தொடர்பாளர்கள்

Thursday, July 23, 2009

காக்கத் தவறினோம்!
கழுவாய் தேடுவோம்!!


- பழ. நெடுமாறன்

உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு.

மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு கள் எல்லாவற்றிலும் சீனர்கள் பெருந் தொகையாக வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் செஞ்சீனம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது. எனவே இந்நாடுகளில் அவர்களுக்கு எதிராக சுண்டு விரலை அசைப்பதற்கு கூட மற்ற இனத்தவர்கள் அஞ்சுகிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையைத் தமிழகம் செவ்வனே செய்திருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது நல்லது.

இலங்கையில் மிக அண்மையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் சிங்கள இராணுவ வெறியர்களினால் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுப்ப தற்குக் குரல் கொடுக்க வேண்டிய தமி ழகம் அந்த கடமையை முழுமையாகச் செய்யவில்லை. இந்த இரங்கத்தக்க நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த 26-06-2009 அன்று தமிழகச் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க., பா.ம.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானம் முன் மொழியப்பட்டது. ‘சர்வதேசச் சட்டம் மற்றும் ஜெனிவா உடன்பாட்டில் உள்ள போர் விதிமுறைகள் ஆகியவற்றை முற்றிலுமாக மீறி அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர் களை கொன்று குவித்து ஓர் இனப் படு கொலையை இலங்கை அரசு நடத்தி யுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’

இத்தீர்மானம் எக்கட்சியின் நலன் சார்ந்த தீர்மானமும் அல்ல. ஈழத் தமிழர் நலன் பற்றிய தீர்மானமாகும். கட்சி எல் லைக் கோடுகளுக்கு அப்பால் அனைத் துக் கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சட்டமன்றப் பேரவையின் தலைவர் இத்தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போட் டார். உடனடியாக எடுக்க வேண்டிய இத்தீர்மானத்தை ஒத்தி வைத்ததற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

இலட்சக்கணக்கானத் தமிழர் களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை அரசை சர்வ தேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்த வேண்டியது தமிழனாகப் பிறந்த ஒவ் வொருவரின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை மறந்தும் துறந்தும் செயலாற்றுவது தமிழினத்திற்கு இழைக்கப்படுகிற துரோகமாகும்.

திட்டமிட்ட இனப் படு கொலையை சர்வதேச சமுதாயம் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இரண் டாம் உலகப் போரில் ஏற்பட்ட அத் தனை அழிவுகளுக்கும் காரணமான ஜெர்மானியத் தலைவர்களைப் போர்க் குற்றவாளியாக்கி விசாரணை செய்ய நூரம்பர்க் எனும் நகரில் விசாரணை நீதிமன்றமும் ஜப்பானியப் போர்க் குற்ற வாளிகளை விசாரிக்க டோக்கியோவில் விசாரணை நீதிமன்றமும் அமைக்கப் பட்டன. இந்த நீதிமன்றங்கள் வகுத்த வரைமுறைகளிலும் அய்.நா பேரவை நிறைவேற்றியத் தீர்மானங்களிலும் 1948-ஆம் ஆண்டு இனப் படு கொலையைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர் மானங்களும் இன்று வரையிலும் இப் பிரச்னையில் உலக நாடுகளுக்கு வழி காட்டி வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சம் சிலேவிய, யூத இனங்களைச் சேர்ந்த மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் வெள்ளை யர் ஆட்சியின் போது கருப்பினத்தைச் சேர்ந்த நீக்ரோ மக்களும் இந்திய மக்களும் இனப் படுகொலைக்கு ஆளானார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமித்தப் பகுதி களில் இருந்த எண்ணற்ற அராபிய மக் கள் இனப் படுகொலைக்கு ஆளாயினர்.

வியட்நாமில் அமெரிக்கப் படை யினர் வியட்நாம் மக்களை இனப் படுகொலை செய்தனர்.

சீனா திபெத்திய மக்களைக் கொன்று குவித்தது.

பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ் தானைச் சேர்ந்த வங்க இன மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்கிற்று.

அதைப் போல இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவ வெறி யர்களால் திட்டமிட்ட இனப் படு கொலைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் இத்தகைய இனப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காகவும் குற்ற வாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வ தேச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டு அய்.நா இதை அமைத்தது. அய்.நா-வின் பட்டயத்தில் இந்த அமைப்புக் குறித்தும், அதன் அதிகார வரம்புக் குறித்தும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அய். நா பேரவையும் பாதுகாப்புக் குழுவும் கூடி சர்வதேச நீதிமன்றத்திற்குரிய 15 நீதிபதி களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அய். நா-வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்க வேண்டும். ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் இதில் இடம் பெற முடியாது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹெக் நகரில் இயங்கும்.

1990-ஆம் ஆண்டில் போஸ்னி யாவின் கிழக்குப் பகுதியில் வாழும் சுமார் 40,000-க்கு மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னியா-செர்பிய இராணுவம் திட்டமிட்ட இனப்படுகொலைச் செய்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. யூகோசிலேவியா, செர்பியா ஆகியவற்றின் முன்னாள் அதிபரான சுலோ போடன் மிலோசெவிக் மற்றும் முக்கியமான 30 பேர்கள் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இடைக்காலத்தில் மிலோசெவிக் இயற்கையாக மரணம் அடைந்தார்.

2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் போஸ்னிய இனப்படுகொலை வழக்கில் திட்டமிட்ட இனப்படுகொலை நடை பெற்றிருக்கிறது எனத் தீர்ப்பு அளித்தது. மேலும் இவ்வழக்கில் பலர் தண்டிக்கப் பட்டனர். சிலர் விடுதலையாயினர்.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அய்.நா பேரவை நிறைவேற்றிய தீர்மானம் எண் 47/121-இன் படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இனப் படுகொலையேயாகும். இந்த தீர்மானத்தின்படி போஸ்னியாவில் செர்பி யர்கள் நடத்திய இனப் படுகொலைக் கண்டிக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27-ஆம் தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை போஸ்னியாவில் நடெைபற்ற இனப் படுகொலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

எனவே அய்.நா பேரவை, அமெ ரிக்க பிரதிநிதிகள் அவை, சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இனப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழகச் சட்டமன்றமும் இத்தகைய தீர் மானத்தை நிறைவேற்றுவது இன்றியமை யாததாகும். உற்றார் உறவினர் பெற்றோர் பிள்ளைகள் எல்லோரையும் இழந்து சாவின் விளிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இத்தகைய தீர்மானம் நம்பிக்கைக் கீற்றாக விளங்கியிருக்கும்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலைச் செய்த கொலைக்காரக் கும்பலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முயலும் என்பதை நிலை நிறுத்த ஒரே வழி தமிழகச் சட்டமன்றத்தில் இத்த கையத் தீர்மானத்தை நிறைவேற்றுவ தேயாகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலின் விளைவாக பெறும் விவா தம் மட்டும் நடத்தி பிரச்சனையத் திசை திருப்பியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

தி.மு.க தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி மட்டுமல்ல. மத்திய அரசை ஆளும் காங்கிரசுக் கூட்டணியில் தி.மு.க-வும் இணைப்பிரிக்க முடியாத அங்கமாக விளங்கி வருகிறது. அப்படி இருந்தும் ஒரு இலட்சம் தமிழர்களைக் காப்பாற்ற தி.மு.க தவறிவிட்டது. இதற்கு கழுவாய் தேடும் வகையிலாவது போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்க வேண்டும். அதையும் செய்ய தி.மு.க. தவறியது வரலாற்றில் என்றும் அழியாத கறையாகும்.

No comments:

Post a Comment