தொடர்பாளர்கள்

Tuesday, November 10, 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 19 ஆண்டுகால மாவீரர் நாள் வரலாற்று உரை ஆவண நூலாக வெளியிடப்பட்டுள்ளது.


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 19 ஆண்டுகால மாவீரர் நாள் வரலாற்று உரை ஆவண நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு வரை மேதகு தேசியத் தலைவர் அவர்களின் அரிய உரைகள் தமிழ் நாட்டில் கதிர்மதி பதிப்பகத்தால் மிகச்சீரிய முறையில் தொகுக்கப் பெற்று நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நூலின் வாயிலாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுத் தேவைகளையும் தமிழ் மக்களும் விடுதலைப் போராளிகளும் ஆற்றிவந்துள்ள ஈடு சொல்ல முடியாத ஈகங்களையும் தமிழீழத் தேசியத் தலைவரின் அசைக்க முடியாத உறுதிவாய்ந்த கொள்கை வேட்கையினையும் தெளிவாக அறிய முடிகின்றது. தமிழ் கூறு நல்லுலகத் தமிழர் கரங்களில் மட்டுமல்லாமல் விடுதலையை வேண்டி நிற்கும் ஒவ்வொரு மாந்தனிடத்தும் இந்நூல் தவழ வேண்டும்.

தமிழகப் பெருந்தலைவர் ஐயா நெடுமாறன் அவர்கள் இந்நூலுக்கு அரிய அணிந்துரையினை வழங்கியிருக்கின்றார்.

" 1983 ஆம் ஆண்டு மதுரையில் பிரபாகரன் இருந்த போது அவரின் நெருங்கிய தோழர் சங்கர் களத்தில் படுகாயமடைந்து மதுரைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்குத் தக்க சிகிச்சை அளித்து அவர் உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை. தனது தலைவரின் மடியிலேயே மரணத்தை அரவணைத்துக் கொண்டார் சங்கர். அவர் உடல் மதுரையில் எரிக்கப் பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதன் முதலில் களச்சாவை அணைத்துக் கொண்டவர் சங்கர். எனவே அவர் மறைந்த அந்த நவம்பர் 27 ஆம் நாளை மாவீரர் நாளாகக் கொண்டாடும்படி பிரபாகரன் அறிவித்த இந்த ஏற்பாடு என்பது தமிழர்களின் மரபு வழிக்கு ஏற்றதேயாகும். சங்க காலத்திலிருந்து களத்தில் வீழ்ந்து பட்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டிப் போற்றி வணங்குவது தமிழர்களின் மரபாகும். மறைந்து போன அந்த மரபுக்குப் புத்துயிர் கொடுத்தவர் பிரபாகரன். அந்த மரபு வழியிலேயே இன்றைக்கு மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. 1989 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளையொட்டி பிரபாகரன் ஆற்றும் பேருரைகள் புகழ்பெற்றவையாகும். சிங்கள் அரசு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே அந்தப் பேருரைகளில் பிரபாகரன் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய மிக்க எதிர் பார்ப்புடனும் கவனத்துடனும் காத்திருந்தனர். ஆண்டு தோறும் வெளியான அந்தப் பேருரைகள் வரலாற்றுக் கருவூலமாகும். போர்க்கலையில் மட்டுமல்ல இராசதந்திரக் கலையிலும் அவர் எவ்வளவு தேர்ச்சி பெற்றவர் என்பதை அந்தப் பேருரைகள் வெளிப்படுத்துகின்றன. அந்தப் பேருரைகள் ஒவ்வொன்றும் தமிழர்களுக்கு உணர்வையும் எழுச்சியையும் ஊட்டுபவை. எவ்வளவு ஆழமாகவும் தொலைநோக்கோடும் சிக்கல்களை அவர் அணுகினார் என்பதற்கு அவை சிறந்த எடுத்துக்காட்டு ஆவணங்களாகத் திகழ்கின்றன." என்று தமது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரிய ஆவணத்தை வெளியிட்ட நற்றமிழ் உள்ளமும் விடுதலை வேட்கையும் தலைவர் பிரபாகரன் மீது ஆழ்ந்த பற்றுள்ளமுங் கொண்ட பதிப்பாசிரியர் மொழிக்காவலர் கோ.இளவழகனார் தம் பதிப்புரையில் ஓர் இடத்தில்

" மாவீரர் கல்லறைகளை உடைத்து அழித்த கொடுங்கோலன் இராபக்சேயும், அவன் துணையும், அவன் மக்களும், அவன் உறவும் அந்த மண்ணில் பூண்டோடு அழியும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இந்த நூலினை வெளியிடுகின்றோம்" என்று அறம் பாடுகின்றார்.

" உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் உள்ளங்களில் குடி கொண்டிருக்கும் தமிழர் தலைமகனின் வீர உரைகளை உங்கள் கைகளில் தவழ விடுகின்றோம். இப்பொன்னுரைகளைப் படித்து நெஞ்சில் பதியுங்கள். விடுதலைக் களத்தில் மாற்றான் முன் என்றைக்கும் மண்டியிடாத தமிழர் தலைவனின் வழிநின்று தமிழீழத் தனி அரசு அமைக்க வாருங்கள்." என்று அவர் உலகத் தமிழர்களை விடுதலைக் களத்திற்கு உணர்வு பொங்க அழைக்கின்றார். இவ்வரிய கருவூலத்தை வெளியிட்ட இப்பெருமகனாருக்கு கோடி வணக்கங்கள்.

இந்நூலில், மாவீரர் நாள் செய்முறை குறிப்புகளும் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தனின் அருமைமிகு உரை வீச்சும் புதுவையார் தீட்டிய வரலாற்றில் நிலைநின்ற மாவீரர் நாள் பாட்டும் இணைப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

நம் தலைமையையும் விடுதலையையும் போற்றுகின்ற மறமாண்புமிக்க தமிழினமே இல்லந் தோறும் இந்நூலினை வாங்கிப் பயின்று உள்ளந்தோறும் வாழுந்தோறும் போற்றுவாயாக.

நூல் வேண்டுவோர்

muthanmozhi@yahoo.com.my என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்க.

நூலின் விலை மலேசிய வெள்ளி 40 (RM 40.00 )

அன்புடன்

இரா. திருமாவளவன்
மலேசியா.

No comments:

Post a Comment