தொடர்பாளர்கள்

Thursday, June 4, 2009

வீழ்ச்சியுறும் தமிழினத்தில்

வீழ்ச்சியுறும் தமிழினத்தில்
எழுச்சி வேண்டும்

தமிழனென்று சொல்ல என்னையா வெட்கம்?

இரா.திருமாவளவன்

இக்கால் தமிழினத்தில் நேர்ந்துள்ள பாதிப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல எடுத்துச் சொல்ல தமிழினத்திற்குரிய அடையாளத்தை பெரும்பாலோர் இழந்து வாழ்கின்றனர்.இழந்து வாழ்கின்ற இழிவுடன் இவ்வினத்திற்கு நேர்கின்ற எத்தகு இன்னல்களையும் உணராதவர்களாயும் அப்படியே தெரிந்தாலும் அதுபற்றி அக்கறை இல்லாதவர்களாயும் எங்கே என்ன நடந்தால் எனகென்ன என்ற பொறுப்பற்ற எண்ணத்தினராயும் தமிழர்கள் வாழ்கின்றனர்.மொத்தத்தில் தமிழன் தமிழனாக வாழவில்லை.தமிழனிடத்தில் தமிழன் என்று அழைக்க வேண்டும் என்பதற்காகவே போரட வேண்டியிருக்கிறது.


மலேசியாவில் அரசியல் பட்டயத்தில் தமிழருக்குத் தமிழர் என்று பெயர் கிடையாது. இந்தியாவிலிருந்து இங்குக் குடிப்பெயர்ந்த மக்களுக்குள் 85 விழுக்காட்டினர் தமிழர்கள். எஞ்சியோர் ஏனைய மொழி பேசும் மக்கள். இந்த எஞ்சிய 15 விழுக்காட்டு மக்களுக்காக நாம் தமிழர் என்று அழைக்கக் கூடாது; நாம் நம்மை இந்தியர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று தமிழனே கூறிக் கொண்டிருக்கிறான். சிலர் தமிழர் என்று சொல்வது குறுகிய மனப்பான்மை என்கின்றனர். அடிமை போக்கும் எண்ணமும் கொண்ட உணர்விழந்த அகக்குருடர்களால் தமிழன் என்ற வரலாற்றுப் பெயர் குறுகிய வட்டமாக்கப்பட்டுள்ளது. இதைவிட பேரிழிவு எங்கேனும் உண்டா? இந்தியன் என்பது இனப்பெயரா? மொழி வழி வந்த பெயரா? அந்தச் சொல்லைப் பிரித்தாலே இந்தி - அன் என்றுதான் வரும். இதில் அடங்கி இருக்கின்ற மொழிப்பெயர் இந்தி என்பதே. இது எப்படித் தமிழனுக்குப் பொருந்தும். செர்மன் மொழி பேசுவோர் செர்மானியர் என்றும்; மலாய் மொழி பேசுவோர் மலாயர் என்றும்; பிரஞ்சு மொழி பேசுவோர் பிரஞ்சியர் என்றும், அழைக்கப்பெறுவதைப் போல தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரைத் தமிழர் என்றுதான் அழைக்க வேண்டும்.


இங்குக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வருந்தத்தக்க செய்தி என்னவென்றால் தமிழன் என்றே சொல்லக்கூடாது என்று வரலாறு அறியாத அறிய விரும்பாத சிலர் தமிழரிடமே கூறித்திரிவதும் அவரோடு சேர்ந்து தமிழரும் அவ்வாறு அழைக்கக்கூடாது என்பதுதான்.

இந்நிலையில் திட்டமிட்டே சிலர் இப்பரப்புரையினை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய ஆரிய அடிமையாய் விளங்கிக் கொண்டிருப்பவரும் தமிழர் அல்லாத சிலருமே இவ்வேலையைச் செய்கின்றனர். இவ்வாறு செய்தால் தமிழர் என்ற மொழி இன உணர்வைச் சிதைத்து விடலாம் என்பதும் அதன் வயிலாகத் தமிழரை என்றென்றும் ஆளுமை செய்யலாம் என்பதும் இவர்களது கனவு. தமிழினம் தனித்தேசிய இனமாகும். வரலாற்றுக் காலத்துக்கும் முற்பட்டக் காலத்திலிருந்து இன்றுவரை தனித்து அடையாளங் கூறப்பட்ட இனப்பெயரே தமிழன் என்பது. கிரேக்கர்களும் ஏனைய பிற மக்களும் தமிழரைத் தமிரிகே, தமிழி, தமிரிசு, தம்லுக், சீ மோ லோ என்று அழைத்துள்ளனர். திராவிடர் என்ற சொல்லும் தமிழர் எனும் சொல்லிலிருந்து மருவியதுதான். வரலாற்று ஆய்வின்படி தமிழர் என்பதே தமிழரின் தனி தேசிய பெயராகும். இந்தியன் எனும் சொல் பிற்காலத்தில் சிந்து எனும் சொல்லிலிருந்து பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது. சிந்து- ஹிந்தஸ்- ஹிந்தி - ஹிந்தியன் என்பதே அதன் சொல் வளர்ச்சி. பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒருசேர ஆள வேண்டும் என்ற எளிமை நோக்கில் இந்தியா என்றும் அந்நாட்டில் வாழ்பவரை இந்தியர் என்றும் அழைத்தனர்.

தமிழரின் சங்க இலக்கியங்களிலோ பத்தி இலக்கியங்களிலோ வட நாட்டு புராணங்களிலோ இந்தியர் என்ற சொல்லைக் காட்ட முடியாது. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பே இந்தியா என்கின்ற நாடும். இந்தக் கூட்டமைப்பில் வாழ்கின்ற ஏனைய இனங்களில் பல இந்தியர் என்றே அழைத்துக் கொள்வதில்லை; “பஞ்சாபியர்” தங்களைத் தனித் தேசிய இனமாக அறிவிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விட்டனர். மலேசியாவில் வாழ்கின்ற சீக்கியர் ஒரு போதும் இந்தியர் என்று அழைத்துக் கொள்வதில்லை.

தமிழன் மட்டும் எங்கும், எப்பொழுதும் இளித்தவாயனாக, அடிமையிலும் அடிமையாக கொஞ்சமேனும் இன உணர்வு இல்லாதவனாகக் கிடக்கின்றான். தமிழர் தங்களை இந்தியர் எனும் போலிக் கூட்டுக்குள் அடைத்துக் கொள்வதாலும் அடைந்திருப்பதாலும் தன்னின மேன்மைக்குரிய அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளனர்; இழந்து கொண்டுள்ளனர். இந்தியர் கூட்டுக்குள் அடைப்பட்ட தமிழன் அடுத்தவனுக்கு வாய்ப்பைக் கொடுத்துவிட்டு, இழந்துவிட்டு ஓட்டாண்டியாய் வாழும் நிலையே தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலை மாற நாம் தமிழர் என்ற சிந்தனைக்குள் தமிழர் ஒருங்கிணைய வேண்டும். எங்கும் எதிலும் தம்மைத் தமிழர் என்றே அழைக்க் வேண்டும். குறிக்க வேண்டும்.

தமிழியன் :- என்ன செய்வது சொந்த இனப் பெயரையே மறந்து போன வெட்கக் கேட்டைத் தமிழினத்தைத் தவிர உலகில் வேறு எந்த இனத்திலும் காட்ட முடியுமா? உணர்வானா தமிழன்?

No comments:

Post a Comment