தொடர்பாளர்கள்

Wednesday, July 29, 2009

ஒழுக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி சிந்திக்கத் தூண்டுவதே உண்மைச் சமயமாகும்! திருமாவளவன் உரை முழக்கம். தொடர் 1

மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் அண்மையில் சிரம்பான் தேமியாங் வட்டாரத்தில் இயங்கும் இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த சமய சொற்பொழிவு கூட்டத்தில் ஆற்றிய உரையினை இங்கே வெளியிடுகின்றோம்.

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே!

எல்லாம் வல்ல பேரிறைக்கு எனது வணக்கம். இன்று இந்த நிகழ்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற தேமியாங் வட்டார இந்து சங்க தலைவர் ஐயா கிருட்டிணன் அவர்களே! என்னை இந்த நிகழ்ச்சிக்கு விடாப் பிடியாக நின்று வந்தே தீர வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் தொடர்பு கொண்டு என்னை இங்கு வரும்படியாகச் செய்த தமிழ்த் திரு லோகன் அவர்களே! மற்றும் இந்தத் தேமியாங் வட்டார இந்து சங்க பொறுப்பாளர்களே! தாய்மார்களே அன்புத் தமிழ் நெஞ்சங்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தலை தாழ்த்தித் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி ஒரு சமய அமைப்பின் நடவடிக்கை என்பதால் சமயம் தொடர்பாகவும் கொஞ்சம் விளக்கப் படுத்தி விட்டு பிறகு மற்ற பொது செய்திகளை நான் பேசலாம் என்று நினைக்கின்றேன். தமிழில் மட்டுந்தான் வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெரிய சிறப்பு உண்டு. பெருமை உண்டு. தமிழில் மட்டும் தான் சமயம் என்ற சொல் மதம் என்ற சொல் கடவுள் என்ற சொல் பொருள் பொதிந்தனவாக உள்ளன. இந்தச் சொற்களை ஆராய்ச்சிச் செய்தால் அவற்றில் தென்படுகின்ற கருத்துகள் மிக ஆழமாக இருக்கும். கடவுள் என்று சொன்னாலே காலங் காலமாக நாம் எதைப் பார்த்தோமோ எதைக் கற்றுக் கொடுத்தோமோ அதைத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பொருள் பொதிந்த சொல் தமிழில் மட்டுந்தான் உண்டு. வேறு எந்த மொழியிலும் இந்த மாதிரி பொருள் தரும் சொல் கிடையாது. மலாய் மொழியில் Tuhan என்று சொல்கிறான். ஆங்கிலத்தில் God என்று சொல்கிறான். அதற்கு பொருள் விளக்க முடியாது. ஆனால் கடவுள் என்ற சொல்லுக்கு நாம் பொருள் விளக்கம் சொல்ல முடியும். கட என்றால் கடத்தல் செல்லுதல் என்ற பொருளாகும். உள் என்றால் உள்ளே என்ற பொருளாகும். இதை இன்னொரு மாதிரியும்திருப்பிச் சொல்வார்கள். உள் கட என்று. உள்ளே கடந்து பார். உள்ளே கடந்து செல். என்ற பொருளை உணர்த்துகின்றது கடவுள் என்ற சொல். எனவே அதைப் பார்க்கும் பொழுது அது பொருளாக, அது ஓர் உருவமாக, ஒரு பால் வகைப் பட்டதாக இல்லாமல் எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டதாக விளங்குகின்றது. அதை ஒரு பொருளாகவோ ஒரு மனிதனாகவோ விலங்காகவோ பறவையாகவோ எந்த வகையிலும் அடக்க முடியாது. எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் முன்னோர்கள் சொன்னது போல் அது எல்லையற்றது.
அந்தக் கடவுள் உணர்த்துகின்ற இன்னொரு பெரிய செய்தி என்னவன்றால், திருமந்திரம் என்ற நூல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த நூலிலே இந்தச் செய்தி சொல்லப் பட்டுள்ளது. நம்மவர்கள் நமது முன்னோர்கள் எழுதிய பண்டைய நூல்களை உள்ளபடியாகவே உணர்ந்து படித்திருப்பார்களேயானால் கண்டிப்பாக இந்த அறிய செய்திகளை அறிந்திருப்பார்கள். நம்மவர்கள் எளிய ஆட்கள் இல்லை. மிகப் பெரிய கருத்துகளையும் சிந்தனைகளையும் தத்துவங்களையும் வாரி வழங்கிச் சென்றவர்கள் நம்மவர்கள். அந்தத் திருமந்திர நூலில் பல பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்கள் எவற்றையும் தள்ளத் தக்கன என்று தள்ளிவிட முடியாது. எனவே அதில் குறிப்பிட்ட ஒரு பாடலைத்தான் நான் சொல்ல விருக்கின்றேன்.
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தானிருப்பானே!
இந்தப் பாடல் இடம் பெற்ற நூல்தான் திருமந்திரம். மிக அரிய கருத்துகளை தத்துவங்களை உள்ளடக்கிய நூல்தான் திருமந்திரம். ஆனால் அதை யாரும் படிப்பதில்லை. நமக்குக் கிடைத்த மற்றொரு அரிய நூல் திருக்குறள். பண்டைத் தமிழ் முன்னோர்கள் எழுதிய நூல்கள் பலவன. இரண்டை மட்டும் குறிப்பிட முடியாது. தொல்காப்பியம் என்ற நூல் இருக்கிறது. அது இலக்கணத்தையும் வாழ்வு இலக்கணத்தையும் குறிக்கிறது.அதுவும் மிகப் பெரிய வாழ்வியல் தத்துவங்களைக் குறிக்கின்ற நூல்தான். அதைச் சிலர் மொழிக்குள்ள இலக்கண நூலாக மட்டுந்தான் பார்ப்பார்கள். ஆனால் அது வாழ்வு இலக்கணத்தையும் மெய்யியல்களையும் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறது. அதில்தான் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்.
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே!
என்பது தொல்காப்பியத்தில் வரும் ஒரு பாடல் வரி. இந்த உலகத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரிக்கும் கண்டிப்பாக இறப்பென்று ஒன்று உண்டு. பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பென்று ஒன்று இருக்கும் . அது இயற்கை நீதி. அதிலிருந்து யாரும் மாறவும் முடியாது; விலகவும் முடியாது. இந்தப் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் இருப்பதுதான் வாழ்க்கை. இந்த தொடக்கம் முடிவு இரண்டுக்கும் நடுவில் மாந்தன் உழலுகின்றான்; வாழுகின்றான். அந்தப் பிறப்பு வாழ்க்கை என்பது எப்படி அமைய வேண்டும். பிறந்த ஒருவன் இறக்கும் போது எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் இந்த உலகத்தால் போற்றப் படுவான். அவனை சூழ்ந்திருக்கும் மக்களால் நினைத்துப் பார்க்கக் கூடியவனாக போற்றப் படக் கூடியவனாக இருப்பான் என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே இந்த வாழ்க்கை மிகவும் முக்கியம். இன்றியமையாதது.
இந்த வாழ்க்கை இலக்கணத்தைத் தெரியாதக் காரணத்தால் முறையாக வகுத்துப் படிக்காத காரணத்தால் இடையில் ஏற்படக் கூடிய பல்வேறு தடங்கல்களில் இந்த மனிதன் மாட்டி சிக்கிக் கொள்கிறான். எப்படிச் சிக்கிக் கொள்கிறான்? திருக்குறளில் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு மிக மிக இன்றியமையாதது அறம் என்று. அறம் என்றால் என்னவென்றால் மனத்தூய்மை. திருக்குறளில் வள்ளுவர் என்ன சொல்கிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீரப் பிற.
என்பது குறள். மனத்தூய்மை இல்லாத ஒருவன், அவன் பேசினாலோ செயற்பட்டாலோ எழுதினாலோ எப்படி இருந்தாலும் அவன் வெளிப்பாடுகள் என்றும் தூய்மையாக இருக்காது. ஏன் தூய்மையாக இல்லை? மனம் தூய்மையாக இல்லை. புரிகின்றதா? எனவே மனத்தூய்மை என்பது மிக மிக இன்றியமையாதது. மனம் தூமையாக இருக்க வேண்டும் என்றால் அந்த மனத்தைத் தூய்மை படுத்தக் கூடிய தூய்மையாகவே வைத்திருக்கக் கூடிய செய்திகளை அவன் பார்க்க வேண்டும்; கேட்க வேண்டும்; படிக்க வேண்டும். உண்மையா இல்லையா? என்றைக்குமே மனதைத் தூய்மையாக வைத்திருக்கக் கூடிய செய்தியைப் பார்க்க வேண்டும். என்றைக்குமே மன அழிந்து போகா வண்ணம் தூய்மையான சிந்தனைகளையும் கருத்துகளையும் நெறிகளையும் அவன் கேட்க வேண்டும். அப்படியான ஒன்றை அவன் கேட்க வேண்டும். அப்பொழுதான் அவன் மனம் தூய்மையாக இருக்கும். நெறியாக இருக்கும். தூய்மையுடைய ஒன்றுதான் அறமாகும்.
இந்த அறத்துக்கு மேலும் இலக்கணம் வகுத்துச் சொல்கிறார். என்ன சொல்கிறார் என்றால், ஒரு மனிதன் தள்ளத் தக்க கூடிய நான்கு கூறுகளையும் பின்பற்றக் கூடாது என்கிறார். என்ன அந்த நான்கு கூறுகள் என்றால். அழுக்காறு இருக்கக் கூடாது. ஒருவருடைய வளர்ச்சியிலோ பிறரைப் பார்த்தோ ஏற்றுக் கொள்ள முடியாமை. அவன் இப்படி சிறப்பாக வந்து விட்டானே நன்றாக வளர்ந்து விட்டானே என்று மனத்துக்குள்ளே ஏற்றுக் கொள்ள முடியாமை என்கின்ற அழுங்கல் மனப்பான்மை. அழுக்காறு என்றால் அழுக்கு வழி அல்ல. ஏற்றுக் கொள்ள முடியாமை என்று பொருள். அதனைப் பொறாமை என்றும் சொல்வார்கள். இதனால் ஒருவன் பிறருக்குக் கேடு செய்ய தொடங்கி விடுவான்.
தொடரும்

No comments:

Post a Comment