தொடர்பாளர்கள்

Monday, January 28, 2013

மலேசியத் தமிழர்களைக் கூறுபோடும் வேலையில் மக்கள் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம் மலேசியத் தமிழ் நெறிக் கழகம் கடும் கண்டனம்

மலேசியத் தமிழர்களைக் கூறுபோடும்
வேலையில் மக்கள் தொலைக்காட்சி
ஈடுபட வேண்டாம்
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் கடும் கண்டனம்

மக்கள் தொலைக்காட்சி ,இந்நாட்டில் இயங்கும் வன்னியர் சங்கத்தின் விழா ஒன்றினையும் அதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் கொ .க.மணி ,மருத்துவர் இராமதாசு அவர்களும் ,தேசிய முன்னணித் தலைவர் டத்தோ முகமது ஸி அவர்களும் பேசியதையும் ஒளிபரப்பியது. இந்நாட்டில் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழுக்கும் தமிழர்க்கும் நலன் சேர்க்கும் என்ற பேரவாவில்தான் எமது இயக்கம் மக்கள் தொலைக்காட்சி தொடக்கத்தில் ஒளிபரப்பினைத் தொடங்கியப் பொழுது பெரிதும் வரவேற்றது.தமிழ் நலம் பேணுவதில் மக்கள் தொலைக்காட்சியை நாம் பெரிதும் போற்றினோம்.ஆனால் தமிழைப் பேணு ம் அதன் கொள்கையும் படிப்படியாக தேய்ந்து வருகின்றது. அதே வேளை ஒட்டு மொத்த தமிழினத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியில் மக்கள் தொலைக்காட்சி தற்கால் ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வன்னியர் என்ற சாதி வெறியை ஊட்டுவதும்,தமிழ் நலம் தமிழர் நலம் என்று பேசுவதை விடுத்து வன்னியர் சமூகம் ,வன்னியர் குலம் ,வன்னியர்க் கல்வி ,வன்னியர் நலம் என்று பேசுவதும் ,ஒன்று பட்டு இயங்க வேண்டிய ,வாழ வேண்டியத் தமிழின ஒற்றுமையைத் திட்டமிட்டு சிதைக்கும் சதிச் செயலாகும். வன்னியர் சங்கம் என்ற சாதிப் பெயரால் நடத்தப்பட்ட விழாவில் நம் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துக்கொண்டு பாராட்டு தெரிவிப்பது வருந்தத்தக்கது ,கண்டிக்கத்தக்கது .

இக்கால் சாதிப் பெயரைக் கூறிக்கொண்டு ஒட்டு மொத்த தமிழரின் வரலாற்றுத் தொன்மையை சாதிச் சார்பாக்கிக் கொண்டு வருகிறார்கள்.வரலாற்று அறிஞர்கள் உலகில் மூத்தக் குடியாக "தமிழ்க் குடி"என்றே கூறுகிறார்களே ஒழிய வன்னியர்க்குடி என்று கூறவில்லை . வரலாற்றில் தொன்மை மிக்கவர்கள் ,வீரப் பரம்பரைகள் வன்னியர்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் வேளை தேவேந்திர குல வர்க்கம் பள்ளர் மள்ளர் தான் உலகில் மூத்த வீரப் பரம்பரை என்று ஒரு பிரிவினரும், இல்லை முக்குலத்தோர்தான் என்று இன்னொரு பிரிவினரும் இல்லை பறையர் தான் உலகில் முன்னோடிகள் என்று மற்றொரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் உயர்த்தியும் தாழ்த்தியும் இழித்தும் பழித்தும் பேசுவது எவ்வகையிலும் பெருமையைச் சேர்க்கப் போவதில்லை ,தமிழருக்கு நன்மையையும் சேர்க்கப் போவதில்லை .

மக்கள் தொலைக்காட்சியின் இத்தகு கொடியச் செயலால் இத்தொலைக்காட்சியைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்களில் சாதி வெறித் தனம் நஞ்சாக விதைக்கப்பட்டு தமிழ் தமிழன் என்ற ஒன்று பட்ட உயிர்ப்புச் சிந்தனை சிதைக்கப்படும். ஒன்று பட்டு வலிமையோடு தமிழினம் இருக்கும் வரை தமிழினத்தைச் சிதைக்க முடியாது என்று கருதி சூழ்ச்சி வலைப் பின்னும் தமிழினப் பகைவர்களுக்கு மருத்துவர் இராமதாசு போன்ற தலைவர்கள் தங்களை அறியாமலும் ,சாதி வெறியாலும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் .

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே தமிழர்கள். ,தமிழர் என்னும் இனமான உணர்வோடு தமிழர்கள் வலிமையோடு ஒன்றிணைய வேண்டும். சாதிப் பிரிவுகள் இனத்தைக் கூறு பிரிக்கும் கேடுகள் .சாதிகள் இனத்தின் அடையாளம் ,ஆகா. சாதிக்கு மொழி கிடையாது .இந்நாட்டில் வாழும் தெலுங்கு ,மலையாள,பஞ்சாபிய அன்பர்கள் சாதியால் பிரித்திருக்க வில்லை. அவர்கள் அனைவரும் மொழி இன உணர்வால் ஒன்று பட்டு இருக்கிறார்கள் ,அதனால் வலிமையோடு இருக்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறார்கள் .ஆனால் தமிழன் தன்னைத் தமிழன் என்று அடையாளம் காட்டாமல் சாதியால் பிளவுற்றால் அது நமக்கு நாமே குழி தோண்டி புதைத்துக் கொள்ளும் பேதைமைத் தனமாகும்.மக்கள் தொலைகாட்சி மக்களுக்கானத் தொலைகாட்சியாகத் ,தமிழினத் தொலைகாட்சியாக விளங்க வேண்டுமே ஒழிய வன்னியர் தொலைகாட்சியாக விளங்குதல் கூடாது .இத்தகு தீயப் போக்கினை உடனடியாக நிறுத்திக்கொண்டு உண்மையாகவே மண் பயனுற மக்கள் தொலைகாட்சி செயல்பட வேண்டுகிறேன்.இவ்வாறு மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா திருமாவளவன் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

No comments:

Post a Comment