித்தோ பிரதமர் ராஜீவிடம் தனது கண்டனத்தைத் தெரிவிக்கவோ அவர் ஒருபோதும் தயாராக இல்லை என்பதை இந்தச் சந்திப்பு அம்பலப்படுத்திவிட்டது.


வாய்ப்பைக் கெடுத்தார்

1989ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி பதவி விலகி வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

இலங்கையில் இந்தியா இராணுவ ரீதியாக தலையிட்டதே தவறு என கண்டித்த வி.பி.சிங் பிரதமர் பதவியை ஏற்ற பிறகு இந்திய அமைதிப் படையை உடனடியாகத் திரும்பப் பெற ஆணை பிறப்பித்தார். 1990 மார்ச் மாதத்திற்கு முன்னர் இந்தியப் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற அவரது அறிவிப்புக் கண்டு வடக்கு-கிழக்கு மாகாண இடைக்கால அரசின் முதல்வராக இருந்த வரதராசபெருமாள் பதட்டம் அடைந்தார். இந்தியப் படையின் பாதுகாவலில் தன்னுடைய அரசு இருந்ததால் அவருக்குக் கவலை ஏற்பட்டது இயற்கையே. எனவே அவர் உடனடியாக சென்னைக்குப் பறந்தோடி முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களைச் சந்தித்து தனது மாகாண அரசைக் காப்பாற்ற உதவுமாறு வேண்டிக்கொண்டார். நடுவராக இருந்து விடுதலைப்புலிகளுக்கும் தனது அரசுக்கும் இடையே இணக்கம் ஏற்படுத்தித் தரவேண்டும் என அவர் கெஞ்சினார்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக சகல தரப்பினரையும் அழைத்துப் பேசி சுமூகமான முடிவு காண உதவுமாறு முதலமைச்சர் மு. கருணாநிதியை பிரதமர் வி.பி. சிங் வேண்டிக்கொண்டதோடு அத்தகைய முடிவை இந்திய அரசும் ஏற்கும் என்றும் அறிவித்தார். ஈழப்பிரச்சினையில் தீர்வு காண இந்திய அரசு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் விடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி அவர்கள் கொழும்புவில் இருந்த பாலசிங்கத்துடன் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இலங்கை அதிபர் பிரமேதாசா வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த பாலசிங்கம் முதலமைச்சரின் அழைப்பைத் தட்டமுடியா மல் பிரபாகரனின் அனுமதியுடன் சென்னைக்கு வந்தார். அவருடன் யோகியும் வந்தார்.

சென்னையில் மிகுந்த பாதுகாப்புடன் அவர்கள் துறைமுக விருந்தினர் இல்லத்தில் தங்கவைக்கப் பட்டனர். முதலமைச்சரும் அவருடைய மருமகன் முரசொலி மாறனும் மட்டுமே சந்தித்துப் பேசினார்கள். தமிழகத் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

அந்த வேளையில் நான் டெல்லியில் இருந்தேன். தமிழீழத்தில் இந்திய இராணுவம் நடத்திய அட்டூழியங்கள் குறித்த விவரங்களை அங்கு சென்று சேகரித்து வந்திருந்தேன். பிரதமர் வி.பி.சிங் அவர்களிட மும் மற்ற அமைச்சர்களிடமும் அவற்றைத் தெரிவித் தேன். எனது நண்பரும் மத்திய அமைச்சருமான உன்னிக்கிருஷ்ணன் அவர்களை நான் சந்தித்த போது பாலசிங்கம் சென்னைக்கு வந்திருப்பது குறித்து என்னிடம் கேட்டார்.

முதலமைச்சர் கருணாநிதியின் அழைப்பின் பேரில் அவர் வந்திருப்பதாகவும், பிற கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற யாரையும் சந்திக்க அவரை அனுமதிக்கவில்லை என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். துறைமுகத் துறையும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே அவர் உடனடியாக சென்னை துறைமுகத் தலைவரை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவரோ இவரிடம் உண்மை நிலையை தெரிவித்தார். துறைமுக விருந்தினர் விடுதியை தமிழக காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட்டதாகவும் யாரையும் அனுமதிக்க மறுப்பதாகவும் தொலைப்பேசித் தொடர்பை துண்டித்து விட்டதாகவும் அவர் தெரிவித் தார். இதைக் கண்டு அமைச்சர் உன்னிக்கிருஷ்ணன் கடும் கோபம் அடைந்தார். ஆனாலும் அவரால் பாலசிங்கத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

வடக்கு-கிழக்கு மாகாண சபையில் சரிபாதி இடங்களையும் நிர்வாகத்தில் சரிபாதி பங்கும் அளிக்க ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் தயாராக இருக்கிற தென்றும் அதை ஏற்று இருதரப்பினரும் ஒற்றுமையாக செயல்படவேண்டும் என்றும் மு. கருணாநிதி வேண்டிக்கொண்டார்.

இந்திய அமைதிப்படையுடன் கூட்டு சேர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய குற்றங்கள் குறித்து பாலசிங்கம் விரிவாக எடுத்துக்கூறினார். வரதராஜப்பெருமாளின் நிர்வாகம் புரிந்த தவறான செயல்களின் விளைவாக ஈழத்தமிழர்கள் அதை வெறுத்து ஒதுக்குவதாகவும் பாலசிங்கம் எடுத்துரைத் தார். முறை தவறிய தேர்தல்கள் மூலம் அதிகாரத்திற்கு வந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் இந்திய அமைதிப் படையின் கைப்பாவையாக இயங்கியதையும் இந்திய இராணுவத்துடன் இணைந்து அட்டுழியங்கள் புரிந்ததின் விளைவாக புலிகளே அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புவதையும் புதிய தேர்தல் நடத்தி அத்தேர்தலின் மூலம் அதிகாரத்திற்கு வர புலிகள் விரும்புவதாகவும் பாலசிங்கம் எடுத்துக்கூறினார். தமிழர் தாயகத்திற்கு புதிய தேர்தல்கள் நடைபெற்றால். விடுதலைப்புலிகள் பெருவெற்றி பெறுவது திண்ணம் என்பதையும் அவர் எடுத்துக்கூறினார்.

முதலமைச்சர் கருணாநிதியின் சூழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க பாலசிங்கம் மறுத்துவிட்டார். உண்மையில் பிரதமர் வி.பி.சிங் அளித்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக்காண அவர் முயற்சி செய்யவில்லை. புலிகள் மீது அவருக்கிருந்த வெறுப்பின் காரணமாக துரோகக் கும்பலுடன் இணைந்து அதிகாரத்தை புலிகள் ஏற்க வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதை விடுதலைப்புலிகள் ஏற்க மறுத்ததின் விளைவாக அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.


அண்டப் புளுகு

இலங்கையில் இருந்து இந்தியப்படை வெளியேறியபோது பிரபாகரனின் புகழும் உயர்ந்தது. ஒரு வல்லரசின் படையை இரண்டாண்டு காலத்திற்கு மேலாக எதிர்த்துப் போராடி இறுதியில் அந்தப் படையை வெற்றிகரமாக தனது மண்ணிலிருந்து வெளியேறச் செய்த பிரபாகரனின் அளப்பறிய சாதனையைக் கண்டு உலகமே வியந்தது.

காலமெல்லாம் பிரபாகரனின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் காழ்ப்புணர்ச்சியை கொட்டி வந்த முதலமைச்சர் கருணாநிதி 1990ஆம் ஆண்டின் இறுதியில் பிரபாகரனின் சாதனையைப் பாராட்டிப் பேசினார். அப்போது "யார் இந்த பிரபாகரன்? 1971 தேர்தலில் நான் சைதைப் பகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டபோது எனக்காக இரவு பகலாக வேலை செய்த தம்பிதானே? என்று உரிமை கொண்டாடினார். அவரது இந்தப் பேச்சு முரசொலியிலும் வெளிவந்தது.

1991ஆம் ஆண்டில் தம்பியின் அழைப்பை ஏற்று நான் தமிழீழம் சென்றபோது இந்த முரசொலி இதழையும் என்னுடன் எடுத்துச்சென்றேன். 21-2-91 அன்று தம்பியுடன் சாவகாசமாக இருந்த வேளையில் முரசொலியை அவரிடம் கொடுத்து அவர் கருத்தறிய விரும்பினேன். கருணாநிதியின் பேச்சை படித்துப் பார்த்துவிட்டுச் சிரித்தார். பிறகு பின்வருமாறு கூறினார்:

"உங்களுக்கோ வைகோ அண்ணாவுக்கோகூட நான் தேர்தலில் வேலை செய்யவில்லை. தமிழகத் தேர்தல்களிலிருந்தும் அரசியலிலிருந்துமே எப்போதும் நாங்கள் விலகியிருக்கிறோம். ஒருபோதும் அதில் தலையிட்டது இல்லை' என்று கூறி மீண்டும் சிரித்தார்.

கருணாநிதியின் குணவியல்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். காலமெல்லாம் தன்னால் பழிக்கப்பட்ட ஒருவர் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டால் உடனடியாகப் பல்டி அடித்து சொந்தமும் உரிமையும் கொண்டாடுவது அவருக்கே ஆகிவந்த கலையாகும்.


காயமடைந்தோரைக் கைது செய்தவர்

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பிலும் அதன் அங்கம் வகித்த அமைப்புகளின் சார்பிலும் ஈழத்தமிழர்களுக்கு உதவ மருந்துகள் திரட்டப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்களும், மருத்துவக் கடைகளின் உரிமையாளர்களும் ஏராளமான மருந்துகளை வாரி வாரி வழங்கினார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மருந்துகள் தமிழகத்திலிருந்து பத்திர மாக படகுகளின் மூலம் தமிழீழம் அனுப்பிவைக் கப்பட்டன.

அதே வேளையில் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியை விடுதலைப்புலிகளின் தூதர்கள் சந்தித்து தமிழகத்தில் காயமடைந்த போராளிகள் சிகிச்சை பெறவும், தேவையான மருந்துகளை வாங்கிச் செல்லவும் அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதை நம்பி தமிழகம் வந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த போராளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தவரும் கருணாநிதியே ஆவார். அதைப்போல தமிழகத்தில் மருந்துகள் வாங்குவதற்காக புலிகள் கொண்டுவந்த பலஇலட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தவர் கருணா நிதியே. இதுகுறித்து 23-7-97 அன்று எனக்குப் பிரபா கரன் எழுதிய கடிதத்தில் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார்.

"மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்குவந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 இலட்சம் வரையான பணம் தமிழ்நாட்டு போலீசால் கைப்பற்றப் பட்டுள்ளது. எமக்கு இங்கிருக்கும் எவ்வளவோ பண கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம் தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தரு கிறது. ஆனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக் கையையும் ஆறுதலையும் தருகிறது. எங்களுக்கு இங்கு இப்போது தேவையானது மருந்துப் பொருட்கள்தான். தொடர்ந்தும் இதுபோல எமக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள் அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும்.'

அதைப் போல 19-3-98 அன்று எனக்கு பிரபாகரன் எழுதிய மற்றொரு கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"எமது போராளிகள் பலர் அதுவும் படுகாய மடைந்து, ஊனமடைந்தவர்கள் இன்னும் தமிழகச் சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக்கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90இல் கலைஞரின் காருணியத்தை நம்பி அவரது வேண்டு கோளின் பேரில் அனுப்பப்பட்ட எமது போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டிவைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதியான செயல். ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களின் இல்லத்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் இப்போராளிகள் விடுதலைசெய்யப்பட்டு அவர்களது சொந்த தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் என ஒருதீர்மானத்தை நிறைவேற்றியிருந்தீர்கள். இத்தீர்மானத்தின்படி இவர்களை விடுவிப்பதற்கு பெர்ணான்டசுடன் கலந்தாலோசித்து ஆவன செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.'

டில்லியில் பெர்ணான்டஸ் கூட்டிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அகில இந்தியாவின் கவனத்தைக் கவர்ந்தது. அதற்குப்பின்னர் இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நான் புகார் செய்தேன். போரில் ஊனமடைந்த ஈழத்தமிழர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து கருணாநிதி அரசு கொடுமைப்படுத்துவதை புகைப்படங் களுடனும் ஆதாரங்களுடனும் அனுப்பிவைத்தேன். எடுத்துக்காட்டாக இட்லர் என்ற இளைஞர் ஒரு குண்டு வெடிப்பில் இரு கண்களையும் பறிகொடுத்தார். இரு கைகளையும் பறிகொடுத்தார். அவர் உணவு உண்ணவேண்டும் என்றாலும் அடுத்தவரின் தயவு இல்லாமல் செய்ய முடியாது. ஆனால் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அவர் ஆபத்தானவர் என்று குற்றம்சாட்டி அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இந்திய அரசு ஏவியிருப்பதை நான் சுட்டிக்காட்டினேன். இதன் விளைவாக தேசிய மனித உரிமை கமிசன் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எனது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து அனைவரையும் விடுவிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அதற்குப் பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் தமிழினத்தலைவர் என தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கருணாநிதி ஊனமடைந்த தமிழர்களிடம் இறுதிவரை இரக்கம் காட்டவே இல்லை.


புலிகள் மீது பழி

1990ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி தேசவிரோத நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபடுவதாக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியபொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதி பின்வரும் பதிலை அளித்தார்:

"மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிளவு ஏற்படுத்த "ரா' உளவுத்துறை தொடர்ந்து செயல்படுகிறது. இலங்கையில் உள்ள பல்வேறு போராளிக்குழுக்களிடையே பிளவும் மோதலும் ஏற்பட்டதற்கு "ரா' உளவுத்துறையே காரணம் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இவ்வாறு சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்தவர். சகோதரச் சண்டைக்குக் காரணம் "ரா' உளவுத்துறையே எனக் குற்றம் சாட்டியவர் பிற்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விடுதலைப்புலிகள் மீது பொய்யான பழியைச் சுமத்த முயன்றார். இன்னமும் முயலுகிறார்.


நாடகம்

தமிழீழத்தில் முள்ளி வாய்க்கால் பகுதியில் தமிழர்களை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்து குண்டு மழை பொழிந்தபோது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக மக்கள் எழுச்சியுடன் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள். இந்திய அரசுக்கு எதிரான உணர்வு பெருகிக் கொந்தளிப்பான நிலையை எட்டியது.

இந்த இக்கட்டான நிலையிலிருந்து இந்திய அரசையும் தன்னையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் 14-10-08 அன்று சர்வ கட்சிக் கூட்டம் ஒன்றினைக் கூட்டினார். இக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு ஆவன செய்யாவிட்டால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். ஓரிருவரைத் தவிர வேறு யாரும் இதற்கு எதிராக இல்லை.

நிலைமை சரியில்லாததைக் கண்ட கருணாநிதி உடனடியாகப் பல்டி அடித்தார். அமைச்சர்கள் என்ன, தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர் களுமே பதவி விலக வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக்கட்சிகளும் அதை வரவேற்றன. ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. இச்செய்தி உலகமெல்லாம் இருந்த தமிழர்களின் உள்ளங்களில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது.

ஆனால் 12 நாட்கள் கழிவதற்குள் கருணாநிதி தலை கீழான நிலையெடுத்தார். 26-10-08 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்குப் பறந்து வந்து கருணாநிதியைச் சந்தித்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் கள் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் அனைத்துக்கட்சிக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டதாகும். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏதாவது வாக்குறுதி கொடுத்திருந்தால் அதன் மீது முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் அனைத்துக்கட்சித் தலைவர் களுக்குத்தான் உண்டு. தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சர் கருணாநிதிக்கு கிடையாது. அவர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை மீண்டும் கூட்டி அதில் பிரணாப் முகர்ஜியுடன் பேசிய விவரங்களைத் தெரிவித்து அனைத்துக்கட்சிகளின் சம்மதத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யா மல் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசைக் காப்பாற்றுவதற்காக கருணாநிதி அனைத்துக்கட்சிகள் கூடி நிறைவேற்றிய தீர்மானத்தைக் குப்பைக்கூடையில் வீசியெறிந்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கு இந்திய அரசு சிங்கள அரசை வற்புறுத்தியிருந்தது என்பது உண்மையானால் அங்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கை அதிபர் இராசபக்சேயின் தம்பியும் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபாய இராசபக்சே பகிரங்கமாக பின்வருமாறு கூறினார். இந்திய அரசு ஒருபோதும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவேயில்லை என்றார். அப்படியானால் கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக நாடாகமாடினார் என்பதுதானே உண்மை.

சிங்கள அரசு போரை நிறுத்த முன்வந்தால் விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் 7-11-08 அன்று வேண்டுகோள் விடுத்தார். அன்றிரவே விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் இவ்வேண்டுகோளை ஏற்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

அதன் பின் தமிழக சட்டமன்றம் கூடி உடன டியாகப் போரை நிறுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தந்தன. அதன்பின் 25-11-08 அன்று போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங் களுக்கு முன்பாக அனைத்துக்கட்சிகளின் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டு மென்ற கோரிக்கையை முன் வைத்து 29-01-09 அன்று முத்துக்குமார் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். அதைத் தொடர்ந்து 23-03-09 வரை தமிழகத்தில் 14 பேர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர்.

இலங்கையில் நிலைமை மேலும் மேலும் மோசமாயிற்றே தவிர சீர்திருந்தவில்லை. தமிழக மக்களின் போராட்டங்களும் நாளுக்கு நாள் வலுத்தன. எனவே கருணாநிதி மற்றொரு நாடகத்தை நடத்தினார். 4-12-08 அன்று அவர் தலைமையில் அவருடைய தோழமை கட்சிகளை மட்டுமே கொண்ட குழு ஒன்று தில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது. 14-10-08 அன்று அவர் கூட்டிய சர்வகட்சிக் கூட்டத் தில் கலந்துகொண்ட தலைவர்களில் பெரும்பாலோ ருக்கு தெரிவிக்காமலும் அழைக்காமலும் தனக்கு வேண்டிய சில கட்சித் தலைவர்களை மட்டும் அழைத் துக்கொண்டு பிரதமரைச் சந்திக்க கருணாநிதி சென்றார்.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளரான தா. பாண்டியன் அப்போது மாஸ்கோ சென்றிருந்தார். செய்தியறிந்து அங்கிருந்து விரைந்து திரும்பி பிரதமரைச் சந்திக்கச் சென்ற குழுவினருடன் அவரும் சென்றார். அவர் வருகையைச் சற்றும் எதிர் பார்க்காத கருணாநிதி தனது அமைச்சர்களில் ஒருவரை அவரிடம் அனுப்பி பிரதமரிடம் எதுவும் கோபமாகப் பேசிவிடவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார். ஆனால் தா.பாண்டியன் பிரதமரிடம் தமிழக மக்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கத் தயங்கவில்லை. கருணாநிதியின் சார்பில் பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனு ஏற்கனவே விடுக்கப் பட்ட வேண்டுகோளைப் பின்பற்றியே எழுதப்பட்டி ருந்தது. தமிழக மக்களின் கோபத்தைத் திசை திருப்புவதற்காக பிரதமர் சந்திப்பு நாடகத்தை நடத்தினாரே தவிர இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு எதுவும் செய்யவில்லை.

இறுதியாக ஒரு உச்சக்கட்டமான நாடகத்தை அரங்கேற்றினார். 27-4-09 அன்று திடீரென காலை 6 மணிக்கு அண்ணா நினைவிடத்திற்குச் சென்று சாகும்வரை பட்டினிப்போராட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம் எனக் கூறினார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கு இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது எனக்கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலைத் தடுத்து நிறுத்தியவர். இப்போது திடீரென இந்திய அரசுக்கெதிராக சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்த முன்வந்தார். அண்ணா நினைவிடத்திற்கு முன்னால் அவருடைய கட்சிக்காரர்கள் திரட்டப்பட்டு தங்கள் தலைவரின் உன்னதமான தியாகப் போராட் டத்திற்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினார்கள். ஆனால் பகல் 11 மணியளவிலேயே மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகத் தமக்கு செய்தியனுப்பி உள்ள தாகக் கூறி உண்ணா நோன்பை முடித்துக்கொண்டார். ஆக காலை உணவிற்குப் பிறகு பட்டினிப் போராட் டத்தைத் தொடங்கி பிற்பகல் உணவு வேளைக்கு முன்பாக அதை முடித்துக்கொண்ட சாதனையாளர் இவர் மட்டுமே.

ஆனால் அன்று மாலையிலேயே முள்ளி வாய்க்கால் பகுதியில் சிங்கள இராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தன.


இராசபக்சேக்கு உதவி

இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் சீர்குலைவு பற்றி ஆராய வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு சுவிட்சர்லாந்து நாடு ஒரு விண்ணப்பத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்ணப்பத்தை மறுத்து இலங்கைத் தூதர் ஒரு தீர்மானத்தை அனுப்பினார். இலங்கையின் உள்நாட்டு நடவடிக்கைகளில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும். 27-5-09 அன்று ஐ.நா. மனித உரிமை அமைப்புக் கூட்டத்தில் இலங்கை யின் தீர்மானத்திற்கு இந்தியாவும் சீனாவும் இணைந்து நின்று ஆதரவு திரட்டின. இதன் விளைவாக அத் தீர்மானத்திற்கு 29 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. 12 நாடுகள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட விவரமும். 3 இலட்சத்திற்கு மேற்பட்டவர் கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் அடைக்கப்பட்டு போதுமான உணவோ, குடிநீரோ, சுகாதார வசதிகளோ இல்லாமல் சித்திரவதை செய்யப்படுவதும் அண்டை நாடான இந்தியாவுக்குத் தெரியாமல் இல்லை. அப்படியிருந்தும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

இந்திய அரசின் இந்தப் போக்கை கண்டித்துத் திருத்த வேண்டிய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் சிங்கள அரசுக்கு ஆதரவான நடவடிக்கையே மேற்கொண்டார்.

முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவானதால் அதை நீர்த்துப்போகச் செய்வதற்காக முதல்வர் கருணாநிதி அவர்கள் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பினார். 10-10-09 அன்று சென்ற இந்தத் தூதுக்குழு 14-10-09 அன்று திரும்பியது. சிங்கள அரசு எங்கெங்கு அழைத்துச்சென்று முகாம்களைக் காட்டியதோ அங்கே மட்டும் இந்தக் குழுவினர் சென்றனர். போரில் படுகாயமடைந்தவர்கள் அங்ககீன மானவர்கள், இயலாத முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்குப் போதுமான மருத்துவ வசதிகளும் சத்துள்ள உணவும் அளிக்கப்படுகிறதா என இந்தக் குழுவினர் ஆராயவில்லை. குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் பிரிந்து வாழ்பவர்களை ஒன்றாக வைக்கும்படி இக்குழுவினர் வற்புறுத்தினார் களா என்ற கேள்விக்கும் விடையில்லை. போரின் கடைசிக்கட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விவரப்பட்டியலை இக்குழுவினர் கேட்டுப்பெற்றார்களா என்றால் இல்லை. முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியல் இருக்கிறதா என்று கேட்டு அவ்வாறு இருந்தால் அதைப் பார்வையிட்டு தாங்கள் விரும்பும் சிலரையாவது அழைத்துப் பேசினார்களா என்றால் அதுவும் இல்லை. இராசபக்சே அளித்த விருந்தினை உண்டு விட்டு அவர் தந்த பரிசுப்பொருட்களையும் பெற்றுக்கொண்டு திரும்பினர்களே தவிர, இந்தியா உட்பட உலக நாடுகள் அளித்த உதவி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கண்காணிக்க சர்வதேசக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தத் தவறிவிட்டார்கள். இக்குழு திரும்பியதும் முதலமைச்சர் கருணாநிதி பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.

1. 15-10-09 அன்றிலிருந்து 15 நாட்களில் 58 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

2. ஆதரவற்ற குழந்தைகள் உடல் ஊனமுற்றோர் ஆகியோர் தொண்டு நிறுவனங்களில் பராமரிப்பில் ஒப்டைக்கப்படுவார்கள்.

3. அனைத்து மக்களும் 3 மாதங்களுக்குள் முழுமையாக முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவரவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஆனால் அதற்குப்பிறகு 16 மாதங்கள் கடந்துவிட்டன. வடக்கு மாநிலத்தில் 2,60,000 தமிழர் வீடுகள் முழுமையாக சேதமடைந்துவிட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வீட்டில் 5 பேர் கொண்ட குடும்பத்தினர் வாழுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால். 13 இலட்சம் மக்கள் உள்நாட்டிலேயே வீடிழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட மக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. வழியில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப் பட்டு சிறுசிறு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். யாரும் அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் வீடுகளும் நிலங்களும் சிங்களருக்கு அளிக் கப்பட்டு கூட்டங் கூட்டமாக குடியேற்றப்படுகிறார்கள்.

முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். இளம்பெண்கள் பிரிக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.

மேற்கண்ட உண்மைகளை மூடி மறைத்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட இந்த அறிக்கையை சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டி சிங்களப் பிரதிநிதி வாதாடினார். இலங்கைக்கு அருகேயுள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் முகாம்களின் நிலைமை ஓரளவு நன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அந்த மக்கள் விடுதலை செய்யப்பட்டு அவரவர்கள் ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் தெரிவித் துள்ளார். ஆனால் இலங்கையில் இருந்து பல ஆயிரம் அப்பால் உள்ள நாடுகள் இந்தப் பிரச்சினையின் உண்மை புரியாமல் மனித உரிமைகள் சீர்குலைக்கப் படுவதாக குற்றம் சாட்டுவது தவறு என்று வாதாடினார்.

உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து இலங்கை தப்புவதற்கு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை உதவி இருக்கிறதே தவிர அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவவில்லை.

டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சே கும்பலை போர்க் குற்றவாளிகள் என 16-1-10 அன்று தீர்ப்பளித்து சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. ஆனால் இதுவரை தமிழக முதல்வர் மு. கருணாநிதி இராசபக்சேயை போர்க் குற்றவாளி என குற்றம் சாட்ட முன்வரவில்லை. முள்வேலி முகாம்களில் இருந்து எமது மக்களை விடுவிப்போம். போர்க் குற்றவாளிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் என்று அனைத்துத் தமிழர்களின் சார்பில் முழங்க வேண்டியவர் வாய்மூடி மவுனம் சாதிக்கிறார். ஐரோப்பிய நாடுகளும் வேறு சில நாடுகளும் போர்க் குற்றங்களுக்கு எதிராக எழுப்பியுள்ள குரல்களைக் கண்டு நடுங்கும் இராசபக்சே தமிழ்நாட்டிலிருந்து இந்த குரல் எழுந்திருக்குமானால் அடங்கி ஒடுங்கி இருந்திருப்பார்.

அமெரிக்காவைச் சேர்ந்த எலின் சாண்டர் "ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்காக நியாயம் கேட்கும் பொறுப்பு மற்ற எவரையும் காட்டிலும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அதிகம், என்றார். அவருக்கு இருந்த இந்த உணர்வு தமிழக முதலமைச்சருக்கு இல்லாமல் போயிற்று.

சர்வதேச நீதிமன்றத்தில் இராசபக்சே கும்பலைப் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக உலகத் தமிழர் மாநாடு ஒன்றினை நடத்தி அதன் மூலம் உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்திக் குரல் எழுப்ப வேண்டிய கருணாநிதி அதற்குப் பதில் இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பவும் நீர்த்துப் போக வைக்கவும் கோவையில் உலகச் செம்மொழி மாநாட்டினை நடத்தினார்.

இராசபக்சேக்கு கோபம் வரும் வகையில் யாரும் எதுவும் பேசிவிட வேண்டாம் என்றும் தமிழர்களுக்கு அறிவுரை கூறவும் கருணாநிதி தயங்கவில்லை. அது மட்டுமல்ல "நம்முடைய மெளன வலி யாருக்குத் தெரியப் போகிறது என்று நீலிக்கண்ணீர் வடிக்கவும் அவர் தயங்கவில்லை. இத்துடன் அவர் நிற்கவில்லை. முறையாகத் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ள புலிகள் தவறிவிட்டதாகவும் அதன் விளைவாகவே ஒரு இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் பிரபாகரன் மீது பழி சுமத்தவும் அவர் தயங்கவில்லை.

தமிழீழத்தில் நடந்த அப்பட்டமான இனப்படு கொலைக்கு காங்கிரஸ் அரசுதான் முழுமையான பொறுப்பு என்பதை அடியோடு மறைக்க அவர் படாத பாடு படுகிறார். அதற்காக பிரபாகரன் மீது குற்றம் சுமத்தவும் அவர் தயங்கவில்லை. இராசபக்சே கும்பல் நடத்திய இனப்படுகொலைகள் குறித்தோ போர்க் குற்றங்கள் குறித்தோ ஒரு வார்த்தைகூட கண்டிக்க கருணாநிதி இதுவரை முன்வரவில்லை. மாறாக புலிகள் மீது புழுதி வாரித் தூற்ற அவர் கொஞ்சமும் தயங்கவில்லை.


தாய்க்குத் துரோகம்

பிரபாகரனைப் பெற்றெடுத்த அன்னையும் 83 வயது நிறைந்த மூதாட்டியுமான பார்வதி அம்மையார் தமிழகத்திற்கு சிகிச்சைபெறவந்தபோது நெஞ்சில் ஈரமில்லாமல் அவர் வந்த விமானத்திலிருந்து கீழே இறங்கவிடாமல் அவரைத் திருப்பி அனுப்பிய நிகழ்ச்சியே ஈழத் தமிழருக்கு கருணாநிதி செய்த துரோகத்திற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆகும்.

இலங்கையில் சிங்கள இராணுவ முகாமில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமான செய்தியின் விளைவாக அதிர்ச்சிக்குள்ளான பார்வதி அம்மையார் அவர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளானார். அவரது மூத்த மகன் டென்மார்க் நாட்டிலும், அவரது இரண்டு புதல்விகள் வெளிநாடுகளிலும் வாழக்கூடிய நிலைமையில் அவர்கள் தங்கள் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தவோ அல்லது தங்களின் தாயாருக்குப் பணிவிடை செய்யவோ இலங்கை திரும்ப முடியாத நிலை. அவர்கள் இலங்கை திரும்பினால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாது. எனவே கணவரையும் இழந்து பிள்ளைகளையும் பார்க்க முடியாமல் பிரிந்து பரிதவித்த பார்வதி அம்மையார் அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் அவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டு பாதுகாத்தார். அரசிடம் போராடி அவரை விடுவிக்க வைத்து. வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

இந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்த காலத்தில் எங்கள் குடும்பத்துடன் மிகநெருங்கிப் பழகியவர். எனவே அவரை அழைத்து வந்து எங்கள் வீட்டிலேயே வைத்து தக்க சிகிச்சை அளித்து பராமரிப்பதின் மூலம் அவருக்கு மனஆறுதல் கிடைக்குமென நம்பினேன். இதை விளம்பரம் இல்லாமல் செய்யவும் திட்டமிட்டேன். ஏனென்றால் அம்மையாரின் வருகையை அறிந்தால் தமிழகமே அவரைக் காண கூடிவிடும். அது அவருடைய உடல் நிலைக்கும், மன நிலைக்கும் ஒவ்வாது என்பதால் இந்த விசயத்தை இரகசியமாக வைத்தேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், தமிழீழ உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கு மட்டுமே இதை தெரிவித்தேன். அவர்களும் எனது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

அம்மையாரை இலங்கையில் இருந்து மலேசியா அழைத்துச் சென்று அங்கு சில நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்து சிகிச்சையளித்த பிறகு தமிழகம் அழைத்துவர திட்டமிட்டோம். அதற்கிணங்க நண்பர் சிவாஜிலிங்கம் அவர்கள் அம்மையாரை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று தக்கவர்கள் வசம் ஒப்படைத்துத் திரும்பினார்.

பிறகு மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அம்மையாருக்கு இந்தியா வருவதற்கான ஆறுமாத விசாவை அளித்தது. அதன் பின்னர் 14-4-2010 அன்று மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் வந்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி சகோதரர் வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், இளவழகன், என் மகள் பூங்குழலி ஆகியோர் மட்டும் விமான நிலையம் சென்று காரிலேயே காத்திருந்தோம். விமானம் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்னால் லாரி லாரியாக காவல் படையினர் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். சென்னை புறநகர் காவல்துறை ஆணையரான ஜாங்கிட்டும் அங்குவந்து இறங்கினார். ஏதோ தவறான நடவடிக்கை நடக்கப்போகிறது என்ற அச்சம் எங்கள் உள்ளத்தில் எழுந்தது. எனவே இனிமேலும் காத்திருக்க வேண்டாம் என்பதற்காக நாங்கள் இறங்கி விமான நிலைய வரவேற்பாளர் பகுதிக்குச் செல்வதற்கு முனைந்தோம். காவல்துறை அதிகாரிகள் எங்களை வழிமறித்தனர். விமான நிலையத்திற்குள் செல்லக்கூடாது என்று கெடுபிடி செய்தனர். முறையான அனுமதி சீட்டுக்கள் இருக்கும்போது எங் களைத் தடுக்க முடியாது என்று கூறிவிட்டு நாங்கள் உள்ளே சென்ற போது காவலர்கள் பெருங்கூட்டமாக மறித்து நின்றனர். சிறிது நேரம் வாதப்பிரதிவாதங்கள் நடந்த பிறகு வரவேற் பாளர் பகுதியில் நாங்கள் அமர்வதற்கு அனுமதிக் கப்பட்டோம்.


சரியாக இரவு 10.30 மணிக்கு மலேசி யாவில் இருந்து வந்த விமானம் கீழே இறங் கியது. சிறிது நேரத்தில் பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். நாங்களும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தோம். ஆனால் பார்வதி அம்மையாரோ அவருக்கு துணைக்கு வந்த பெண்ணோ வரவில்லை. என்ன நடக்கிறது என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இரவு 2 மணி வரை நாங்கள் காத்திருந்த பிறகு விமான நிலைய அதிகாரி ஒருவர் எங்களிடம் இரகசியமாக "அம்மையாரை அதே விமானத்தில் திருப்பியனுப்பி விட்டார்கள்' என்று கூறினார். இரவு 1 மணியளவில் அம்மையார் மீண்டும் மலேசியா திரும்பி விட்டதாக அங்கிருந்த நண்பர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.

முறையான அனுமதி பெற்று சென்னை வந்த பார்வதி அம்மையாரை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தன. அதைப் போல தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர் நடுவிலும் இந்நிகழ்ச்சி கொதிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புவதற்கு முயற்சி செய்தார்.

பார்வதி அம்மையார் வருவது குறித்து தனக்கோ தமிழக அரசுக்கோ எத்தகைய தகவலும் இல்லை என்று முதலமைச்சர் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் சொல்லுவது வேடிக்கையானது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் விசா பெற்று வருவதுதான் வழக்கம். அப்படி வருபவர்கள் தமிழக அரசுக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மறுநாள் காலை பத்திரிகைகளைப் படித்த பிற்பாடுதான் தனக்கு விவரம் தெரியும் என்று முதலமைச்சர் முதலில் கூறிவிட்டு பிறகு இரவு 12 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது பார்வதி அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டதை தெரிந்து கொண்டதாக முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார். மலேசியாவிலிருந்து வந்த விமானம் இரவு 10.45 மணிக்குத்தான் வந்தது. ஆனால் அதற்கு முன்னாலேயே சென்னை புறநகர் காவல் துறை ஆணையாளரான ஜாங்கிட் தலைமையில் பெரும் காவலர் படையொன்று விமான நிலைய வாசலில் கொண்டுவந்து குவிக்கப்பட்டது. 10.15 மணியளவில் வைகோவும் நானும் விமான நிலையத்திற்கு வந்த போது எங்களை உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுப்பதற்கு பெருமுயற்சி செய்தார்கள். முதலமைச்சரின் உத்தரவில்லாமல் அவர்கள் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆக இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே முதலமைச்சருக்கு உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்து அதன் பின்னர்தான் காவலர் படையை அனுப்ப அவர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.

2003ஆம் ஆண்டில் தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு எழுதப்பட்ட கடிதத்தில் பிரபாகரனின் பெற்றோர் இந்தியாவிற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்று எழுதி அதன் காரணமாக அவர்கள் பெயர் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இது உண்மையானால் கருப்புப் பட்டியலில் இடம் பெற்றவருக்கு மலேசிய-இந்தியத் தூதுவர் அலுவலகம் இந்தியா வருவதற்கு ஆறு மாத கால விசா கொடுத்தது ஏன்? தவறுதலாகக் கொடுத்திருந்தால் அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

ஜெயலலிதா காலத்தில் இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தனது தவறை மறைப்பதற்கு முதலமைச்சர் முயற்சி செய்கிறார். ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சினையில் எதிராக இருந்தவர். ஆனால் கருணாநிதி அவர்களோ ஆதரவாக இருப்பது போல் காட்டிக்கொண்டு எதிராகவே செயல்படுபவர்.

தி.மு.க. வின் தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக பிரச்சார நாடகங்களில் நடித்தவர் கருணாநிதி. ஆனால் இப்போது முதலமைச்சராக இருக்கும்போதும் சட்டமன்றத்திலேயே நடிப்பது வெட்கக்கேடானது. பார்வதி அம்மையாருக்கு இழைக்கப்பட்ட அநீதி இவருக்குத் தெரியாமல் நடக்கவில்லை. அதை மறைப்பதற்கு இவர் செய்யும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறப்போவதுமில்லை.

Thursday, April 14, 2011

வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி 2 - இரா.திருமாவளவன்

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் மனிதன் புரிகின்ற எண்ணுகின்ற நல்லன அனைத்தும் அறம் என்று சொல்லப்படும். இந்த அறத்திற்குப் புறம்பான நான்கு கூறுகள் நம்மிடம் இருக்கக் கூடாதவை. இவை அறமாகா. அவை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்பன. அழுக்காறு என்பது பிறருடைய வளர்ச்சியைக் கண்டு ஏற்றுக் கொள்ள முடியாத மனப் பண்பாகும். இதனை பொறாமை என்றும் கூறுவார்கள். ஒருவருக்கு அழுக்காறு இருந்தால் யார் மீது அது ஏற்பட்டிருக்கின்றதோ அவர்க்குக் கெடுதல் செய்ய முற்பட்டு விடுவார். அடுத்து அவா. இதனைப் பேராசை என்றும் சொல்லுவோம். அவா என்னும் பேராசை உடையவர், தாம் மட்டுமே தமக்கு மட்டுமே என்ற தன்னலத்தால் பிறர்க்கு உரியதையும் பறித்துக் கொண்டு அவர்க்குக் கெடுதல் செய்து விடுவார். மூன்றாவது வெகுளி எனப்படுகின்ற தன்னை மறக்கின்ற சீற்றம், ஆத்திரம். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். இந்த வெகுளியால் ஒருவர் தன்னறிவை இழந்து என்ன செய்கிறோம் ஏது செய்கின்றோம் என்பது கூட அறியாமல் பிறர்க்குக் கேடு செய்துவிடுவார்கள். சில வேளை கொலை கூட செய்து விடலாம். நான்காவது இன்னாச்சொல். தனக்குப் பிடிக்காதவருடைய மனத்தைப் புண்படுத்துகின்ற வகையில் அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லித் துன்புறுத்துவது. இன்னல் படுத்துவது இன்னாச்சொல் எனப் படும். இவ்வாறு தமக்கும் பிறர்க்கும் பெருந்துன்பத்தைத் தருகின்ற பெருங்கேட்டினை ஏற்படுத்துகின்ற நான்கு கேடுகளையும் விட்டொழித்து தம்மைப் போல பிறரையும் எண்ணி மனித நேயம் பேணுவது சிறப்பல்லவா.