ஊழினை வென்ற பெருந்தலைவர்
ஆக்கம்
இரா.திருமாவளவன்
ஆக்கம்
இரா.திருமாவளவன்
1.0 தமிழினம் நாகரிக முதிர்ச்சி அடைந்த பழம் பேரினம்.
இவ்வுலகில் வரலாற்றுப் பெருமை மிக்க இனங்களுள் தொன்மையும் முன்மையும் கொண்ட பழம் பேரினம் தமிழினமாகும்.
தனித்தன்மை கொண்ட உயர்தனிச்செம்மொழியும், நயத்தகு நாகரிகம் கொண்ட பண்பாடும், ஈடு இணை சொல்ல முடியாத வீரமும் அறவாழ்வும் இலக்கிய வளமும் எல்லா செல்வமும் கொழித்த எழில்மிகு நாடும் கொண்ட பேரினமே தமிழினம்.
சீரும் சிறப்பும் பெற்று, ஒப்பாரும் மிக்காரும் இல்லா வகையில் ஓங்கிய புகழ் சொல்லி வாழ்ந்தவன் தமிழன் என்பதை, தமிழ் கூறு நல்லுலகில் பொன்னே போல் கண்ணே போல் காக்கப் பெற வேண்டிய இலக்கியங்கள் மெய்ப்பிக்கின்றன. இந்திரர் அமிழ்த மெனினும் தனித்துண்ணா பெரும் பண்பும், பெரியோரென்று வியக்காமலும் சிறியோரென்று இகழாமலும் வாழ்ந்த மாண்பும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுமைச் சிறப்பும் மானமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த மறமாண்பும் இவ்வினத்திற்கன்றி யார்க்கு வரும்.
2.0 தமிழர் இன்று அடிமையாயினர்.
அனைத்தாலும் சிறப்புற்று இவ்வுலகில் மகிழ்ந்துலாவி வாழ்ந்த நம் அருந்தமிழ் இனம் இன்று எவ்வாறு உள்ளது? எல்லாம் இருந்து செல்வச் செழிப்பால் கொழித்து வாழ்ந்த பெருஞ்செல்வன் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த நிலையே இற்றைத் தமிழர் நிலை. குமரிப் பெருநிலத்தில் 49 நாடுகள் வைத்து ஆண்டவன் இன்று ஒரு துளிமண் கூட இல்லாமல் வாழ்கிறான். கி.பி. 1025 ஆம் ஆண்டு கால வட்டத்தில் தென்கிழக்காசியப் பகுதிகளில் பதினையாயிரம் தீவு நாடுகளைத் தன்னகப் படுத்தி வாழ்ந்தவன் இராசேந்திரச் சோழன். கடாரப் பேரரசை இவ்வட்டாரத்தில் நிறுவி தன் ஆற்றலை வெளிக்காட்டிய தமிழனுக்கு இன்று ஒரு துளி மண் கூட சொந்தமில்லை.
தமிழினம் ஆளுமை இழந்த இனமாகவும், அதிகாரம் இழந்த இனமாகவும் அரசினை இழந்த இனமாகவும் பிறரால் ஆளப்படும், அடிமைப்படுத்தப்படும் இனமாகவும் இன்று கிடக்கின்றது.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
என்பது தமிழ்மறை
தன் கையில் இருந்த வேலையும் களிற்றின் மேல் எறிந்து வெறுங்கையனாக நின்ற போது தன் மார்பில் பாய்ந்த வேலினை மிக மகிழ்வோடு பற்றி போர் புரிந்தானாம் வீர மறவன் ஒருவன். இது திருக்குறள் கூறும் பண்டைத் தமிழனின் வீரம் அத்தகு வீர மரபினர் பிற்காலத்தில் அயலார்க்கு அடிமை பட்ட வரலாறே வியப்பிலும் வியப்பானது. ஆரியர்க்கும் மோரியர்க்கும் முகலாயர்க்கும் ஆங்கிலர்க்கும் தம்மில் பிரிந்த திராவிடர்க்கும் அடிமைப்பட்டு மிடிமையுற்று எல்லாம் இழந்தனர் தமிழர். வீரமிக்க இனம் வீறு கொண்ட இனம் எதிர்த்துப் போரிடும் வல்லமையின்றி அஞ்சியஞ்சிச் சாகும் இழி நிலைக்கு ஆளானது.
தமிழனை அடிமைப்படுத்தியவர்கள் தமிழனின் குருதியை உறிஞ்சினர். பல்லாயிரக் கணக்கானத் தமிழரைத் தம் நாட்டு நலனுக்காகப் போர்ப்படையில் சேர்த்து அவரின் எதிரிகளோடு மோதவிட்டனர். பிரஞ்சியர் படையிலும் ஆங்கிலேயர் படையிலும் சுபாசு சந்திர போசு படையிலும் சேர்ந்து அவர்களுக்காகப் போரிட்டு மடிந்த தமிழர் பலர். மலேசியாவில் சப்பானியர் நலனுக்காக ஆயிரக் கணக்கானவர் சயாமிய தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பொருட்டுக் கட்டாயமாகக் கொண்டு செல்லப் பட்டு திரும்பி வராமலேயே இறந்து போயினர்.
'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைக் கெட்ட மனிதரை நினைத்து விட்டால் '
என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடியது போல வீரத்தோடு வாழ்ந்த இனம் வீர மரபணுவையே இழந்த இனமாகப் பின்னால் இவ்வுலகில் வாழலாயிற்று.
3.0 ஊழின் வலிமை
முந்தையோர் விட்ட பெரும் பிழையினால் வீரமிகுந்த இனம் கோழை இனமாக மாறியது. மாலிக் காபுர் தமிழகத்திற்குப் படையெடுத்து வருகையில் திருச்சியில் ஒரு சிற்றூர் மக்களே அவனுக்கு அஞ்சித் தம்மைத் தாமே தீயிட்டு இறந்து போனார்களாம். அவனுக்கு அஞ்சித்தான் செத்தார்களே ஒழிய எதிர்த்துப் போராடி வீரத்தை நிலை நாட்டிச் சாகவில்லையே! இவ்விழிவினை என்னென்று சொல்வது?
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
எனும் குறள் நெறி கூறுமாப் போல ஊழ் எல்லாவற்றினும் வலிமை மிக்கதாக விளங்குகின்றது. முன்னை நம் தமிழப் பேரரசுகள் விட்டப் பிழையினால் பின்னைத் தமிழர்கள் அடிமைப் பட்டதுடன் கோழைகளாயினர்; மோழைகளாயினர். தமிழனின் வீரமரபணு அவன் உடலுக்குள்ளாகவே முடங்கிப் போயிற்று. இஃது ஊழின் வலிமையினால் நிகழ்ந்த கேடு .
இதனால் இவ்வினத்தை மீட்டெடுக்க உரிய தலைமையின்றி ஈராயிரம் ஆண்டுகாலமாக இவ்வினம் அல்லலுற்றது.
4.0 ஊழையும் வெல்லலாம்.
வள்ளுவப் பெருமான் ' ஊழிற் பெருவலி யாவுள? என்ற வினாவினைத் தொடுத்துவிட்டு அதனை வெல்ல இயலவே இயலாதா என்று கேட்கையில் ஏனெனில்லை என்று வழியையும் காட்டுகின்றார்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (குறள் 620 )
எனும் குறளால் தாம் கொண்ட கொள்கையை வேட்கையை நிறைவேற்ற வேண்டும் எனும் தாளாண்மை கொண்ட பெருமக்கள் அதிரடியாக முடியாதென்றதை முடித்துக் காட்டுவர் ; எவராலும் செய்ய இயலாததைச் செய்து செயற்கரிய செய்யும் பெரியராவர் எனும் உண்மையை நாம் உணரலாம்.
செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்குரிய செய்கலா தார்
என்கிறது வள்ளுவம்.
இன்று தமிழன் இழந்து விட்ட நாட்டை மீட்டெடுக்கும் செயற்கரிய செயலைச் செய்யும் பெரியாராகவே நாம் மேதகு தலைவர் பிரபாகரனைப் பார்க்கிறோம்.
நாடாண்ட பழம் பேரினம் தன் சொந்த நாட்டை இழந்து போனால் எத்தகு இழிநிலையை அடையும் என்பதற்கு நம் தமிழினமே மிகப் பெரிய எடுத்துக்காட்டு. இனி இந்த இனத்தை மீட்டெடுக்க வேண்டுமாயின் இந்த இனம் ஆண்ட நாட்டினை மீட்டெடுக்க வேண்டும். இன்றைய உலகில் அது நினைத்துப் பார்க்க முடியாத செயல். ஆனால் அதற்கு அளப்பரிய ஈகங்களைச் செய்தாகல் வேண்டும். உயிரையே தூசென மதிக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட மாவீரர்களை உருவாகினாலன்றி இதனைச் சாதிக்கவியலாது. இத்தகு அருஞ்செயலைச் செய்து சாதித்து காட்டியவர்தான் தலைவர் பிரபாகரன்.
5.0 பிரபாகரன் கண்ட கனவு
சிங்களப் பேரினவாதம் தமிழினத்திற்கு எதிர்ப்பாகச் செய்து கொண்டிருக்கும் இனக்கொடுமைகள் தலைவர் பிரபாகரனின் அகவைக்கும் முந்திய கால நீட்சியைக் கொண்டது. எனவே அவர் தம் குழந்தை பருவம் முதலாகவே இக்கொடுமைகளைக் கண்டு அதனை எதிர்க்க வேண்டும் என்ற அடங்கா வேட்கையைக் கொண்டிருந்தார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு மெய்ப்பிக்கின்றது. எனவே அடக்குமுறைகளினின்று இந்தத் தமிழினத்தை விடுவித்து விடுதலைப் பெற்ற தனித்தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்பது அவருடைய கழி இளமைக் கால கனவாகும். அதற்காக எந்த ஈகத்தையும் செய்யக் கூடியவராக அவர் இருந்தார்.
அவர் கண்ட கனவுக்கு ஏற்ப கால நிலை அவரை உருவாக்கியது. சிங்கள வெறியர்கள் தமிழினத்தின் மீது நிகழ்த்திய வெங்கொடுமைகளால் ஆயிரமாயிரம் வீரமிக்க தமிழ் இளையோர்கள் தலைவரின் பின்னால் அணிவகுக்கலாயினர். போர்க்குணமிக்க வீரமறவர்களை இயல்பாகவே பெற்ற தமிழினத்தில் அத்தகைய தலைமுறை இல்லாது கோழைகளாக பிறப்பெடுத்த காலக் கட்டத்தில் மீண்டும் அவ்வீர மரபினை இவ்வினத்தின் கருவுக்குள் செலுத்திய படைப்பாளியாகவே நாம் பிரபாகரனைப் பார்க்கிறோம்.
6.0 உயிரச்சமற்ற தலைவர்.
அமைதி ஒப்பந்த காலத்தில் உலகில் பல பாகங்களிலிருந்தும் பணியாற்றிய அன்பர்கள் அவரைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அக்கால் அவர் பகிர்ந்து கொண்ட சில செய்திகளை இங்கே பதிவாக்குகின்றேன்.
' அன்பர்கள் அவரோடு நின்று படம் பிடிக்க எண்ணினர். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு நிற்கையில் ஒன்றைக் கேட்டார். "நான் ஏன் இந்த வரி உடையோடு உங்களுடன் நிற்கின்றேன் தெரியுமா?" ...அன்பர்கள் யாரும் விடையிறுக்காமல் அமைதி காத்தனர். "ஏனெனில் உலகில் தமிழன் இதுவரை இவ்வுடையை அணிந்ததில்லை; எனவே நான் அணிய வேண்டும் என்று முடிவெடுத்தேன் அணிந்திருக்கிறேன் " என்றார். அவர் இவ்வாறு கூறியதற்கான பொருள் விளங்கியது. இவ்வினத்தை விடுவிப்பதற்காக வீரத்தோடு போராடும் படையணி ஒன்று உருவாக வில்லை. அதை உருவாக்க வேண்டும் என்பது தலைவரின் கனவு. அதனை நினைத்தவாறே உருவாக்கினார். வெறுமனே உடையைக் குறிப்பதற்காக இவ்வாறு சொல்லவில்லை.
தொடர்ந்து, " இப்போராட்டத்திற்கு நான் முன்னோடியில்லை. எனக்கும் முன்னால் பலர் இருக்கின்றார்கள். சிலர் மறைந்து விட்டனர். சிலர் கைநெகிழ்த்து விட்டனர். சிலர் இரண்டகர்களாகி விட்டனர். எனவே நான் இதனை பொறுப்பேற்றுச் செல்கின்றேன். " இவ்வாறு அவர் கூறுகின்ற பொழுது பெரியாரின் நினைவு நமக்கு வருகின்றது. " நான் கொண்ட இந்தப் பகுத்தறிவு கொள்கையைத் துணிவாகச் செயலாற்றுவதற்கு எவரும் முன்வராத போது நான் என் தோள் மேல் சுமந்து செல்கின்றேன்" என்று பெரியார் ஒருமுறை கூறியிருந்தார்.
தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரைகளின் போது தெரிவிக்கும் செய்திகளை நினைவுகூர்கின்ற வேளை விடுதலைப் போராட்டம் எத்தகைய இடர்மிக்கது என்பது புரியும். அவ்விடரினை இன்பமாகக் கருதி போராடுபவனே மாவீரன். விடுதலைப் போராட்டம் என்பது பஞ்சு மெத்தையில் படுத்துப் பிரண்டு கொண்டு இன்பமாகக் கேட்டுப் பெறுவதன்று. அதனைக் கேட்ட உடனே எவனும் வெற்றிலைத் தாம்பாலத்துடன் விடுதலையைக் கொடுக்கப் போவதுமில்லை. கல்லும் முள்ளும் பள்ளமும் பாதாளமும் காடும் மேடும் நிறைந்த கடும்பாதை; ஓடிவரும் நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போடுவது; வெடிக்கும் எரிமலையைக் கடந்து செல்வது; இந்தப் பாதையில் செல்வதற்கு உயிரச்சம் இருக்கக் கூடாது.
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
எனும் பாரதியின் பாட்டுக்கொப்ப இனி இல்லை என்ற துணிவினைக் கொள்வது விடுதலைக்கு இன்றியமையாதது.
"ஒரு முறை தலைவர் பிரபாகரனை இந்திய உளவு துறை அதிகாரி எல்லாச் சலுகைகளையும் வழங்குகின்றோம் போராட்டத்தினைக் கைவிட்டு விடு, இல்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று மிரட்டினாராம். அதற்கு விடையளித்த தலைவர் அவர்கள் உலகில் யாரை வேண்டுமானாலும் நீங்கள் வென்றிருக்கலாம் ஆனால் என்னிடம் மட்டுந்தான் நீங்கள் தோற்றுப் போகப் போகிறீர்கள், ஏனெனில் எனக்குச் சொத்து சுகங்களின் மீது ஆசை கிடையாது; பட்டம் பதவிகள் மீது ஆசை கிடையாது. எனக்கு என் உயிரின் மீதே ஆசை கிடையாது. எவருக்குச் சொத்து சுகங்களின் மீது ஆசை இருக்கிறதோ, பட்டம் பதவிகளின் மீது ஆசை இருக்கிறதோ உயிரின் மீது ஆசை இருக்கிறதோ அவரை யாரும் விலைக்கு வாங்கலாம். எனவே என்னிடம் மட்டுந்தான் நீங்கள் தோற்றுப் போகப் போகிறீர்கள்" என்றாராம். அவர் சொன்னவாறே எவராலும் வெல்ல முடியாத தலைவராகவே அவர் விளங்குகின்றார்.
7.0 தமிழனைக் கட்டமைத்த தலைவர்
எந்த வகையான ஏமாற்று எத்து சூழ்ச்சி செயல்களுக்கெல்லாமும் வலைந்து கொடுக்காத நெகிழ்ந்து போகாத கொண்ட கொள்கையினை வேட்கையினை நிறைவேற்றித் தீர வேண்டும் என்ற உறுதிவாய்ந்த உள்ளம் அவர்க்கன்றி யார்க்கு வரும். எனவே உலகமே திரண்டாலும் துணிவாக எதிர்த்து நின்றார். உலகத்தின் சூழ்ச்சி வலைகளுக்குள் அவர் சிக்கவில்லை. ஆனால் அவரை எதிர்ப்பதாகக் கூறி கொண்ட வல்லரசு நாடுகளும் சுண்டைக் காய் நாடுகளும் அவர் விரித்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளன. இதனைக் காலத்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.
'இயற்கை எனது நண்பன் வரலாறு எனது வழிகாட்டி' என்ற அரிய மெய்யியலுக்குச் சொந்தக்காரர் பிரபாகரன். இயற்கையும் வரலாறும் உண்மையானவை பொய்த்துப் போகாதவை. அவையே இன்று அவர்க்குப் பிற எவரையும் விட மிகப் பெரிய பாதுகாப்பு.
இக்கால் தலைவர் பிரபாகரன் ஏற்றிவிட்ட விடுதலைத்தீ புலம்பெயர்ர்ந்து வாழும் தமிழர் உள்ளங்களில் கொழுந்து விட்டு எரிகிறது. தமிழன் என்ற இனமான உணர்வினை ஆழமாகத் தமிழர் நெஞ்சங்களில் படியவிட்டவர் பிரபாகரன். உலகெங்கும் வாழும் தமிழரிடையே தமிழ் தேசிய் எழுச்சியை எழுப்பி விட்டவர் பிரபாகரன். எத்தனையோ தமிழ் உணர்வளர்கள் தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் அறிஞர்கள் தமிழ்த் தலைவர்கள் கண்ட கனவுகளை எண்ணிய எண்னங்களை ஒரு வடிவுக்கும் கட்டமைப்புக்கும் கொணர்ந்தவர் பிரபாகரனே!
இதனாற்றான் அத்தனிப்பெருந் தலைமகனைப் பார்த்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவ்வாறு பாடுகின்றார்.
அவன்தான் தமிழின வீரன்! - அற்றை
நிலந்தரு திருவில் மாறன் ! - கரிகாற்
சோழன்! இமய நெடுஞ் சேரன்!
சிவன் திரு மால் - எனச் செப்பிடும் முதல்வன்!
சேண் நெடுந் தமிழினப் புதல்வன்! - கடும்பெருந்
தவம் செய்து தமிழ்த்தாய் பெற்றநல் மறவன்
தரையெலாம் சென்றுவாழ் தமிழர்க்கு உறவன்!
(அவன்தான்)
கதிர்க்கையன் எனும் பிரபாகரன் அவன்தான்!
காளையர் வழிபடு தலைவனும் அவன்தான்!
புதிர்க்கொரு புதிர் - அவன்! புரட்சியின் வடிவம்!
பூக்கின்ற விடுதலை விடியலின் படிவம்!
(அவன்தான்)
தலைவர் பிரபாகரன் தன் வலி மாற்றான் வலி, துணைவலி ஆகிய வலிவுகளைச் தூக்கிச் செய்யும் செயல்திறம் மிக்கவர். கால நிலை, இடநிலை, பொருள் நிலை அறிந்து போராட்ட அணுகுமுறைகளை மாற்றியமைக்கும் வல்லமையுடையவர்.
இக்கால் அவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற ஆய்வுகளுக்குள் பலரும் இறங்கியுள்ளனர். அவர் இல்லை என்றே முடிவெடுத்து அறிக்கைவிட்டவரும், அழுதவரும், மகிழ்ந்தவரும், தம் முகத்திரையத் தாமே கிழித்துக் கொண்டவரும் பலர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் மேற்கண்ட பாடலிலேயே பின் வரு வரிகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே எழுதியுள்ளமை கவனிக்கத் தக்கது.
நிலத்தினைக் குடைந்து - உள்ளே புகுந்து வாழ்வானோ!
நிலாவினில் சென்று - அவன் மறைந்து வாழ்வானோ?
புலத்தினை விடுவிக்கும் கோள் அவன் கோளே!
புறப்பகை வென்றிடும் தோள், அவன் தோளே!
கார்த்திகை எனும் நளி மாதத்தில் பிறந்தான்!
காத்திடும் இனநலப் போரினில் சிறந்தான்
ஆர்த்திடும் புலியெனக் களத்தினுட் சென்றான்!
அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்!
(அவன்தான்)
அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்று காலத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கும் ஆற்றல் படைத்த ஆன்ம வலிவுள்ள மாபெரும் தலைவனைப் பெற்றதால் நாம் பெருமைபடுகின்றோம். இது உலகத் தமிழினம் இந்தத் தலைவனின் பின்னால் அணிவகுத்து நிற்கும் காலம். ஆயிரம் கைகள் மறைத்து ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை! வெல்க தமிழீழம்!
தொடரும்
No comments:
Post a Comment