தொடர்பாளர்கள்

Friday, November 27, 2009

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை


தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2009


எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.

அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக் காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது. தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நிலஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக்கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

எமது மக்களின் இந்த இழப்புக்களையும், ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.

அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதான இனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள். அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின. உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற் கருக்கினார்கள். முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின் முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்தது. ஈழத்தமிழரின் அழிவையும் அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின் போராட்டங்கள் பலனற்றுப் போயின.

உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றி, மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.

சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல், இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தன.

இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.

இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.

இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல், உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல், தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பது, அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரை, புலிகளின் பிடியில் இருந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம் வேடிக்கையானது. தமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு , சொத்திழப்பு, வாழ்விட இழப்பு, சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.

எமது பாசமிகு தமிழ் மக்களே,
வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவது, கைது செய்வது, கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.

1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம், குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரிய மனிதப்பேரழிவைச் செய்து, தமிழர்களின் மனவுறுதியை உடைத்து, தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம், தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்து, இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடு, மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும், சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
அதேநேரம், தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்து, புதிய சூழல்கள், புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளை, எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான தமிழீழ மக்களே, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

No comments:

Post a Comment