தொடர்பாளர்கள்

Monday, July 6, 2009

மீண்டும் விடுதலைப் புலிகள் உயிர்த்தெழுவார்கள் இரா.திருமாவளவன் வீர முழக்கம்.

எழுச்சிக் கவிதை படிக்கும் செல்வன் கனலன்.தீர்மானங்களை வாசிக்கும் இளந்தமிழன்

உயிர்த்தெழுவோம் பாடலுக்கு எழுச்சி நடனமாடும் இந்திராணி நடனப் பள்ளி மாணவர்கள்.



எரியும் தீப பிழம்பிலிருந்து பீறிட்டுச சிறகடித்துக் கிளம்பிய அக்கினிப் பறவையாய் மீண்டும் விடுதலைப் புலிகள் உயிர்த்தெழுவார்கள் என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் கோலாலம்பூரில் நடைப்பெற்ற உயிர்த்தெழுவோம் நிகழ்வில் உணர்வுப் பொங்க உரை நிகழ்த்தினார். பெரும் தீப் பிழம்பாய் வெடித்துச் சிதறிய களத்தில் அகப்பட்ட அக்கினிப் பறவை தன்னைத்தான் மண்ணுக்குள் புதைந்து தற்காத்துக் கொண்டது. அழிந்து விட்டது; இனி வரவே வராது என்று எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் இறுக்கமாக மூடியிருந்த சாம்பல் மேட்டைத் தகர்த்தெறிந்து பீறிட்டு வானை நோக்கிச சிறகடித்துக் கிளம்பியது. உலக வரலாற்றில் மிக முகாமையான விடுதலைப் போராட்ட வரலாறாக தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு அமைந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

உலகத்திற்குப் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். இன்று நாடற்றவனாகக் கிடக்கின்றான். நாதி இல்லாதவனாகக் கிடக்கின்றான். இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்தப் பின்னடைவு என்பது தமிழினத்திற்குப் புதியதல்ல. வரலாற்றில் எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையில்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குக் கிடைத்திராத தனிப் பெரும் தலைமகன் தவமகன் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கப் பட்டது. எதிரியிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்டெடுக்க தமிழ் மக்களை மீட்டெடுக்க அதன் வாயிலாகத் தமிழை மீட்டெடுக்க மிகவும் வீரம் செறிந்த ஈகம் நிறைந்த போராட்டமாக இது உருவாகியது.

புறநானூற்றில் ஒரு காட்சி வரும். அன்று யானைப் படையே மிகவும் வலிவுள்ள படையாகும். ஒரு வீரனானவன் தன்னை எதிர்கொண்டு வருகின்ற பாரிய வலிவு பொருந்திய யானைப் படையை எதிர்க்கத் துணிகிறான். இவன் கையிலிருந்த கருவிகள் தீர்ந்து போகின்றன. இருப்பினும் விம்மியும் அஞ்சாமல் விழித்தக் கண்ணோடு தன்னை நோக்கி எய்தப் பட்ட அம்பினை மிக மகிழ்ச்சியோடு பற்றிக் கொண்டு யானைப் படையை வீழ்த்துகிறான். இந்தப் புறநானூற்று வீரத்தைப் பெருமை பட பேசும் தமிழ்க் கூட்டம் அன்றைய சூழலை விட மிக மிகக் கொடிய கொத்துக் குண்டுகளையும் நச்சுக் குண்டுகளையும் வெள்ளைப் பொசியக் குண்டுகளையும் நெருப்புக் குண்டுகளையும் ௨0 நாடுகளின் துணையோடு வீசி சண்டைப் போட்ட சிங்களப் பேரினவாதப் படையை எந்தத் துணையும் இன்றி துணிந்து எதிர்த்து நின்று திக்கு முக்காட வைத்த எந்தமிழர் புலிப் படையின் உண்மை வீரத்தை எண்ணி எண்ணிப் போற்ற வேண்டும்.

இந்த ஊரறிய உலகறிய இலங்கையிலே தமிழர்கள் சிங்கள அரசால் இந்தியச் சதியால் பச்சைப் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். இலக்கக் கணக்கானோர் கொத்தடிமைகளாக ஆக்கப் பட்டுள்ளனர். முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப் பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் அடக்கு முறைகளுக்குள் உட்படுத்தப் பட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் வெளிநாடுகளில் எதிலிகளாக்கப் பட்டுள்ளனர். இந்த உலகத்தில் நீதியும் நேர்மையும் அறமும் உண்மையும் நிலைக்கின்றது என்பது உண்மையானால் இந்தக் கொடுங் கோன்மைகளுக்கு விடை சொல்லியே ஆகவேண்டும் என்று மேலும் விளக்கப் படுத்தியதுடன் எம் தலைவன் சாக வில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் உள்ளத்தில் உரம் சேர்க்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாடலைப் பாடிக் காட்டி எழுச்சியை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் நிவாரண நிதி அறங்காவலர் பசுபதி தலைமை ஏற்று தலைமை உரை வழங்கினார்.

1 comment:

  1. வணக்கம் தமிழியன்
    தங்களுடைய வலைப்பதிவைப்பார்த்தேன்.நன்றாக உள்ளது. தமிழின விடிவுக்காய் உங்கள் சேவை தொடரவேண்டுமென வாழ்த்துகிறேன்.
    மற்றும் மலேசியத்தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்றினைந்து தமிழ்த்தேசிய இனத்தின் விடிவிற்காய் போராடவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
    அன்புடன் வர்மன்

    ReplyDelete