தொடர்பாளர்கள்

Thursday, April 9, 2020

முனைமுகப் பணியாளர் Front liner

முனைமுகப் பணியாளர் Front liner
கோறனி நச்சில் உலகம் முழுமைக்கும் பேச்சுப் பொருளாய், முதன்மைப் பொருளாய் விளங்கி வரும் இக்காலக் கட்டத்தில் அந்நச்சில் தொடர்பாகவும் அதன் வழி உருவாகும் நோய் தொடர்பாகவும் பல்வேறு சொற்களை ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி நான் ஆக்கஞ் செய்து வெளிக்கொணர்ந்து வருகின்றேன்..இவற்றுள் சிலவற்றை மலேசிய ஊடகங்கள் பயன்படுத்தி தமிழ் நலம் காப்பதை எண்ணி மகிழ்கின்றேன்.. அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே வேளை இத்தகு சொற்களை நான் முனைந்து வழங்கிட எனக்குத் தொடர்ந்தாற்போல் ஊக்கமூட்டிக் கொண்டிருக்கும் பெரியோர்களுக்கும் நண்பர்களுக்கும் என் நன்றி.
தமிழ் உணர்வாளன், ஆய்வாளன் எனும் முறையில் என் அறிவுக்கு எட்டிய வரையில் நுணுகிப் பார்த்தே இத்தகு சொற்களை நான் படைக்கின்றேன். இவற்றுள் நிற்பன நிற்கும் ; ஏட்டளவில் பதியப்படுவன ஏட்டளவில் வழங்கப்படும். என் போன்றோர் வேலை உரிய நேரத்தில் மொழி நலங் கருதி உரிய சொற்களை வழங்குதலை கடமையாய்க் கொள்வதேயாகும்; இப்பணியை நான் என் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
அவ்வகையில் நான் வழங்கிய ஒரு சொல்தான் முனைமுகர் என்பது. இச்சொல்லை நான் வழங்கியதும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கல்வியாளர் சிலரும் உடனே பயன்பாட்டுக்கும் கொணர்ந்து பலருக்கும் பரப்பினர்.
இச்சொல்லை நான் இந்தக் கோறனி நச்சில் வல்லாண்மை புரியும் காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்திட எனக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்கள் ஔவையும் பாரதியுமேயாவர்.
முனைமுகத்து நில்லேல் என ஔவை எழுதிய ஆத்திசூடியிலும் முனைமுகத்து நில் என பாரதி எழுதிய ஆத்திசூடியிலும் காணக்கிடைத்த முனைமுகத்து என்ற சொல்லிலிருந்தே முனைமுகர் எனுஞ் சொல்லை நான் படைத்தேன்.
போர்ச் சூழலில் இருபடைகளும் போரிடும் வேளையில் உயிரைத் துச்சமென மதித்து படையின் முன் வரிசையில் நின்று போரிடுபவர்களே முனைமுகத்து வீரர்களாவர்.
இரு படைகளும் மோதிக் கொண்டிருக்கும் மிகவும் நெருக்கடியான கடுமையான முன்னிடமே முனைமுகமாகும். போரில் இந்த இடத்தில் நிற்பார் உயிரே முதலில் போகும். அத்தகு இடர் மிகுந்த , உயிரைப் பணயம் வைத்து புரியும் போருக்கு முந்தி போய் இக்கட்டான முன் அணியில் நிற்காதே எனும் பொருளிலேயே ஔவை முனைமுகத்து நில்லேல் என்றார். ஆனால் பாரதியோ அதற்கு நேர் எதிர்மாறாக வீரத்தை நிலைநாட்ட வேண்டுமே ஒழிய அஞ்சி ஓடக்கூடாது எனும் உணர்வோடு போரில் வெற்றிபெற துணிவுடன் முனைமுகத்து நில் என்றார். முனைமுகம் போரில் இரு படைகளும் மோதும் முனை இடமாகும். இதனை நாம் போர் முனை என்றும் சொல்வோம்.
உயிரைப் பணயம் வைத்து போர் செய்வது போலவே மிகக் கொடுமையான கோறனி நச்சிலைக் கொன்றொழிக்க அந்நச்சில் மிக எளிதில், முதலில் தொற்றக் கூடிய இடத்திலிருந்து பணியாற்றும் ஈகம் நிறைந்த பணியாளர்களை வெறுமனே முன்வரிசையினர், முன்னணியினர் என்று சொல்லாமல் முனைமுகப் பணியாளர் என்று நான் குறிப்பிட்டேன்.
ஆங்கிலத்தில் Front liner எனத் தனிச்சொல்லாகவே குறிப்பிடுகின்றனர். இச்சொல்லில் தமிழைப் போலவே (அர் ) er எனும் பலர்பால் பின்னொட்டு suffix இடப்பட்டுள்ளது. தமிழில் முனைமுகர் எனின் தனிச்சொல்லாக நின்று இப்பணியாளர்களையே குறிப்பதாகும். இதனைச் சற்று தெளிவுறுத்தி முனைமுகப் பணியாளர் என்றாலும் மிகப் பொருந்துவதாகவே இருக்கும். முன் வரிசையினர், முன்னணியினர் எச்சூழலிலும் எங்கும் இருக்கலாம் ஆனால் முனைமுகப் பணியாளர் இடர்மிக்க , ஈகம் நிறைந்த இடத்தில் மட்டுமே இருப்பர். இக்கால் இத்தகு சூழலில் பணியாற்றுபவர்கள் செவிலியர், மருத்துவர், காவல்துறையினர், படைத்துறையினர், வேறுசில நலத்துறை அதிகாரிகள் ஆவர். இவர்கள் எல்லாரும் போல முன்வரிசையாளர் அல்லர் உயிரை ஈகம் செய்யக் கூடிய முனைமுகராவர். முன் வரிசையும் , முன்னணியும் வேறு பணிகளுக்கும் வரும் ஆனால் உயிரீகப் பணிக்கு முனைமுகமே அமையும். இந்தச் சிறப்பு கருதியே front liner எனும் சொல்லுக்கு நான் முனைமுகப் பணியாளர் அல்லது முனைமுகர் என்றேன். இச்சொல்லை நான் வழங்க எனக்கு அடியெடுத்துக் கொடுத்த ஔவைக்கும் பாரதிக்கும் என் நன்றி.....
முனைமுகப் பணியாளரை ஏற்றிப் போற்றுவோமாக
இரா. திருமாவளவன்

No comments:

Post a Comment