தொடர்பாளர்கள்

Friday, March 26, 2010

பக்தவத்சலங்கள் இன்னும் இருக்கிறார்களே! – பழ.​கருப்பையா

பக்தவத்சலங்கள் இன்னும் இருக்கிறார்களே! – பழ.​கருப்பையா

”மொழி என்பது என்ன?​ வெறுஞ் சத்தந்தானே!​ எவனாவது ஒருவன் எங்களுடைய சத்தந்தான் உலகிலேயே சிறந்தது என்று சொன்னால்,​​ அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” -​ இவ்வாறு பேசியிருப்பவர் பெரியாரின் அண்ணன் பேரன்;​ ஈ.வே.கி.​ ​ சம்பத்தின் மகன்;​ காங்கிரஸின் ஒரு கும்பலுக்குத் தலைவர்!​ ஈ.வே.கி.ச.​ இளங்கோவன்!
”உலகத்திலேயே தமிழ் ஒப்பற்ற மொழி;​ தமிழைப்போல் சிறப்பு வாய்ந்த பல மொழிகள் செத்தொழிந்துவிட்டன.​ தமிழ் ஒரு வாழும் மொழி!​ செம்மொழி!​ செம்மொழிக்குரிய எல்லாத் தகைமைகளும் உள்ள மொழி” என்று சொன்னவர் பரிதிமாற்கலைஞர்.​ அவர் ஒரு பார்ப்பனர்.​ வடமொழி தேவமொழி என்று போற்றப்பட்ட காலத்தில் தன்னுடைய பெற்றோர் தனக்கிட்ட சூரியநாராயண சாஸ்திரி என்னும் வடமொழிப் பெயரை நீக்கிவிட்டு,​​ அதைத் தமிழ்ப்படுத்திப் பரிதிமாற்கலைஞர் என்று தன்னை அழைத்துக் கொண்ட பெருந்தகையாளர் அவர்.
இதேபோல் இன்னொரு பேரறிஞர் கால்டுவெல்.​ கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தவர்,​​ வந்த வேலையை விட்டுவிட்டு தமிழை ஆராய்ந்து,​​ தனித்தியங்கவல்ல அதன் பெருமையை நிலைநாட்டும் வண்ணம் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் இணையற்ற நூலை எழுதினார்.​ கால்டுவெல் தமிழ் மண்ணை மிதித்திருக்காவிட்டால் திராவிட இயக்கமே தோன்றியிருக்காது.
பரிதிமாற்கலைஞரும்,​​ கால்டுவெல்லும் தமிழைப் பற்றி என்ன சொன்னார்கள் என்பதுதான் உலக அரங்கில் பல்வேறு நாட்டு மொழி வல்லுநர்களிடம் அதிர்வை ஏற்படுத்தியதே தவிர,​​ தமிழில் ஆத்திசூடியைக்கூட முழுமையாகப் படித்தறியாத ஈ.வே.கி.ச.​ இளங்கோவன் கூற்று அல்ல.
”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதி தன்னை மறந்து போற்றிய தமிழ் வெறுஞ் சத்தமாகத் தெரிகிறது இளங்கோவனுக்கு!
”நீ நைந்தாய் என்றால் நான் நைந்து போவேன்;​ நீ வாழ்ந்தாய் என்றால் நானும் வாழ்வேன்” என்று தமிழ் வேறு,​​ தான் வேறல்ல என்று வாழ்ந்த பாரதிதாசன் இளங்கோவனுக்குக் கிறுக்கனாகத் தெரிகிறார்.
”என்றுமுள தென்தமிழ்” என்னும் கல்வியில் பெரிய கம்பனின் பாராட்டு ஒருவித ​ போதையில் சொல்லப்பட்டதுபோல் தோன்றுகிறது இளங்கோவனுக்கு.
”ஆரியம் போன்ற கடின மொழிகளில் என்னுடைய மனத்தைப் பற்றவொட்டாது தடுத்துத் தமிழ்போல் இனிய எளிய மொழியினில் என்னுடைய மனத்தைப் பற்றுவித்த தேவரீற் பெருங்கருணைக்கு வந்தனம் வந்தனம்” என்று தான் கொள்ள நேரிட்ட தமிழ்ப் பற்றினுக்கு வள்ளலார் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.​ ஆரியச் சத்தத்தைவிட தமிழ்ச் சத்தம்தான் இனியது என்று வேறு கருணைக் கடலான வள்ளலார் சொல்லிவிட்டாரே!​ பொறுத்துக் கொள்ள முடியுமா இளங்கோவனால்!​ சத்தங்களில் மேல் கீழ் பாராட்டுகிறவர்கள் அறிவுடையவர்களாக இருக்க முடியாது என்பது அறிவுவாதியான ஈ.வே.கி.ச.​ இளங்கோவனின் கருத்து.
இளங்கோவன் சொல்வதுபோல் மொழி என்பது வெறும் ஒலிதானா?​ ஆம்;​ ஒலிதான்!​ தமிழுக்கு இரண்டு வடிவங்கள் உண்டு.​ ஒன்று ஒலி வடிவம்;​ இன்னொன்று வரி வடிவம்.​ வரிவடிவம் என்பது எழுத்து வடிவம்.​ அது காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கிறது.​ தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய கிறிஸ்தவ ஞானி,​​ பெஸ்கி என்னும் தன்னுடைய இத்தாலியப் பெயரை வீரமாமுனிவர் என்று தமிழ்ப்படுத்திக் கொண்ட அந்தப் பெருந்தகை ஒருமுறை தமிழ் எழுத்துகள் சிலவற்றை மாற்றி அமைத்தார்.
அதற்குப் பின்னால் தமிழனுக்குத் தன்மான உணர்வை ஊட்டிய பெரியார் ஒருமுறை தமிழ் எழுத்துகளை மாற்றி அமைத்து எம்.ஜி.ஆர்.​ ஆட்சியில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவர்களெல்லாம் எதை வசதி என்று கருதினார்களோ அதற்கேற்ப எழுத்து மாற்றம் செய்தார்கள்.​ இவர்கள் மாற்றியிருக்காவிட்டாலும் தமிழுக்கு அது ஒன்றும் குறைவில்லை;​ மாற்றியதனாலும் தமிழுக்கு அது ஒன்றும் ஏற்றமில்லை.
இளங்கோவன்கூட இப்போது தோற்றுவிட்டுப் பொழுதுபோகாமல் வீட்டில் தான் இருக்கிற காரணத்தால்,​​ அவர்கூட தமிழ் எழுத்துகளில் ஏதாவது மாற்றம் செய்து பார்க்கலாம்.​ தமிழர்கள் சினக்க மாட்டார்கள்.​ ஏனென்றால் தமிழின் உயிர் வரி வடிவத்தில் இல்லை;​ ஒலி வடிவத்தில் இருக்கிறது.
நம்முடைய அப்பனுக்கு அப்பனான வள்ளுவன் இப்போது நம்மிடையே வந்து,​​ நாம் அவனிடம் உலகப் பொதுமறையான திருக்குறள் நூலைக் கொடுத்தால்,​​ அப்பெருமகன் திருதிருவென்று விழிப்பான்;​ தான் எழுதிய திருக்குறள்தான் அது என்று அவனால் புரிந்து கொள்ள முடியாது.​ ஏனென்றால்,​​ எழுத்து வடிவம் மாறிவிட்டது.
உன்னை எங்களுடைய தாய் பெறத் தவறியிருந்தால் தமிழர்களுக்கு முகவரியே இல்லாமல் போயிருக்கும் என்று நாம் சொன்னால்,​​ வள்ளுவர் வெட்கப்பட்டுப் புன்முறுவல் பூப்பார்.
நாம் பேசுவது வள்ளுவனுக்கும் தொல்காப்பியனுக்கும் புரியும்.​ அவர்கள் பேசுவது நமக்குப் புரியும்.​ ஐயாயிரம் ஆண்டுகளாக விட்டுப் போகாத தொடர்ச்சி தமிழுக்கு இருக்கிறது.
இன்று சாசர் நேரில் வந்து ஆங்கிலத்தில் பேசினால் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவுக்குப் புரியுமா?​ கன்பூசியஸ் நேரில் வந்து சீனம் பேசினால் நேற்றைய மாசேதுங்குக்குப் புரிந்திருக்குமா?​ காளிதாசன் காஞ்சிபுரத்துக்கு நேரில் வந்து சம்ஸ்கிருதத்தில் பேசினால் பெரிய சங்கராச்சாரியாருக்குப் புரியுமா?​ ஒரேகாலத்தில் ஒரே இடத்தில் வாழும் பெரிய சங்கராச்சாரியாரும் சின்னச் சங்கராச்சாரியாரும் சம்ஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லையே!​ அதை வாழும் மொழியாக இல்லாமல் செய்து கொண்டு விட்டார்களே.
ஒரு தாய் வயிற்று மக்களாக சாசரும் ஒபாமாவும் இருந்தும்கூட,​​ கன்பூசியஸýம் -​ மாசேதுங்கும் இருந்தும்கூட,​​ அவர்கள் ஒருவருக்கொருவர் அன்னியப்பட்டுப் போனதற்குக் காரணம் என்ன?​ அந்த மொழிகளுக்கு ஒரு தொடர்ச்சி இல்லை என்பதனால்தானே!​ தமிழ் அந்தத் தொடர்ச்சியைப் பெற்றிருக்கிற காரணத்தால்தான் வள்ளுவரும் நாமும் அன்னியப்படவில்லை -​ என்பது பெருமைக்குரியது இல்லையா?
மேலும் மொழி என்பது வெறும் ஒலிதானே என்று கேவலமாகப் பேசுகிறாரே மத்திய அரசின் முன்னாள் இணை அமைச்சர் இளங்கோவன்!
காந்தி என்பது கைத்தடியும்,​​ கண்ணாடியும்,​​ மெலிந்த உடலும்,​​ விரிந்த காதுகளும்தானா?​ அந்த அடையாளத்தை நாம் ராஜ்காட்டில் எரித்து விட்டோமே!​ எரிக்க முடியாத காந்தி இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்கு உலகத்தின்மீது பெரிய தாக்கத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்போகும் அவருடைய வன்முறையற்ற அரசியல் நெறியிலும் வாய்மையிலும் அல்லவா வாழ்கிறார்!​ அடையாளத்திற்குள் அடங்கி இருப்பது எது என்பதுதானே நோக்கத் தக்கது.
தமிழ் என்பது ஒலிதான்.​ அந்த ஒலிக்குள் தொல்காப்பியம்,​​ எட்டுத்தொகை,​​ பத்துப்பாட்டு,​​ உலகப் பெருஞ்சிந்தனையான திருக்குறள்,​​ சிலப்பதிகாரம்,​​ மணிமேகலை,​​ சீவகசிந்தாமணி,​​ வளையாபதி,​​ குண்டலகேசி,​​ பதினெண்கீழ்க்கணக்கு,​​ ஒப்பற்ற திருமூலர்,​​ நாயன்மார்கள்,​​ ஆழ்வார்கள்,​​ கல்வியில் பெரிய கம்பன்,​​ நிகரற்ற புரட்சியாளர்களான சித்தர்கள்,​​ பிறர் பசி பொறுக்காத வள்ளல் பெருமான் ஆகியோரின்
சிந்தனைகளல்லவா இந்தத் தமிழ் ஒலிக்குள் அடக்கம்.
இந்தச் சிந்தனைகளின் உருவாக்கம்தானே மூவாயிரம்,​​ நான்காயிரம் ஆண்டுத் தமிழ்நாடு.​ “தமிழன் என்றோர் இனமுண்டு;​ தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று நாமக்கல்லார் வியந்து ஓதும் தமிழரின் தனிப் பெருங் குணத்தை வடிவமைத்தது தமிழ்மொழிதானே!
வெற்றுச் சத்தம் ஓர் இனத்தை வடிவமைக்க முடியுமா?​ எல்லா மொழிகளும் ஒலிகள்தாம் என்றாலும்,​​ பெண் கற்பெனும் திண்மையால் பெருமை பெறுவதுபோல ​(குறள்:​ 54),​ தமிழ் என்னும் ஒலியமைப்பு தன் உள்ளார்க்கு ஒப்பற்ற உள்ளடக்கத்தால் பெருமை பெறுகிறது.
காப்பி என்பதைக்கூடத் தூய தமிழில் சொல்ல வேண்டும் என்று தமிழ்ப் பற்றாளர்கள் சொல்கிறார்களே என்று இளங்கோவன் நகையாட,​​ அவையே சிரிப்பில் ஆழ்ந்தது என்று அந்த ஆங்கிலச் செய்தித்தாள் தெரிவிக்கிறது.​ பெற்ற தாயை நகையாடினால்​ கூ​டச் சிரிப்​பார்​கள் இவர்​கள்.​ இவர்​களுக்கெல்லாம் சொரணை எங்கே இருக்கிறது?
காப்பி என்பது குளம்பி என்று தமிழில் அறியப்படுகிறது.​ காப்பிக்கொட்டை மாட்டுக் குளம்பின் வடிவத்தில் இருப்பதால் அந்தப் பெயர் ஆங்கிலத்தில் ஏற்பட்டது குறித்து இளங்கோவன் நகையாட மாட்டார்.​ அதே அடிப்படையில் தமிழில் உருவானால் இவர்கள் நகையாடுகிறார்கள்.
அயல்மொழியிலிருந்து வரும் சொற்களை அப்படியே ஏற்க வேண்டும் என்னும் கருத்து பக்தவத்சலம் காலத்திலிருந்து பேசப்பட்டு வருவதுதான்.
பேருந்து நிலையம் என்றால் புரியாது என்றார் பக்தவத்சலம்.​ அவர் பதவியை விட்டு இறங்கிய பிறகு அண்ணா காலத்தில் அது பேருந்து நிலையமானது.​ அதன் பிறகு அது என்ன என்று புரியாமல் பயணிகளெல்லாம் பெட்டியும் கையுமாகக் காவல்நிலையத்திற்கா வந்தார்கள்?​ காவல் நிலையம் என்றால் என்ன என்று புரியாமல் வானொலி நிலையத்திற்கா போனார்கள்?
“மதராஸ் ராஜ்ஜியம்’ என்ற பெயர்தான் உலகம் முழுவதிலும் அறியப்பட்டிருக்கிறது.​ அந்தப் பெயரை மாற்றக் கூடாது என்று அடம்பிடித்தார்கள் காங்கிரஸ்காரர்கள்!​ அதற்காக உண்ணாநோன்பிருந்த சங்கரலிங்க நாடாரைச் சாக விட்டார்கள்.​ அண்ணா அதைத் தமிழ்நாடு என்று மாற்றினார்.​ அதனால் தமிழ்நாடு உலக வரைபடத்திலிருந்து மறைந்து விட்டதா?
அந்தக் காலத்தில் “பஸ் ஸ்டாண்டு’ என்று என் தாயாருக்குச் சொல்ல வராது.​ “காரடி’ என்றுதான் சொல்வார்கள்.​ ஒருநாள் என் தாயாரிடம் கேட்டேன்:​ ”ஏன் ஆத்தா!​ இதுக்குக் காரடி என்று எப்படிப் பெயர் வந்தது?”
என் தாயார் சொன்னார்கள்:​ ”தேர் நிற்கிற அடி தேரடி என்றால் கார் நிற்கிற அடி காரடிதானே!” “ஸ்னோ’வை முகவெண்ணெய் என்றும் “டர்க்கி டவலை’ தேங்காய்ப்பூத்துண்டு என்றும்தான் என் தாயார் பேசிக் கேட்டிருக்கிறேன்.
என் தாயார் தூயதமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்!​ வெளிநாட்டிலிருந்து ஒரு பொருள் வரும்போது,​​ அது வெளிநாட்டுப் பெயரோடுதான் வரும்.​ அது தங்கள் நாக்கில் வழங்காது என்பதால்,​​ அதனுடைய தன்மைக்கு ஏற்ப நம்முடைய தமிழ்த் தாய்மார்கள் அவற்றுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டி விடுவார்கள்.
இப்போதுதானா வெளிநாட்டிலிருந்து பொருள்கள் இறக்குமதியாகின்றன?​ குதிரை அரேபியாவிலிருந்து இறக்குமதியான விலங்குதான்.​ அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று,​​ தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது.​ அது கரையில் இறங்கியவுடன் “குதித்து’ ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்;​ “பரிந்து’ ​(வேகமாக)​ ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்!
மிளகாய் இறக்குமதியானது.​ இட்ண்ப்ப்ண்​ என்​கிற அத​னு​டைய ஆங்​கி​லப் பெயரைத் தூக்கிவிட்டு,​​ மிளகுபோல் காரமான காய் என்பதால் மிளகாய் என்று பெயரிட்டான்.
வான்கோழி வந்து கப்பலில் இறங்கியது.​ நாட்டுக்கோழி போலவும் இருந்தது;​ உயரமாகவும் இருந்தது.​ வான் அளவு உயரமான கோழி என்பதால் வான்கோழி எனப் பெயரிட்டான்.​ இவையெல்லாம் மக்களே
செய்து கொண்ட மொழிமாற்றங்கள்.
காலத்திற்கேற்றவாறு ஒரு மொழியில் அறிவியல்,​​ கணிதம்,​​ பொருளியல்,​​ சட்டம்,​​ பொறியியல்,​​ மருத்துவம் என்று துறைதோறும் துறைதோறும் புதிய சொற்கள் ஆக்கம் பெற வேண்டும்.​ அப்போதுதான் அது காலத்தோடு போட்டியிட்டு வாழும்.​ இல்லாவிடில் அது மிகச்சிறந்த பிறிதொரு மொழியான சமஸ்கிருதம்போல் வழக்கொழிந்து போய்விடும்.
மேலும் தமிழ் என்பது வெறும் ஒலிதான் என்று இளங்கோவன் கேவலப்படுத்துகிறாரே!​ இந்த ஒலியில் அயலொலி கலக்கக்கூடாது என்பதைத் தமிழன் வரம்பிட்டு வைத்திருந்தான்.
விஷம் என்று சொல்லக்கூடாது;​ நஞ்சு என்றுதான் சொல்ல வேண்டும்.​ ஒருவேளை ஏதோ ஒருநிலையில் சொல்ல நேரிட்டால்,​​ “விடம்’ என்று தமிழ்ஒலிக்கு ஏற்ப மாற்றித்தான் சொல்ல வேண்டும்.
இது ஒல்காப் புகழ் தொல்காப்பியன் தமிழை ஆடு,​​ மாடு,​​ பன்றிகளெல்லாம் மேய்ந்து விடாதபடி வேலியிட்டுக் காத்த வரலாறு.​ “வடசொற்கிளவி வடவெழுத்து ஓரீஇ’ என்று பேசுவான் அவன்.
கல்வியில் பெரிய கம்பன் வடமொழிக் காப்பியத்தைத் தமிழ்ப்படுத்தியவன்.​ வடஒலிகளை வடநாட்டிலேயே விட்டுவிட்டான் அந்த மேதை.​ விபீஷணனை வீடணன் என்றான்;​ சீதாவை சீதை என்றான்;​ லெக்ஷ்மணனை இலக்குவன் என்றான்.
நம்முடைய காலத்தில் தமிழை அயல்மொழிக் கலப்பிலிருந்து காக்கும் பணியினைத் தனக்கு நிகரே இல்லாத மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை,​​ ஈடு இணையற்ற மறைமலையடிகள்,​​ தமிழுக்குப் பெரியாழ்வாரான தேவநேயப் பாவாணர்,​​ பெருஞ்சித்திரனார்,​​ வ.சுப.​ மாணிக்கம்,​​ கி.ஆ.பெ.​ விசுவநாதம் போன்ற எண்ணற்ற சான்றோர்கள் செய்தார்கள்.​ புலவர்கள் மட்டத்தோடு இந்தத் தூய தமிழ் சுருங்கிப் போகாமல் அதை மக்களியக்கமாக்கிய பெருந்தகை அண்ணாதான்!
ஈ.வே.கி.சம்பத் தன் மகனுக்கு இளங்கோவன் எனப் பெயரிட்டமைக்கும்,​​ வைகோ ​ தன் மகளுக்குக் கண்ணகி எனப் பெயரிட்டமைக்கும்,​​ பழனியப்ப பிள்ளை மகன் கிருஷ்ணன் தன் தகப்பனார் சூட்டிய பெயரை வங்கக் கடலில் வீசி எறிந்துவிட்டு நெடுமாறன் ஆனதற்கும்,​​ மருத்துவர் “இராமதாஸ்’ தன் பெயரை இராமதாசு எனத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றிக் கொண்டதற்கும்,​​ தொல்.​ திருமாவளவனின் தூயதமிழ்ப் பெயர் மாற்றத்திற்கும் அவர்களின் ஈடு இணையற்ற தமிழ்ப் பற்றே காரணம்.​ தாயைப் போற்றுகிறவனெல்லாம் தாய்த் தமிழையும் போற்றுவான்!
தமிழ்ப் பற்றுடைய குமரி அனந்தன் தன்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு இளங்கோவனை அழைத்து வந்து பேச விட்டதற்குப் பதிலாகப் பிறந்தநாளே கொண்டாடாமல் இருந்திருக்கலாம்!
பக்தவத்சலங்கள் இன்னும் இருக்கிறார்களே!

No comments:

Post a Comment