ஈன்றாள் பசியும் தற்கொடை வீரனும்
இரா.திருமாவளவன்
தன்முகம் மறைத்துத் தமிழ்ப்புகழ் நாட்டிய
தமிழ்மண் ஈன்ற தலைவனின் ஆக்கம்
உடல்பொருள் ஆவி அனைத்தும் ஈந்து
உயிர்த்தீ ஆன கரும்புலி மறவன்
தாய்மண் விலங்கினைத் தகர்ப்பதற் கென்றே
தன்னலம் பாரா தகைசால் நெஞ்சன்
கிடைக்கும் இன்பெலாம் தனக்கே என்னும்
கீழ்மன மாந்தர் கிடக்கும் உலகில்
இளைய அகவையில் இன்பம் துறந்தவன்
இனிது பெற்ற தாயும் தந்தையும்
பாசம் காட்டிய அன்புத் தங்கையும்
பட்டினி கிடக்க உடுத்த உடையும்
ஒண்ட குடிசையும் எதுவும் இன்றி
ஒடுங்கிய குடும்பினை எட்டிப் பார்த்திட
இயக்கம் வழங்கிய பணியினைச் சுமந்து
தயக்கம் இன்றிச் செல்கிறான் செல்வன்
விடுத்த பணிக்கென பைநிறை பணமும்
வீட்டுப் பணிக்கென வழங்கிய பணமும்
ஏந்திய செல்வன் ஏழ்மைப் பிடியில்
சிக்கித் தவிக்கும் குடும்பினைக் காண்கிறான்
ஐயா எங்கு நீ சென்றனை ஐயா
ஐயிரு திங்களாய்ச் சுமந்த வயிறு பார்
உன்னுடன் பிறந்த உயிர்க்குயிர் தங்கைபார்
உன்னைத் தோள்மேல் சுமந்த தந்தை பார்
உடுத்த உடையிலா தாகையால் தங்கை
ஊர்புறம் செல்கிறாள் இல்லை , தந்தையோ
இன்றோ நாளையோ என்றே கிடக்கிறார்
நன்றுனை ஈன்ற வயிற்றினைப் பாராய்
என்றே தாயார் அழுது புலம்ப
சென்று முடிக்கும் பணியினை ஏந்தியான்
கண்களில் கண்ணீர் கசிந்தது உருகினான்
கரங்களில் வீட்டுப் பணிக்கென வழங்கிய
பணத்தினைத் தாயார்க்குக் கொடுத்துத் தேற்றினான்
பத்து நாள் மட்டுமே பட்டினி தவிர்ந்தது
அடுத்தென் செய்வது அடுத்தென் செய்வது
அன்புச் செல்வனை நாடிய தாயார்
பை நிறை பணத்தினில் சிறிது வேண்டினள்
பையன் கொடுத்தாலும் தப்பிலை தானே
இயக்கம் விடுத்த பணிக்கென உள்ளதை
இம்மியளவும் தொடுகிலேன் தாயினும்
தாய்மண் மீட்பே பெரிதென செல்கிறான்
தமிழ்த்தாய் ஈன்ற கரும்புலி மறவன்!
No comments:
Post a Comment