தொடர்பாளர்கள்

Thursday, February 18, 2010

செங்குருதி காயும் முன் செம்மொழி மாநாடா? தமிழறிஞர் ம. இலெ. தங்கப்பா

செங்குருதி காயும் முன் செம்மொழி மாநாடா?

தமிழறிஞர் ம. இலெ. தங்கப்பா


ஈழத் தமிழ் மக்கள் இழந்து போன விடுதலையை மீண்டும் பெறு வதற்காக நடத்திய போர், கொடிய இனவெறியும் அரசியல் தன்னலச் சூழ்ச்சியரும் இந்தியத் தமிழ்ப் பகைக் கும்பல்களும் கூட்டுச் சேர்ந்து மேற்கொண்ட சூழ்ச்சிகளால் ஒழிக்கப் பட்டுவிட்டது. உலக நாடுகள் பேசும் மாந்த நேயமும் மக்கள் உரிமையும் எங்கோபோய் ஓடி ஒளிந்து கொண்டன.
உலகின் மிகப்பெரிய மாந்தப் பேரவலம் என்றுதான் இதனைக் கூற வேண்டும். 80,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர் கொல்லப்பட்டு, இன்றும் 30,000 தமிழர்கள் முள்வேலிச் சிறைக்குள் முடக்கப்பட்டுச் சொல்லொணா அவலத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். உலகிலேயே இது வரை எங்கும் எப்பொழுதும் நடந் திராத கொடுமைகளும் இழிவுகளும் அவர்கட்கு இழைக்கப்படுகின்றன.
இட்லர் காலத்தில் யூதர்களும் கூட இவ்வளவு துன்பம் அடைந்ததில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களே தவிர, உடலாலும் உள்ளத்தாலும் இவ்வளவு கொடுமைகட்கும் இழிவுகட்கும் ஆளானதில்லை. மாந்த இனமே கொதித்தெழ வேண்டிய பேரவலம். ஆயினும் மிகக் கொடிய, இரக்கமற்ற, மாந்தநேயமற்ற கல் நெஞ்சங்களும் அரசியல் சூழ்ச்சிகளும், தன்னல வெறிகளும் இனப்பகைமையும் இதன் பின்னிருந்து வேலை செய்வதால் உலகமே வாய்மூடிக்கிடக்கின்றது.
இந்த அவலத்தை நீக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
உரோம் நகரம் தீப்பற்றி எரிகையில் நீரோ மன்னன் யாழ்மீட்டிக் கொண்டிருந்தான் என்று வரலாறு கூறும். ஈழநெருப்பு இன்னும் அவியவில்லை. இங்கோர் ஆரவார மாநாடு கூட்டப்படவிருக்கின்றது. உலக முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இது தமிழ்நலம் கருதி மேற்கொள்ளப் படவில்லை. உள்நோக்கம் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் விடுதலைப் போரில் தோல்வி அடைந்ததற்குக் காரணமே இந்திய அரசு தன் தமிழின வெறுப்பாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும், சிங்களன் தொடங்கிய போரைத் தானே முன்னின்று நடத்தியது தான். இவ்வாறு இந்திய அரசு ஈழத்தமிழரை ஒழிக்க முன் வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் தமிழக முதல்வர், இந்திய அரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால் வந்ததுதான். தமிழக முதல்வர் நினைத்திருந்தால் இந்திய அரசு ஈழப்போரில் சிங்களனுக்கு உதவாமல் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.தமிழக முதல்வர் நடுவணரசில் தாம் பெறும் சொந்த நலன்கட்காக ஈழத் தமிழினத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று உலகமே பேசுகின்றது. தமிழக முதல்வரின் இனவுணர்வற்ற, இரக்கமற்ற காட்டிக்கொடுப்பும் இரண்டகத் தன்மையும் இன்று பலராலும் பழித்துரைக்கப்படுகின்றன. போருக்குப் பின்பும் முள்வேலிக்குள் முடக்கப் பட்டுக்கிடக்கும் முப்பதாயிரம் தமிழரைக் காப்பாற்றுவதில் கூடத் தமிழக முதல்வர் அக்கறை காட்டவில்லை.
இந்திய அரசோடு சேர்ந்துகொண்டு போலிக் குழுக்களை இலங்கைக்கு விடுத்துச் சிங்கள அரசின் கொடுஞ் செயல்களை மூடி மறைப்பதிலும் பூசிமெழுகுவதிலுமே முன்னின்றார். சிங்களனின் கையாளாகவே செயல்பட்டார். வரலாற்றிலிருந்து இந்த உண்மையை மறைக்க முடியாது.
இந்த நிலையில் தான் செம்மொழி மாநாடு அவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் விடுதலையை அழித்ததில் தம் பெயர் கெட்டுப்போன நிலையில் மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் தான் இது அறிவிக்கப்பட்டுள்ளது. தம் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள முதலில் இவர் நடத்தவிரும்பியது முன்பு மூன்று முறை தமிழகத்தில் நடந்தது போன்ற மற்றோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி (ஆரவார) மாநாட்டைத் தான். ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் அதற்கு ஒத்துழைப்பு நல்காமையால், அதை நடத்திப் படம் காட்ட முடியாத நிலையில், தம் அதிகாரத்துக்குட்பட்ட செம்மொழி மாநாட்டை இப்பொழுது அறிவித்துள்ளார்.
”உள்ளத்தின் அருள் உணர்வால், மக்கள் நேயத்தால் மேற்கொள்ளப்படும் செயல்களே உண்மைச் செயல்கள். பிறவெல்லாம் போலி” என்கின்றார் திருவள்ளுவர். எண்ணத்தில் தெளிவில்லாதவன் எப்படி மெய்ப் பொருளைக் காண முடியாதோ அப்படியே உள்ளத்தில் அருள் உணர்வு இல்லாதவன் அறம் செய்ய முடியாது என்கின்றார்.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால், தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
- (கு.249) என்பது திருக்குறள்.
தமிழக முதல்வரின் அருள் உள்ளம் எப்படிப்பட்ட தென்பதை ஈழ மக்கள் விடுதலைப் போரில் அவர் ஆற்றிய அரும்பணி காட்டிக் கொடுத்துவிட்டதே. அந்த ”அருள் உள்ளம்” தான் செம்மொழி மாநாட்டை யும் அறிவித்துள்ளது. இதிலிருந்தே மாநாடு எப்படி எப்படி நடக்கும். என்ன என்ன பேசப்படும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். பூச்சும் புனைவுகளும் வெளிப்பகட்டும் விளம்பரமும் அங்குக் களிநடம் புரியும் என்பதை மறுக்க முடியுமா? தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை.தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சிமொழியாகவும் இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும் ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக் காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டல் கட்கு உட்பட்டு உழல்கின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரைப் பல்லாண்டுக் காலமாய்ப் பிணித்துள்ள ஒரு பெருநோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம் மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை

1 comment:

 1. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete

There was an error in this gadget
There was an error in this gadget