தொடர்பாளர்கள்

Wednesday, August 5, 2009

ஒழுக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி சிந்திக்கத் தூண்டுவதே உண்மைச் சமயமாகும்! திருமாவளவன் உரை முழக்கம். தொடர் 2


தொடர்ந்து அவா இருக்கக் கூடாது என்கிறார். அவா என்றால் பேராசை. அளவுக்கு மீறிய ஆசை. அளவுக்கு மீறிய ஆசை பட்ட ஒருவன், தன்னையும் கெடுத்துக் கொள்வான். மற்றவனையும் கெடுத்து விடுவான். ஆசை என்ற வெறியால் அவன் தன்னையும் அழித்து மற்றவனையும் அழித்து விடுவான். இதனால்தான் மனிதன் சீர் கெடுகிறான்; இவ்வுலகமும் சீர் கெடுகிறது. நம்மவர்கள் மும்மலம் என்று கூறுகிறார்கள் அல்லவா? மும்மலம் என்றால் என்ன? தள்ளத் தக்க மும்மலம் என்றால், ஒன்று மண்ணாசை, மற்றது பெண்ணாசை, இன்னொன்று பொன்னாசை. தனக்கு வாழ்வதற்கு நிலம் வேண்டும் என்று எண்ணுவது தப்பில்லை. ஆனால் தனக்கு மட்டுமே வேண்டும் எண்ணுவது தப்பு. அதே போல் ஆண் பெண் விருப்புகள் இயல்பானவை. அதில் ஒழுக்கமும் நெறியும் இருக்க வேண்டும். வெறி இருந்தால் அழிவுதான் ஏற்படும். மூன்றாவது பொன்னாசை. பொன்னாசை என்பது பணத்தைக் குறிக்கும். பண வெறி இந்த மாந்தனை எந்த அளவுக்கு அலைக்கழிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். கொலை கொள்ளை முதலான பல்வேறு கேடுகள் இந்தப் பண வெறியினால் ஏற்படுகின்றன.

மாந்தன் வளர்கின்ற பொழுதே அவனுடைய சிந்திக்கின்ற அறிவால் மனவளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இவை இரண்டும் ஒழுங்காக அமைந்தால்தான் ஒருவன் சரியான விடை காண முடியும் சரியான முடிவு காண முடியும். ஆனால் ஒழுங்கு முறை அமையாததற்கு அவனுடைய ஆசைகள் தடையாக இருக்கின்றன. அவன் வளரும் போதே அறிவைத் தேர்ந்தெடுப்பதற்கு மாறாக ஆசையின் தூண்டுதலால் அறிவு கெட்ட வேலையைச் செய்யத் தொடங்கி விடுகின்றான். அறிவுடையவனாக அவன் ஆவதில்லை. சிந்தனையுடையவனாக ஆவதில்லை. சிந்தனை அவனுக்குப் பிறப்பதில்லை. அறிவு அவனுக்கு நிரம்புவதில்லை. ஏனென்றால் இது போன்ற தடைகள். இந்த மூன்று வகையான பேராசைகளாலும் ஒருவனுக்கு கெடுதல்கள் வந்து சேர்கின்றன. இதுவே அவா என்று சொல்லப் படும். இந்த அவா மாந்தனுக்கு இருந்தால் மனிதன் மனிதனாக வாழ மாட்டான். மற்றவனையும் வாழ விட மாட்டான். அழிக்கத் தொடங்கி விடுவான்.

மூன்றாவது வெகுளி. வெகுளி என்றால் என்ன? அளவுக்கு மீறிய சீற்றம். அதாவது தமது அறிவையே கெடுக்கின்ற ஆத்திரம். இதற்கு ஆட்பட்ட ஒருவனுக்கு அறிவே வேலை செய்யாது. இதனால் இவனும் மற்றவனுக்குக் கெடுதல் செய்து விடுவான். வெகுளி என்று சொன்னால் பொதுவாக நாம் என்ன நினைப்போம்? ஒன்றும் தெரியாதவன் என்று நினைப்போம். ஆனால் இங்கு வெகுளி என்பது எல்லை கடந்த ஆத்திரம் என்றுதான் பொருள். ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். அளவுக்கு மீறிய ஆத்திரம் கொள்வதால் ஒருவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியாது. அவனுக்கே தெரியாமல் போய்விடுகின்ற காரணத்தால் அவன் தனக்கும் கேடு செய்து விடுவான். மற்றவனுக்கும் கேடு செய்து விடுவான். எனவே அந்த வெகுளியும் இருக்கக் கூடாது என்கிறார் வள்ளுவர். தொடர்ந்து நான்காவதாக இன்னாச் சொல் என்கிறார். இன்னாச் சொல் என்பது பிறருக்குக் கெடுதல் தருகின்ற சொல். இதனைப் பேசக் கூடாது. பிறருக்குப் பழியைத் தருகின்ற சொற்களைப் பேசக் கூடாது. ஒருவன் நல்லவனாக இருப்பான். ஆனால் அவனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறி பழியை ஏற்படுத்துவது. இன்னலை ஏற்படுத்துவது. துன்பம் தருகின்ற சொற்களைப் பேசுவதாலேயே ஒருவனுக்கு இன்னல் நேர்ந்து விடும். தொல்லைகள் நேர்ந்து விடும். உண்மையாக இருக்காது ஆனால் பொய்யானக் கருத்துகளைச் சிலர் மீது இட்டுக் கட்டிச் சொல்லி விடுவார்கள். இதனால் ஒருவன் வாழ்க்கையையே கெடுத்து விடுவார்கள்.


இந்த நான்கு கூறுகளும் கேடுகளும் இல்லாமல் வாழ்வதுதான் அறம். இந்த நான்கையும் அகற்றிவிட்டு பார்க்கும் போது ஒருவன் தூய்மையாக வாழ முடியும் . அதற்குப் பெயர்தான் அறம் என்று சொல்கிறார் வள்ளுவர். எனவே ஏன் நான் இந்த அறத்தைப் பற்றி இங்கே சொல்கின்றேன் என்றால் பிறந்தது முதல் இறப்பது வரை ஒரு மனிதன் அற வாழ்க்கை வாழ வேண்டும். அப்போதுதான் அவன் இறந்து விட்டான் என்றால் அவன் இறப்புக்கு ஒரு பொருளிருக்கும். அவன் இறந்த பிறகும் நான்கு பேர் அவனைப் பற்றிப் பேசுவார்கள். நான்கு பேர் மட்டுமல்ல இந்த உலகே பேசும். மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். என்று ஒரு பாடல் இருக்கிறதா இல்லையா ? உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம். மிக அருமையான பாட்டு. இன்னொரு பாட்டு நான் ஏன் பிறந்தேன் இந்த நாட்டிற்கு நலம் என்ன புரிந்தேன் என்பதுதான் அந்தப் பாட்டு. பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமை பட வேண்டும். உன்னைப் பெற்றதனால் மற்றவராலே அவள் போற்றப் பட வேண்டும். கற்றவர் சபையினில் நீ நடந்தால் தனி இடமே தர வேண்டும். உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் இந்த உலகே அழ வேண்டும். இது அந்தக் காலத்தில் எழுதப் பட்டப் பாட்டு.

அக்காலத்தில் திருக்குறளை அடிப்படையாக வைத்துப் பாடல்களைப் புனைந்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்று.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்டத் தாய்

என்ற குறளையும் அந்தப் பாடலையும் பொருத்திப் பாருங்கள். தொடர்பிருப்பதை உணரலாம். எனவே ஒரு மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் வளர்கின்ற போது நல்ல சிந்தனைகளையும் நெறிகளையும் அவனுக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தோமானால் அவன் இறக்கும் போது நல்ல புகழையும் நல்ல பேரையும் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் எந்த இனத்தில் பிறந்தானோ அந்த இனத்திற்கும் அவன் நாட்டிற்கும் இந்த உலகத்திற்கும் தேடித்தந்து இறப்பான். அந்த இறப்புக்கு ஓர் அர்த்தம் உண்டு. அதனால்தான் தொல்காப்பியர் அவ்வாறு சொன்னார். சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன் என்று. அது எளிய வரியா? சாதாரண வரியா? ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்ட நூல் அது. அந்த தொல்காப்பிய நூலில் சொல்லப் பட்ட செய்திதான் அது. நீ இறந்தாய் என்றால் அந்த இறப்புக்குப் பயன் என்ன தெரியுமா? நீ சிறந்தது பயிற்றியிருக்க வேண்டும். இந்த உலகத்திற்கு இந்த ஊருக்கு உன்னுடைய வாழ்க்கையால் நன்மை கிடைத்திருக்க வேண்டும். நாலு பேரு நன்றாக வாழ வேண்டும். இந்த நல்ல நெறிகளை நாம் இந்த உலகத்தில் விதைத்துச் செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் வள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.


உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

நீ உள்ளத்தால் பொய்யாது வாழ்வாயானால் உலகமே போற்றுகின்ற அளவில் நீ வாழ்வாய். வெறும் வாயளவில் மட்டுமல்ல உள்ளத்தளவிலும் ஒருவனிடம் பொய்மை இருக்கக் கூடாது. உள்ளத்தளவில் ஒருவன் பொய்யாது இருந்தால்தான் அவன் உலக வாழ்க்கையிலும் பொய்யாது இருப்பான். உள்ளத்திலும் உதட்டிலும் பொய்யிருப்பது பொய்த்துப் போன வாழ்க்கையாகும். போலியான வாழ்க்கையாகும் நடிப்பிற்காக வாழும் வாழ்க்கையாகிவிடும். அதனால்தான் நாம் சொல்கிறோம் சும்மா பேச்சு மட்டுந்தான் அவனுக்கு என்று. ஏன் அவன் உள்ளத்தில் வேறு, உதட்டில் வேறு, நடத்தையில் வேறு. அப்படி ஒருவனுடைய வாழ்க்கை இருக்கக் கூடாது. சமயத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?


உண்மை இல்லை என்றால் ஏது சமயம்? நல்ல நெறியும், நல்ல ஒழுக்கமும், நல்ல பண்பாடும், நல்ல மாண்பும், நல்ல சிந்தனையும் இல்லையென்றால் அது சமயம் அல்ல. உண்மை நெறிக்குப் புறம்பானது சமயமாகாது. அதற்கு அப்பாற்பட்டதல்ல சமயம். அதை உள்ளடக்கியதுதான் சமயம். உணமைதான் சமயத்திற்கு அடிப்படை. சமயம் என்றாலே என்ன? பண்படுதல் என்றுதான் பொருள். சோறு சமைந்து விட்டதா என்று கேட்போம். ஏன் எதற்கு? சாப்பிடுமளவிற்கு சமைந்து விட்டதா? பக்குவம் அடைந்து விட்டதா? அதனால்தான் தமிழன் அதற்குச் சமையல் என்று பேர் வைத்திருக்கிறான். நல்ல சமயம் வந்தால் வருகிறேன் என்று சொல்வோம். அப்படி என்றால் என்ன? அதற்குரிய நேரம் வந்தால் நான் வருகிறேன் என்று பொருள். அதனால் தகுந்த நேரத்திற்குச் சமயம் என்று பேர் வைத்தான். பெண் பூப்படைந்து விட்டால் சமைந்து விட்டால் என்று கூறுவார்கள். வாழ்வின் பேற்றுக்குரிய பக்குவ நிலையை அடைந்து விடடாள் என்று பொருள். தமிழில்தான் இத்தகைய பொருள் பொதிந்த சொற்களைப் பார்க்கலாம். எனவே வாழ்க்கையில் நல்ல ஒழுக்கத்தையும் நல்ல நெறிகளையும் நல்ல பண்புகளையும் தெரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு அந்த வாழ்கையை ஒழுக்கமுடைய வாழ்க்கையாக வாழ்கின்ற முறை இருக்கின்றதல்லவா? அதற்குப் பேர்தான் சமயம். நான் பெரிய சமயவாதி என்று கூறிக் கொண்டு காட்டிக் கொண்டு ஆனால் வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அதற்குப் பெயர் சமயம் அல்ல. அவ்வாறு ஒழுங்கீனங்களைச் சொல்வதும் சமயமாகாது.

தொடரும்

No comments:

Post a Comment

There was an error in this gadget
There was an error in this gadget