தொடர்பாளர்கள்

Wednesday, May 12, 2010

வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும்


அன்னை பார்வதி இலங்கைக்கு திரும்பி சென்றது அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆறு மாத விசா பெற்று சென்னை வந்த தமிழ்த் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் தாயார் பெருமாட்டி பார்வதியம்மாள் அவர்களை மாநில போலீசின் துணையோடு மத்திய அதிகாரிகள் கடந்த மாதம் திருப்பி அனுப்பி தீராக் களங்கத்தை உருவாக்கினர்.
ஈவிரக்கமில்லாத இந்தப் போக்கு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த இப்போது பார்வதியம்மாளுக்கு அரசு செலவில் அரசு சொல்கிற மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சைக்காலம் முடிந்ததும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விட வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்களோ, அரசியல் வாதிகளையோ சந்திக்கக் கூடாது. என்கிற நிபந்தனைகளின் பேரில் விசா வழங்க இந்தியா முன் வந்திருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளனர்..
சிகிச்சைக்கு உரிய அனுமதியுடன் வந்தவரை அவமரியாதை செய்து திருப்பி அனுப்பியவர்கள் இப்போது மனிதாபிமான நிபந்தனைகள் என்னும் பெயரில் கடுமையான நிபந்தனைகளை விதித்து தமிழ்த் தாயை அவமதித்து விட்டார்கள்
மனிதாபிமானம் என்பது விதிகளுக்கோ, விதிமுறைகளுக்கோ அப்பாற்பட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டும் அதைச் செய்யலாம். என்கிற நிலையில் எண்பது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நிலையான நினைவுகள் இன்றி இருக்கும் தாயை ஒரு பயங்கரவாதி போல சித்தரித்து ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையுமே ஏனைய இனங்கள் எள்ளி நகையாடும் விதமாக நடந்து கொண்டன மத்திய மாநில அரசுகள்.சிகிச்சைக்கு வந்த எம் தாயாரை வயதான முதியவர் என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பி அலைக்கழித்த மத்திய மாநில அரசுகள் இன்று ஒரு மாதம் கழித்து அவரைக் கொலைக் குற்றவாளியைப் போல் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி என்ற பெயரில் அனுமதித்து சிறைக் கைதியாக நடத்த முயற்சிக்கின்றது.
ஆனால் எம் தாயோ, இவர்களைப் போன்று அதிகாரத்திற்கும்,காசுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், இனத்தைக்காட்டிக் கொடுப்பவர்களை நன்குஅறிந்தவர்.அவர் கணைக்கால் இரும்பொறை வந்த இனத்தின் பெருமை பேசுகிற மாவீரனைப் பெற்ற தாய் ஆவார். அவர் இவர்களை நன்கு அறிந்ததால் தான், துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது�என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப சிகிச்சைக்கு இந்தியா வரமறுத்துள்ளார்.அவரது தாய் மண் இன்று எதிரியான சிங்களனின் ஆதிக்கத்தில் இருந்தாலும் அது குறித்து கவலைப்படாமல் சென்றுள்ளார்.
அன்னையின் இந்த முடிவு அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும். துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது�என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

சீமான்,

நாம் தமிழர் இயக்கம்.

No comments:

Post a Comment