தொடர்பாளர்கள்

Sunday, January 6, 2013

வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி 4

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு .

மனத்தூய்மை அதன் அடிப்படையில் செய்யப்படும் செயலுமாகிய அறச்செயல் மண்ணில் பிறந்த மாந்த உயிருக்கு எத்தகு ஆக்கத்தை தரும் தெரியமா ?....மிகப்பெரிய ஆக்கத்தை தரும்...செல்வத்தை தரும்....இந்த அறச்செயலால் மேலும் மேலும் இந்த ஆக்கங்கள் பெருகும் என்கிறார் வள்ளுவர் .எனவே மாந்தப் பிறப்பின் வாழ்வுக் கடப்பாடு அறம் புரிவதே .அறம் என்பது பொய்மையை தீமைகளை அறுத்தெரிவது ...நாம் செய்கின்ற நன்மைகளால் தீமைகள் அகலும் :ஒளிப்பட்டு இருள் அகலுவது போல அறச்செயலால் கேடுகள் விலகும்..உலக வாழ்க்கையில் மாந்தர்க்கு சூழும் கேடுகளை அகற்றக் கூடிய வல்லமை அறச்செயலுக்கு மட்டுமே உண்டு.நன்மை புரிந்ததால் தீமைகள் அகன்றதால் உலக மக்கள் மகிழ்ச்சியுறுவார்கள் .அதனால் அறப்பணி புரிபவர்க்கு பேரும் பெருமையும் சேரும் .எல்லோரும் அத்தகையாரைப் பாராட்டுவார்கள் :புகழ்ந்துரைப்பார்கள் .நற்பணி செய்கின்ற காரணத்தினால் நல்லோர்களால் அவர்களுக்கு செல்வமும் வந்து சேரும் .மாந்தருக்கு இந்த அறத்தை விட வேறு எந்த ஆக்கமும் உண்டா ?என வினவுகின்றார் வள்ளுவர் .இக்குறளின் வாயிலாக மாந்தன் ஒருவன் இந்த உலகுக்கு நன்மை புரிய வேண்டும் ... அந்நன்மையால் உலகம் சிறந்தோங்கும் ..,உலகம் சிறப்பதால் அதன் விளைவாக என்றென்றும் போற்றப்படும் நிலையை அம்மாந்தன் எய்துவான் என்பதை உணர்த்த வேண்டும் என்பதே வள்ளுவர் நோக்கம் .இல்லாதார்க்கு கொடுத்து உதவுதல் ,பசிப்பிணியால் வாடுபவர்க்கு உணவளித்தல்,கல்வி அறிவினை ஊட்டுதல் நல்ல நெறிகளைப் புகட்டுதல் ,அவற்றின் படி வாழுதல் முதலானவை நல்லறச்செயல்களாகும் ;இவ்வுலகத்தில் பலர் இவ்வாறான நற்பணிகள் பல புரிந்து புகழ் பெற்றுள்ளனர் என்பதை பல்வேறு சான்றுகளால் நாம் அறியலாம்...குட்ட நோயால் பாதிக்கப்பட்ட கருப்பின நோயாளிகளுக்கு மனிதநேய உணர்வோடு பண்டுவம் செய்த அல்பிரெட் சுவைச்சர் இணையரின் அறச்செயல் இன்றும் உலகோரால் போற்றப் படுகின்றது ஆயிரம் ஆயிரம் தொழுநோயாளிகளை பேணிப்புரந்த அன்னைத் திரேசாவின் அறப்பணியால் அவருக்கு கிடைத்த பேரும் புகழும் அவற்றோடு அவருக்கு கிடைத்த நோபல் பரிசும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கன ;அப்பழுக்கற்ற உண்மை உணர்வால் எவ்வகையான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் அறப்பணியால்தான் இத்தகு சிறப்பும் செல்வமும் சேரும். எனவே எங்கும் எப்பொழுதும் நல்லன எண்ணுக :நல்லன செய்க நல்லதே நடக்கும்.


ஆக்கம் : ஐயா இரா திருமாவளவன்

No comments:

Post a Comment