தொடர்பாளர்கள்

Sunday, June 27, 2010

திருக்குறளில் இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் யார்?


திருக்குறளில் இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் யார்?
இருள்
சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர்
புகழ் புரிந்தார் மாட்டு.

என்பது வள்ளுவம் காட்டிய இறை வணக்கம். இதில் இருள் சேர் இருவினை என்றால் என்ன பொருள் ? பலரும் பலவாறு கருத்து அறிவித்து விளக்கம் செய்துள்ளனர்.. இருவினை என்றால் நல வினையும் தீ வினையும் ஆகும் என்பது ஒரு கருத்து. தீ வினை இருள் சேர்ந்தது; இருள் சேர்ப்பது. நல் வினை இருள் செர்ந்ததாகுமா? எனவே அது பிழையானக் கருத்தாக நமக்குப் புலப்படுகிறது.

மாந்த வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது. இவை இரண்டும் வாழ்க்கையில் இயல்பானவை. இன்புறுத்துவன எல்லாம் நிலையான நிறைவான வாழ்வின்பத்தைத் தருவனவல்ல. அதேப் போல் துன்பம் எனப் பட்டவை எல்லாம் நமக்குத் துன்பத்தைத் தருவன அல்ல. இன்பத்தால் துன்பமும் துன்பத்தால் இன்பமும் விளைவுகளாக அமையலாம்.

பெரியோர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் இரு வகையாகப் பகுத்துள்ளனர். தன்னலங் கருதி மாந்தன் பிறர்க்குக் கேடு செய்ய முற்படுகின்றான். தன்னை அறியாமல் தனக்குத் தானே இதனால் தீமையை விளைவித்துக் கொள்கிறான். பேராசையால் விளைவறியாமல் இன்பம் துய்க்க எண்ணுகின்றான். மண், பெண், பொன் ஆகிய மூன்றின் பாலும் ஆசையுற்று அவா கொண்டு இன்பமடைய நினைக்கின்றான். இவ்வாறு அவன் அடைகின்ற இன்பமே சிற்றின்பம் எனப் படுகின்றது.
இத்தகு சிற்றின்பத்தால் ஒருவனுக்குக் கிடைக்கின்ற விளைவு அவனுக்கு நன்மையைத் தராத கேடு செய்யும் துன்பமே யாகும். பொய், களவு, சூது, கொலை, பாலியல் வல்லுறவு முதலானவற்றால் ஒருவனுக்கு இன்பம் வேண்டுமானால் கிட்டலாம். ஆனால் அந்த இன்பம் அவனுக்குப் பெருமை தரும் இன்பம் அல்ல. அது உடக்காலமாகவே அவனிடம் இருக்கும். பின்னர் கூத்தாட்டு அவைக் குழாம் போல் இல்லாது போய் விடும்.
ஒருவனுக்கு உடலில் எங்கேனும் சொறியோ சிரங்கோ வந்து விட்டால் கடுமையான அரிப்பெடுக்கும். இதனால் அவன் எடுத்த அரிப்பினை சொறியவே எண்ணுவான். அவ்வாறு அவன் சொறிகின்ற பொழுது அவனுக்கு உணக்கையாக, இன்பமாக இருக்கும். ஆனால் சொறிந்து விட்டு விட்டப் பிறகுதான் தெரியும் அதனுடைய துன்பம் எத்தகையதென்று. அதனால் வரும் எரிச்சலை அவனால் தாங்க முடியாமல் போகும். இத்தகையதுதான் ஒருவனுக்குக் கேடுகளால் வரும் சிற்றின்பமும். முதலில் இன்பம் தரும் ஆனால் பின்னாளில் பெரும் துன்பத்தைத் தந்து விடும்.

பேரின்பம் என்பது அத்தகையது அல்ல. ஒரு நல் வினையை ஆற்றுவதற்காக தொடக்கத்தில் ஊன் மறந்து, உறக்கம் மறந்து, உடல் நலம் மறந்து , கால நிலை பார்க்காமல் உண்மையாகவே உழைக்கின்ற ஒருவர்க்குக் கிட்டுகின்ற இன்பம் பேரின்பமாகும். தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்கிறார் வள்ளுவர். தம் வினையை வெற்றியுடன் முடிப்பதற்காக இவ்வாறு ஒருவர் உறுதி வாய்ந்த உள்ளத்தோடு இயங்குவதை வாழ்வதைத் தவம் என்கிறார் வள்ளுவர். படிக்கும் பிள்ளைகளும், பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களும், நாடு மீட்கப் போராடும் விடுதலைப் போராளிகளும், விழிப்புணர்வை ஏற்படுத்தி குமுகாயப் புரட்சி மேற்கொள்ளும் தொண்டூழியர்களும் இவ்வாறு தவம் இருப்பவர்களே. இவர்கள் இத்தகு தவத்தின் இறுதியில் பெறும் இன்பமே பேரின்பமாகும்.
இதன் வழி இன்பம் என்பது சிற்றின்பம் பேரின்பம் என இரு வகையாகவும் துன்பம் என்பது நல்வழி துன்பம் அல்வழி துன்பம் என இரு வகையாகவும் பகுக்கப் பட்டிருப்பதை அறியலாம். இங்கு மாந்த வாழ்வில் இருள் சேர்ப்பன சிற்றின்பமும் அல்வழி துன்பமுமேயாம். இவற்றையே இன்பவினை துன்பவினை என இரு வினையாகக் கொள்வர் சான்றோர்.

இறைவன் என்பது இயக்குபவன் நடத்துபவன் ஆளுமை செய்கின்றவன் எனும் பொருள்களை உணர்த்தும். சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்கிறது தொல்காப்பியம். எனவே பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் வாழும் வாழ்வில் உலகு உய்ய மேலோங்க நல்வினை பலவற்றை ஆற்றி அவ்வாழ்வைப் பொருள் சேர்ந்த புகழுடைய வாழ்வாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் சேர்ந்த புகழுடைய சான்றோர்களை நாம் நம் வாழ்வின் வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும். இத்தகையார் நல் வழி செல்வதால் இவர்கள் வாழ்வில் இருள் சேர்க்கும் இருவினைகள் சேரா.


தொடரும்..

No comments:

Post a Comment