தொடர்பாளர்கள்

Friday, August 14, 2009

ஒழுக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி சிந்திக்கத் தூண்டுவதே உண்மைச் சமயமாகும்! திருமாவளவன் உரை முழக்கம். தொடர் 3

இவற்றையெல்லாம் வகுத்துக் கொடுத்தவர் யார்? இந்த நெறிகளை வகுத்தவர்கள் தமிழர்கள். என்றைய தமிழர்கள்? பண்டைய தமிழர்கள். பண்டைய தமிழன் எழுதி வைத்திருக்கிறான் அதனால் இன்றைய தமிழன் பாதுகாக்கப் பட்டு வருகின்றான். இன்றைய தமிழன் ஒன்றும் படைக்கவில்லை. அந்த நெறிகளெல்லாம் இன்றைய தமிழனை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழன் என்றால் எப்படிப் பட்ட இனம் என்று நாம் வேறு இனங்களுக்குக் காட்டுவதாக இருந்தால் இன்றைய தமிழனை வைத்துக் காட்ட முடியாது. ஏனென்றால் இவன் ஒரு நெறியில் இல்லை. ஒரு வாழ்க்கையில் இல்லை. ஒரு பண்போடு இல்லை. தன் பண்பாட்டைப் பாதுகாப்பவனாக இன்றைய தமிழன் இல்லை. தன் மொழியைப் போற்றுகின்றவனாக பாதுகாக்கின்றவனாக இன்றைய தமிழன் இல்லை. தன் மொழியைத் தானே அழிப்பவனாக இன்றைய தமிழன் இருக்கின்றான். அன்றைய தமிழன் அப்படி இல்லை. அவனைத்தான் இமையத்தின் உச்சியில் வைத்துப் போற்ற வேண்டும். அவன்தான் நம்முடைய வாழ்வியல் நெறிகளையெல்லாம் உலகத்துக்கே வாரி கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.
பண்டைய நூல்களைப் பார்த்தீர்களேயானால் பெரும்பாலும் உலகு உலகு என்றுதான் தொடங்கும். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. என்று உலகை நோக்கித்தான் சொல்லியிருக்கிறான். தனிப்பட்ட மனிதர்களை இனங்களை குழுக்களைக் குறிப்பிடவில்லை. இதைப் பார்த்துதான் மற்றவர்களும் உலகப் பொதுமையைக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழர்கள் தமிழர்களுடைய நூல்களையும் அடையாளங்களையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளாத காரணத்தால் உண்மையை உணர்ந்து கொள்ளாத காரணத்தால் இன்றைய தமிழன் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். இன்று இவனுடைய மொழியைப் பாதுகாக்கவில்லை, பண்பாட்டைப் பாதுகாக்கவில்லை, இவன் நாகரிகத்தைப் பாதுகாக்க வில்லை. எல்லாவற்றையும் தெருவில் தூக்கி எறிந்து விட்டு தெருவில் நிற்கிறான். அடுத்த பண்பாட்டின் மீது மோகம் கொண்டு அதைத் தனது வாழ்க்கையாகக் கருதிக் கொண்டு இருக்கின்றான். இவனுக்கு உயர்வாக இருந்த நாட்டையே அடுத்தவனிடத்தில் கொடுத்துவிட்டு தெருவில் நிற்கின்ற இனமாக இருக்கின்றான். நமக்கென்று ஒரு நாடு இருக்கின்றதா? இவ்வுலகில் தமிழனுக்கென்று ஓர் ஊர் இருக்கின்றதா? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்? ஒரு காலத்தில் இருந்தன. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று ஒரு காலத்தில் சொன்னோம். பெரும் பெரும் சேர சோழ பாண்டிய மன்னர் எல்லாம் படையெடுத்து இமையம் கடாரம் வரை சென்று ஆண்டார்கள் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இன்று நம்முடைய நாடு, நம்முடைய படை, நம்முடைய அரசு என்று இன்றைக்கு அறவே இல்லை. இவனுடைய ஏமாளித் தனத்தால் இவனுடைய பெருமைகளையும், இவனுடைய பண்பாடுகளையும், இவனுடைய நெறிகளையும் போற்றிக் கொள்ளாத இழிவு தனத்தால் அடுத்தவனுக்கு அடிமையாகி மிகக் கேவலமான நிலையில் கிடக்கின்றான். எந்த நாட்டில் வாழ்கிறானோ அந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப அடிமையாகி விடுகின்றான். இதனால் இவனுடைய நடை உடை பாவனை எல்லாம் மாறி பாய் விட்டன. தமிழையே வீட்டில் பலர் பேசுவதில்லை!
இது பற்றியெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் மொழியில்தான் சமயத்தின் அருமையை மிகத் தெளிவாக வேறு எவரும் மறுக்க முடியாத அளவிற்கு ஒழுங்கு படுத்திக் காட்டியிருக்கின்றான். வேறு எங்கேயும் இவ்வாறு பார்க்க முடியாது. நான் சொன்னேன் இல்லையா? தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னை அர்ச்சிக்கத் தான் இருப்பானே! என்பது திருமந்திரத்தின் ஒரு பாட்டு. இதன் பொருள் என்ன? உங்களை நீங்கள் உணர வேண்டும். உங்களுக்குளாகவே இருக்கின்ற ஆற்றலை நீங்கள் உணர வேண்டும். அதற்குப் பேர்தான் கடவுள். நீங்கள் உங்களையே கடந்து பாருங்கள். உங்களையே உணர்ந்து பாருங்கள் என்று சொல்கிறான். இந்தச் சொல்லுக்கு மேல் நாட்டுக் காரன் இப்பொழுது self realization என்று சொல்கிறான். தன்னை அறிதல் என்றால் என்ன? தனக்குள் இருக்கும் மாபெரும் சக்தி என்றால் என்ன? என்று ஆராய்ச்சிப் பன்னி கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறான் .

அண்டப் பெருவெளியின் உண்டைப் பிறக்கம்

என்று திருவாசகத்தில் ஒரு வரி வரும். இந்த அண்டப் பெருவெளி பற்றி பலரும் பாடியிருக்கிறார்கள். நம்முடைய தாயுமானவர் சுவாமிகள் பாடியிருக்கிறார். நம்முடைய வள்ளல் பெருமான் அருட்சுடர் இராமலிங்க அடிகளார் பாடியிருக்கிறார். இந்த அண்டப் பெருவெளியைப் பற்றி ஒட்டுமொத்தமாக ஒரு கருத்து சொல்கிறார்கள். என்னவென்றால் அதற்கு எல்லையில்லை. அதற்கு முடிவு கிடையாது . இந்த இடத்திற்கு முடிவு உண்டு. ஆனால் அண்டப் பெருவெளிக்கு எல்லைவகுக்க முடியாது. இந்த இயற்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்த வெளி நாட்டுக் காரர்கள் இத்தனை நான்காகப் பகுத்து வைத்திருக்கிறார்கள். கிரேக்க அறிஞர்கள் இவாறுதான் குறிப்பிட்டார்கள் . சாக்கரடீசு சொல்லும் தத்துவத்தில் நான்குதான் குறிப்பிடப் பட்டுள்ளது. என்ன அந்த நான்கு என்றால் நிலம் , தீ , நீர், வளி என்பனவே அவை. நிலம் என்பது மண். நீர் என்பது தண்ணீர், தீ என்பது நெருப்பு . வளி என்பது காற்று. ஆனால் தமிழன் எத்தனை தெரியுமா சொல்லியிருக்கின்றான்? ஐந்தாக பிரித்து வைத்திருக்கின்றான். அவற்றை ஐந்து பூதங்கள் என்று சொன்னான். பூதம் என்றால் பேய் என்று பொருள் அல்ல .
தொடரும்

1 comment:

 1. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  ReplyDelete