எம்.ஆர்.ராதாவும் எஸ்விசேகரும், திருமாவும் குஷ்புவும்
திராவிட முன்னேற்றக் கழகம் 1949ல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் அசைவுகள், அதன் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் வாழ்வியல் கலாச்சார தன்மைகளோடு இணைந்தே வந்திருக்கிறது. அதற்கு அடிப்படை காரணம், திரைப்படம் எனும் ஊடகத்தை திராவிட முன்னேற்ற கழகம் தமது முழு ஆதிக்கத்திற்கு கொண்டு வந்ததே என்பதை நாம் அறிவோம்.
திரைப்பட காலங்களுக்கு முன்னர் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு என்ற நிலையிலிருந்து, அதை மாற்றி மக்களுக்கான அறிவுணர்ச்சி என்கின்ற ஒரு மேம்பட்ட தளத்திற்கு நாடகம் என்ற கலையை நகர்த்தி வந்தவர்கள் பலர் இருந்தாலும், எம்.ஆர்.ராதா இதுவரை யாராலும் மறுதலிக்கமுடியாத பகுத்தறிவு கொள்கைகளின் விளக்கமாக, விளக்காக இருப்பவர் என்பது யாவரும் அறிந்த ஒரு உண்மை. தந்தை பெரியாரின் திராவிட இயக்க கொள்கைகளை தமது இறுதி காலம் வரை இடைவிடாமல் கடைபிடித்த ஒரு ஆற்றல்வாய்ந்த சிந்தனையாளனாகவும், அரசால் அடக்கமுடியாத கலகக்காரனாகவும், நாடகத் தளத்தை அவர் நகர்த்தினார்.
மக்களை எழுச்சிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் எண்ணங்களில் உள்ள மூட நம்பிக்கைகளை களைந்தெறிய அவர் ஆற்றிய பணி தமிழக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத அத்தியாயமாக இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அரசால் நாடகத்தின் எழுத்துருக்களை சமர்பித்து, அதிலிருக்கும் உரையாடல்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்கிற சட்டம் எம்.ஆர்.ராதா அவர்களின் உரையாடல்களால் ஏற்பட்டதுதான் என்கின்ற கருத்து எல்லோராலுமே அங்கீகரிக்கப்படுகிறது.
எம்.ஆர்.ராதா திராவிட இயக்கத்தின் அசைக்க முடியாத பரப்புரையாளனாக தமது வாழ்நாளை நிறைவு செய்தார். தந்தை பெரியாரின் பெருந்தொண்டனாக அவர் இறுதி காலம்வரை பணியாற்றினார். எம்.ஆர்.ராதா அவர்களின் நூற்றாண்டுவிழா வருகிறது. அவரின் நூற்றாண்டு விழாவை திராவிட இயக்கங்கள் எவ்வாறு கொண்டாடப் போகிறது என்கின்ற எதிர்பார்ப்பு பொதுவாக பழங்கால திராவிட சிந்தனையாளர்களின் மனங்களில் இருந்து பொங்கி வருகிறது.
ஆனால் அது எந்த கால அளவை எட்டப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றுவரை ரத்தக்கண்ணீர் திரைப்படத்தை பார்த்தவர்கள், ஏதோ புதிய திரைப்படத்தை பார்த்த உணர்வோடு இந்த காலத்திற்கும் பொருத்தமான கருத்தை அது தருவதாக நினைக்கிறார்கள். அது உண்மையும் கூட. கடவுள் மறுப்பு என்பதை கடந்து, மூடநம்பிக்கைக்கு எதிராக பெரும் முழக்கம் எழுப்பியவர், புயலாக களத்தில் நின்றவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். ஆனால் நடிகவேள் எம்.ஆர்.ராதாவோடு நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களை ஒப்புமைப்படுத்தி, எம்.ஆர்.ராதா அவர்களை சிறுமைப்படுத்திய பெருமையை தமிழக முதல்வர் தக்கவைத்துக் கொண்டார்.
எம்.ஆர்.ராதாவைப் போன்றே எஸ்.வி.சேகர் அவர்களும் நாடகங்கள் நடத்துவதாக புகழாரம் சூட்டிய முதல்வர், எஸ்.வி.சேகரை தி.மு.க.வில் சேர்ப்பதற்கான பணிகளில் மூழ்கிவிட்டார். ஒருவரை வேறொருவரோடு ஒப்புமைப்படுத்தும்போது சில அடிப்படை ஒற்றுமைகளாவது அவர்களுக்குள் இருக்கிறதா? என சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு சொற்பொழிவாளனாக இருந்தாலும், படைப்பாளியாக இருந்தாலும் இருக்க வேண்டும். ஆனால் நடிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே இருவரையும் ஒரே நடிகராக பார்க்கக்கூடிய அந்த தன்மை உண்மையிலேயே திராவிட சிந்தனைக் கொண்டவர்களை களங்கடித்திருக்கும். ஆனாலும் அதை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் அனைவரும் அமைதிக் காக்கலாம். இல்லையெனில் தமிழக முதல்வரின் அரசு அதிகாரத்தால் கிடைக்கும் பலன்கள் அற்றுப்போய்விடக் கூடாது என்பதற்காகவும்கூட அவர்கள் அடங்கி இருக்கலாம். ஆனால் நாம் எதிர்பார்த்த எதுவும் நிகழாத காரணத்தால்தான் இதை நாம் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
திராவிட இயக்கங்கள் குறித்து நாம் விவாதிப்பதற்கு முன்னால், இந்த திராவிட இயக்கங்கள் நிகழ்த்திய பல்வேறு களப்பணிகள் நம் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. குறிப்பாக தமிழருக்காக தமது இயக்கம் செயல்பட வேண்டும் என்றால், அது பார்ப்பனர்களுக்கு எதிரான கருத்துக்களமாக அமைய வேண்டும். தமிழர் என்றால் பார்ப்பனர்களும், நானும் தமிழ் பேசுபவன்தான் ஆகையால், நானும் தமிழன் என்று சொல்லிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிற காரணத்தினால், திராவிடம் என்ற வார்த்தை கையாளப்பட்டு, அது பார்ப்பனர்களை தனிமைப்படுத்த துணைபுரியும் என்ற வாதம் ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் இப்போது பார்ப்பனர்களே நேரிடையாக திராவிட இயக்கங்களுக்குள் ஊடுருவுவதை எப்படி தடுக்கப் போகிறார்கள் என்பதை திராவிட இயக்கத் தளபதிகள் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
எஸ்.வி.சேகர் என்ற ஒரு தனி மனிதனைக் குறித்து எவ்வித முரண்பாடும் இல்லை. ஆனால் எஸ்.வி.சேகர் என்பவர் பார்ப்பன சங்கங்களின் பங்காளி என்பதுதான் நமக்குள் இருக்கும் முரண்பாடு. அதோடு இல்லாமல் தமிழ் மக்களின் இன அடையாளங்களை ஒன்றுபடுத்த முடியாமல், சாதிய கோட்பாட்டால் பிளவுபடுத்தி, அதை இன்றுவரை கட்டிக்காக்க முனைப்புக் காட்டும் சங்கரா மடத்தின் தலைமை பூசாரி சங்கராச்சாரியாரின் செயலாளராக செயல்படுபவர்தான் எஸ்.வி.சேகர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். தமக்கு மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டவுடன், அவர் சென்று ஆசி பெற்ற இடம் பார்ப்பனிய சங்கத்தின் தலைவரிடம்தான். அதோடு மட்டும் அல்ல. சட்டமன்றத்திலே தனது முதல் உரையை துவக்கும்போது எதெல்லாம் மூடநம்பிக்கை என்று திராவிட கட்சிகளால் சுட்டிக்காட்டப்படுகிறதோ, அதெல்லாம் தமக்கு இருக்கிறது என்றுகூறி பகுத்தறிவுக்கு பாடைக் கட்டியவர்தான் எஸ்.வி.சேகர். அந்த அடிப்படையிலே நான் வெற்றிப் பெற்றேன் என்று திராவிட கொள்கையை நக்கல் அடித்த ஒரு நல்ல நடிகர் எஸ்.வி.சேகர்.
இவ்வாறு எந்த நிலையிலும் ஒட்டாத, எண்ணெயும் தண்ணீரும் போன்ற முரண்பாட்டுத் தன்மைக் கொண்ட இருவரை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு தமிழக முதல்வர் எவ்வாறு தடம் மாறினார் என்பது நமக்கு விளங்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் வி.பி.ராமன் என்ற பார்ப்பனர் இணைந்தபோது, திராவிட முன்னேற்றக்கழகம் பிளவுபட்டு சம்பத் வெளியேறி, தனி கட்சிக் கண்ட வரலாற்றை எல்லாம் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதா என்ற பார்ப்பனர் தலைமையேற்று, தமது பார்ப்பனிய ஆளுமையை திராவிட தன்மைக்கு எதிராக நிறுத்தி, சட்டமன்றத்திலே நான் பார்ப்பாத்தி. என்னை யாரும் அசைக்க முடியாது என்று கூறியதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அம்மையாருக்கு சமூக நீதி காத்த வீராங்கணை என்ற பட்டத்தை வாரி வழங்கிய வரலாற்று செய்திகள் எல்லாம் திராவிட இயக்க வழித் தடங்களில் சிதைவுகளாக இன்றுவரை சித்தரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆக, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக திராவிடம் தேய்ந்து பார்ப்பனியமாகிக் கொண்டிருக்கிறது.
இது, இந்த நாட்டை எங்கு கொண்டுபோய் சேர்க்கும் என்பது விளங்காத புதிராக உளுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் என்னவோ புதிது புதிதாக கொள்கை முரசங்களை தமது கட்சியிலே இணைத்துக் கொண்டு, திராவிட கொள்கைக்கு ஆற்றல் வாய்ந்த புதிய தத்துவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையிலே தான் தமிழ்நாடு முழுக்க ஒரு கருத்தியலுக்காக எதிர்க்கப்பட்ட குஷ்பு, திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராகி தமது பேராற்றல் மிக்க பெரும்பணியால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக நிற்கப் போகிறார்.
அவரின் கொள்கை பரப்புரையால் திராவிட முன்னேற்றக்கழகம் புத்துணர்ச்சி அடையப் போகிறது, புதுப்பொலிவு காணப் போகிறது. ஏனென்றால் அவர் பச்சை தமிழர். தமிழரின் வாழ்வுக்காக குரல் கொடுக்கக்கூடியவர். அவரின் ஒரு கருத்துக்காக தமிழ்நாடெங்கும் கொந்தளிப்போடு இயக்கங்கள் கண்ட விடுதலை சிறுத்தைகள் இனிமேல் குஷ்புவின் மேடையில் அமர்ந்து, அவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்தாலும்கூட, கொள்கை விளக்கம் குஷ்பு என்று வாழ்த்தித்தான் பேச வேண்டும். காரணம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் அவர்கள் இருக்கிறார்கள்.
இதை சொன்னால்கூட, விடுதலை சிறுத்தைகளைத்தான் இவர்கள் திட்டுகிறார்கள், அல்லது விமர்சிக்கிறார்கள் என்றெல்லாம் பின்னூட்டங்கள் வெளிவரும். உள்ளபடி இவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். நாம் பதிவு செய்திருக்கும் கருத்துக்களிலிருந்து ஏதாவது மாறுதல் இருக்குமேயானால் இவர்கள் மறுப்பு சொல்லட்டும்.
இனிமேல் குஷ்புவும் விடுதலை சிறுத்தைகளும் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்வார்களா? எப்படி இது சாத்தியப்படும் என்ற சிந்தனையெல்லாம் தமிழர்களுக்கு வேண்டாம். காரணம் காங்கிரசை ஒழிக்காமல் வேறு பணி இல்லை என்று வீர வசனம் பேசிய களங்கள்கூட மறக்கடிக்கப்பட்டு, காங்கிரசின் கைப்பற்றி அன்னை சோனியாவிடம் மண்டியிட்ட வரலாற்றையும் தாண்டி, ராசபக்சேவின் பக்கத்தில் நின்று பயபக்தியோடு வலம்வந்த நிகழ்வுகள் எல்லாம் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆக, ஒன்று நமக்கு தெளிவாகப் புரிகிறது. இங்கு கொள்கை, கோட்பாடு, தத்துவம் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. வாக்கு, சட்டமன்றம், மந்திரிப் பதவி என்கிற மனப்பக்குவம் செழித்தோங்கி வளர்ந்து விட்டது. மக்கள் தொண்டு என்பது இப்போது ஏதோ ஒரு விமர்சனத்திற்குரிய இல்லையென்றால் தமது வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டதே ஒழிய, முழுநேர மக்கள் தொண்டு என்பதெல்லாம் நம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்துதான் போவோம்.
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி இதைத்தான் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. திராவிட பாரம்பரியம் இதைத்தான் நமக்கு அழுத்தமாக நினைவூட்டுகிறது. எந்த தமிழ் வாழ, இந்த பார்ப்பனர்கள் ஊரு செய்வார்கள் என்பதற்காக திராவிடம் என்ற பெயரை இதுவரை மாற்றாமல் இருக்கிறார்களோ, அந்த பார்ப்பனர்கள் புறவாயில் வழியாக அல்ல, நடு வாயில் வழியாகவே சிகப்பு கம்பளம் சிரித்து வரவேற்கப்படுகிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதன் வெளிபாடுதான் செம்மொழி மாநாட்டிற்கு தினமலர், தினமணி பார்ப்பனிய ஏடுகள் பெரும் தொண்டாற்றிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
ஒன்று, நமக்கு தெளிவாக புரிந்துவிட்டது. திராவிடம் என்பது வீழ்த்தப்பட்டுவிட்டது. அது, பார்ப்பனியம் என்கின்ற பெரும் ஆற்றலோடு ஓங்கி வளரத் தொடங்கிவிட்டது. எந்த காரணத்திற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ, அந்த காரணம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. இனி எந்த காரணத்திற்காக இவர்கள் இயக்கம் நடத்தப்போகிறார்கள் என்பது புரியவில்லை.
செம்மொழி மாநாட்டை சீரோடு நடத்துவதற்கு சிறந்ததொரு பாட்டை இயற்றிய முத்தமிழ் அறிஞர், அதை இசையமைக்க ஒரு மலையாள இசையமைப்பாளரை தேர்வு செய்ததில் இருந்தே செம்மொழியின் நேர்த்தி, அதன் வளர்ச்சி எதை நோக்கி நகர்கிறது என்பதை பார்வையாளர்கள் எல்லோரும் நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள்.
நாளை ஒரு இந்தி நடிகர் தி.மு.க.வில் உறுப்பினராக விரும்பினால், விருப்பத்தோடு அவர் ஏற்றுக் கொள்ளப்படுவார். காரணம், தி.மு.க. என்பது தமிழ் தேசிய அடையாளத்திலிருந்து இந்திய தேசிய அடையாளத்தை முழுமையாக அணிந்து கொண்டது. இதிலிருந்து விலக தி.மு.க.வாலும் முடியாது, இதை தவிர்க்க காங்கிரசாலும் முடியாது.
இப்போதெல்லாம் திராவிடம் என்பது மருவி, இந்திய தேசியம் பேச தி.மு.க. தயாராகி விட்டது. டெல்லியிலே காங்கிரஸ் கொள்கை எதுவோ அதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க. கொள்கை. இனி தி.மு.க.விற்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு பதிலாக தி.மு.காங்கிரஸ் என்று பெயர் வைக்கலாம். அந்த அளவிற்கு திராவிட இயக்கம் தமது வீழ்ச்சியை நோக்கி நாலுக்கால் பாய்ச்சலில் ஓடுகிறது.
– மீனகம் இளமாறன்
No comments:
Post a Comment