தொடர்பாளர்கள்

Saturday, June 19, 2010

மலேசியாவில் தமிழ் நெறி ஞாயிறு திருமாலனாருக்கு அஞ்சல் தலை வெளியீடு ஓர் வரலாற்றுப் பதிவாகும்.



மலேசியாவில் தமிழ் நெறி ஞாயிறு திருமாலனாருக்கு அஞ்சல் தலை வெளியீடு ஓர் வரலாற்றுப் பதிவாகும்.

பாவலர் திருமாலனார் மலேசியாவில் தமிழிய சிந்தனை தாங்கிய புதிய குமுகாயத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார். 1983 ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் நெறிக் கழகம் எனும் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து நூற்றுக் கணக்கான தமிழ் உணர்வாளர்களை உருவாக்கியவர். இவரால் உருவாக்கப் பட்டு இன்று தமிழின் நிலைப்பாட்டுக்காக மலைநாட்டில் போராடி வரும் பெருமக்கள் தான் திருமாவளவனும் திருச்செல்வமும். இவர்கள் பாவலர் திருமாலனாரின் மாணவர்கள். திருமாவளவன் தற்கால் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்று செயலாற்றி வருகின்றார்.

அவரின் முயற்சியால் மலேசியாவில் முதன்முதலாக மலேசிய அஞ்சல் நிறுவனத்தின் ஒப்புதலோடு திருமாலனாருக்கு தமிழ் அறிஞர் எனும் முறையில் அஞ்சல் தலை அன்னாரின் 79 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப் பட்டது.

திருமாலனார் எனும் பெருமகன் மலேசியா மண்ணில் தமிழுக்காகத் தொண்டாற்றும் உண்மை உணர்வாளர்களை உருவாக்கிய சிறப்புக் குரியவர். தூய தமிழில் பெயர் சூட்டல், தமிழ்க் கல்வி கற்றல், தமிழ்ப் பள்ளிகளின் நிலைப்பாடு, இல்லங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டல், நல்ல தமிழில் பேசுதல், கலைசொற்களை உருவாக்குதல், திருக்குறளை வாழ்வியல் நெறி நூலாக வாழ்வில் பின்பற்றுதல் எனும் உயர்ந்த தமிழின நிலைப்பாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் மொழி, இனம், சமயம் எனும் மூன்று தலைக் கோட்பாட்டுக் கூறுகளை முதன்மையாக வைத்து மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தை உருவாக்கிப் பாடாற்றினார். எனவே இவருக்காக இவ்வஞ்சல் தலை வெளியிட்டது மலேசிய வரலாற்றில் பெருமைக்குரிய செயலாகும். தொடர்ந்து மலேசிய தமிழ் அறிஞர் பலரின் அரிய பணி கருதி நாம் அவர்களுக்காக அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்ப்போம். வெல்க திருமாலரின் புகழ்.









திருமாலனார்
புகழ் வெல்லும்

திருமாலனார் புகழ் வெல்லும் - அவர்
கருவேந்தும் தமிழர்நெறி தாரணியில் செல்லும்
(திருமாலனார் )

அறியாமை இருளகற்றி அறிவு ஒளி பரப்பி மனம்
நெறி காண வையமிதில் வாழ்ந்தார் - புது
வரலாறு படைத்து தமிழ் காத்தார்
செறிவான அறங்கூறும் திருக்குறளின் பொருளுணர்ந்து
உரத்தோடு இனமானங் காத்தார் - பண்டை
மறத்தோடு வாழ்விலறம் பூண்டார்
(திருமாலனார் )

புறம்பேசித் திரிவாரைத் தமிழ்மொழியைப் பழிப்பாரை
அறம்பாடி எதிர்கொண்டு வென்றார் - தனித்
திறங்காட்டும் கனல் பாடல் செய்தார்
இறைமைக்குப் பொருள் கூறி பொறைமைக்கு நிகராகி
இருளுக்குள் ஒளியுண்டு என்றார் - திரு
வருள் கூறும் பாவிசையைத் தந்தார்

(திருமாலனார் )

மொழியின சமயமெனும் கோட்பாடு தனைக் கண்டு
வழிகாட்டும் கழகத்தைக் கண்டார் - தமிழ்
நெறியென்று பெயர்காட்டிச் சென்றார்
வரலாறு மறவாத காலத்தின் நிலைப் பேறு - திருக்
குறள் போற்றும் புகழ் கண்ட மலைநாட்டின் தமிழாறு..
(திருமாலனார் )


திருமாலனாரின் மாணாக்கன்,

இரா. திருமாவளவன்

No comments:

Post a Comment