தொடர்பாளர்கள்

Saturday, July 18, 2009

தமிழர்கள் படிக்கும் மக்களாக இல்லாமல் பார்க்கும் கூட்டமாக மாறிவிட்டார்கள். திருமாவளவன் பேருரை.

ஆசிரியர் சுந்தர் வழிநடத்துகின்றார்
பெரியவர் இரங்கசாமி தலைமை உரை ஆற்றுகின்றார்.


பேருரை நிகழ்த்தும் திருமாவளவன்

தமிழர்கள் படிக்கும் மக்களாக இல்லாமல் பார்க்கும் கூட்டமாக மாறிவிட்டார்கள். எனவே ஊடகங்களே அவர்களை இக்கால் ஆதிக்கம் செய்கின்றன. தமிழ்ப் பண்பாட்டையும் நெறியையும் அறத்தையும் கெடுத்துச் சீரழிப்பதே இன்றைய ஊடகங்களின் பணியாக இருக்கின்றன. வெறும் திரைப்பட மாயைகளையே நம்பி வாழும் கூட்டமாக நம் மக்கள் இன்று ஆகி விட்டார்கள். இதனால் அவர்களுக்குத் தமிழ் தமிழர் தொடர்பான வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெரிவதில்லை. என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் கடந்த ௧௮.0௭.௨00௯ ஆம் நாள் மலேசியத் தமிழ் நெறிக் கழக தெலுக் பங்க்ளிமா கரங் கிளையின் ஏற்பாட்டில் நடந்த எழுச்சி உரை கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார் .
தொடர்ந்து அவர் பேசுகையில் மிக நீண்ட காலமாக தமிழர்கள் இவ்வுலகில் எல்லாவற்றையும் இழந்து நாதியற்றவர்களாகி நாடோடிகளாகி இருப்பதற்குக் காரணமே வெள்ளைத் தோல்களையும் நீல விழிகளையும் நம்பி அவற்றுக்கு அடிமையாகி போனதேயாகும். எவ்வளவு உயர்ந்த இனம். உலகமெல்லாம் நாகரித்தைப் பரப்பிய இனம் . உலகமெல்லாம் தம் மொழியைப் பரப்பிய இனம். இன்று எவ்வாறு இருக்கிறது. எக்கேல் என்கின்ற பிரித்தானிய பேராசிரியர் உலக மாந்தன் தோன்றிய இடம் இன்று இந்தியாவில் தெற்கில் இருக்கின்ற கடல் பகுதிதான் என்றார். ஒரு காலத்தில் அது நிலமாக இருந்தது . தமிழரிடையே இன்று இருக்கின்ற மிகப் பழமை வாய்ந்த ஒரு நூல் தொல்காப்பியம். இத்தொல்காப்பியத்தில் ஏற்கனவே புலவர்கள் இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள். கூறிச் சென்றுள்ளார்கள் . என்றெல்லாம் எழுதியிருக்கிறார். அந்த நூல் எழுத பட்டக் காலம் ௨௭௫0 . அதிலே "வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம் என்று தொடக்கத்தில் எழுதப் பட்டிருக்கிறது. வடக்கே வேங்கட மலை என்றால் இன்றிருக்கிற திருப்பதியே . ஆனால் இன்று திருப்பதி தமிழர் கையில் இல்லை. தெற்கே குமரி என்பது குமரி மலையாகும். எனவே மிகப் பெரிய நிலப் பரப்பு தமிழர் ஆளுகையில் அன்று இருந்தது என்பதற்குத் தொல்காப்பியம் ஒரு சான்று. சிலப்பதிகாரத்தில்

பஃறு ளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங் கடல்
வடதிசை கங்கையும் இமயமுங் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி.


என ஒரு பாடல் வருகிறது. இப்பாடலில் மிகப் பெரிய நிலப் பரப்பு கடலுக்குள் மறைந்து போன வரலாற்றுச் செய்தி வெளிப்படையாகச் சொல்லப் பட்டுள்ளது. பின்னால் எக்கேல் சொன்ன செய்திக்கும் சிலப்பதிகாரப் பாடலுக்கும் பொருத்தம் இருப்பதை உணரலாம். இன்றுள்ள இந்தியாவுக்கு ஒரு காலத்தில் நாவலந்தீவு என்று பெயர். இந்தியா என்ற பெயரை வெள்ளைக் காரன்தான் சூட்டினான். இந்தியா முழுமைக்கும் தமிழர்களே வாழ்ந்திருந்தனர் என்பதற்குச் சிந்து வெளி நாகரிக வரலாறு ஒரு சான்று. ௫000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகந்தான் சிந்து வெளி நாகரிகம். அங்குக் கண்டெடுக்கப் பட்ட எழுத்துக்கள் தமிழ் எழுத்துகள் என்பதை பின்னாளில் உறுதி செய்துள்ளனர். பாகிதானுக்கும் மேலே பலுச்சித்தான் என்ற நாடு இருக்கிறது . அங்கு பேசப் படும் பிராகுய் எனும் மொழி திராவிட மொழி என நிறுவி இருக்கிறார்கள். இன்னும் செல்ல செல்ல சுமேரிய நாகரிகத்திற்கும் தமிழர் நாகரிகத்திற்கும் தொடர்பிருப்பதாக ஈராசு பாதிரியார் அவர்கள் கூறியிருக்கிறார். எனவே உலகம் பரவிய தமிழனுக்கு இன்று நாடு இல்லை. சேர சோழ பாண்டியர் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. எங்கே போனார்கள் அந்த பேரரசர்கள் . எங்கே போயின அவர்கள் ஆண்ட நாடுகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த பெருமைகளும் சிறப்புகளும் சொத்துகளும் இன்று தமிழனிடம் இல்லை.


அவற்றை மீட்டெடுக்கும் அரிய முயற்சியைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் செய்தார்கள். புறநானூற்றுக் கால போர் சூழலை விட மிகக் கொடியதான. இன்றைய போரில் வீரமிக்க நிலையில் போராடி வரலாற்று முத்திரையைப் பதித்தவர்கள் விடுதலைப் புலிகள். இன்று ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் மீறி காலம் தகுந்த விடையை விரைவில் வழங்கும் என்று மேலும் விரிவான விளக்கங்களை வழங்கி மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்தினார். மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தெலுக் பங்க்ளிமா கிளையின் ஏற்பாட்டில் நிகழ்ந்த இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்று தகவுரை வழங்கியவர் பெரியவர் அரங்கசாமி யாவார். நினைவுச் சின்னம் என்னும் சிறந்த வரலாற்று புதினத்தை எழுதிய பெருமைக்குரியவர்தான் அரங்கசாமி. அவருடைய அந்நூலினை தமிழர் ஒவ்வொருவரும் படித்து தெளிவு பெற வேண்டும் . சயாமிய மரண தொடர்வண்டி பாதை வரலாற்றைக் கருவாக வைத்து எழுதப் பட்ட நூல்தான் நினைவுச் சின்னம். நிகழ்வினை வழி நடத்திய ஆசிரியரும் செயலரும் ஆகிய சுந்தரம் அவர்கள் தமிழன் தற்கால சூடும் சுரணையும் இல்லாது நடைப்பிணமாக இருக்கிறான் என்றும் பிணத்திற்குத்தான் சூடு இருக்காது அதுபோல தமிழீழ மக்களுக்கு மிகப் பெரிய கொடுமை நேர்ந்த நேரும் போது உணர்வற்றவனாக இருக்கிறானே என்ற வேதனை நமக்கு இருக்கிறது என்று உணர்ச்சிப பொங்கக் கூறினார். திரு கதிரவன், திரு செழியன், திரு பழனி முதலானோரின் கடும் உழைப்பின் பயனாக இவ்வட்டாரத்தில் விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: