தொடர்பாளர்கள்

Tuesday, February 2, 2010

ஒரே மலேசியாவை ஒரு நொடியில் காலில் போட்டு மிதித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர்.


ஒரே மலேசியாவை ஒரு நொடியில் காலில் போட்டு மிதித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர்.


இன்று காலை மலாக்காவில் நடைபெற்ற ஒரே மலேசியா தொடர்பான கருத்தரங்கில் ஒரே மலேசியா கொள்கையை அறிவித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் டத்தோ நாசிர் பின் சாபார் இந்நாட்டு இந்தியர்களையும் சீனர்களையும் மிகக் கடுமையாக இழிவு படுத்தி பேசிய பேச்சு பெரிய சருச்சையை உருவாக்கியுள்ளது.


மிக உயரிய பொறுப்பு வகிக்கும் பொறுப்புள்ள ஓர் அதிகாரி தம்முடைய பதவி நிலையினை அறியாமல் பொறுப்பற்ற முறையில் நாகரிகமற்ற முறையில் கருத்து சொல்லி இருப்பது மலேசியத் திருநாட்டிற்கும் அதன் தலைமை அமைச்சருக்கும் ஏற்படுத்தப் பட்ட இழுக்காகும். இது பற்றி மலேசியா இன்று வலைப்பக்கத்தில் வந்த செய்தி :


“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க (”jual tubuh”) வந்தனர்”, என்றவர் கூறியதாக பெயரை வெளியிட விரும்பாத வட்டாரம் கூறியது.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”, என்று பிரதமரின் சிறப்பு அதிகாரியான நசிர் சாபார் (டை கட்டியிருப்பவர்) கூறினார்.


“மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை வரைந்ததற்கான முழு பொறுப்பும் அம்னோவை மட்டுமே சாரும்” என்று கூறிய நசிர் அன்றைய கூட்டணி பங்காளிகளின் பங்களிப்பை நிராகரித்து விட்டார்.


“குடியுரிமை பறிக்கப்படும்”

எஸ்பிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 கிற்கு உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு வீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டது.


“அவர் (நசிர்) பல மஇகா கிளைகளுக்குச் சென்று இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலையை விளக்கியதாகவும் ஆனால் அக்கிளைகள் அரசாங்கம் விதித்துள்ள வரம்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தன என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அவர்கள் “மிதமிஞ்சிய” கோரிக்கையை விடுத்தனர் என்று குற்றம் சாட்டினார்.


“பகசா மிலாயு அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும். அவர்கள் தொடர்ந்து அவ்வாறான கோரிக்கைகளை விடுத்தால், நான் அவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியும்”, என்று நசிர் கூறினார்.”


இவவாறு இவர் பேசியதன் வாயிலாக இவர் எண்ணிப் பேசும் திறன் , ஆழமாகச் சிந்திக்கும் அறிவாண்மை, கண்ணியம் முதலான நற்பண்புகள் எவையும் இல்லாதவராகவே தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்.

1. இந்தியர்கள் பிச்சைக்காரர்கள்


2. சீனர்கள் சீனப் பெண்களின் உடலை விற்க வந்தவர்கள்


3. இவர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்.


என்று இவர் பேசியதாக வந்த செய்தி இவர் உண்மையான ஒரே மலேசியா கொள்கைக்கு முரணானவர் என்பதை வெளிப்படுத்துகின்றது. எசு.பி.எம் தேர்வில் 12 பாடங்கள் வேண்டும் என நாம் கேட்பதற்கான காரணம் தமிழ் மாணவர்கள் தமிழ் பாடத்தையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வில் எழுத வேண்டும்; சான்றிதழில் இவை சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும்; உயர்க்கல்வி நுழைவுக்கும் இவை ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் என்பதற்காகவே. இது நம்முடைய உரிமை. நாம் இந்த நாட்டுக் குடி மக்கள்.

எங்கள் தாய் மொழியை நாங்கள் படிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று எண்ணியதற்காக எங்கள் குடியுரிமை பறிக்கப் பட வேண்டுமென்றால், நாட்டின் அடிப்படை சட்டத்தையே மறந்து கொழுத்துப் போய் வாய்க்கு வந்த வண்ணம் பேசிய நாகாக்கத் தெரியாத நாத்தழும்பேறிய இத்தகையாருக்கு என்ன தண்டனை வழங்குவது?

இதையே மற்றவர்கள் சற்று திசைமாறி பேசியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? எங்களுடைய வாழ்வையும் வளத்தையும் வரலாற்றையும் அறியாத குருட்டு முண்டங்களுக்கு நாங்கள் பிச்சைக் காரர்களாகத்தான் தெரிவோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இங்குப் படையெடுத்து வந்து கடாரத்தரசை நிறுவினானே இராசேந்திர சோழன் அவன் என்ன பிச்சைக் காரனா?

அவன் முடிவில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் இன்று இந்த வாய் இப்படி பேசுமா? உம்முடைய மொழியிலும் பண்பாட்டிலும் எங்களின் ஆளுமையினை வைத்துக் கொண்டு எங்களைப் பிச்சைக் காரர்கள் என்கிறாயே வேடிக்கையாக இல்லையா?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகு நோக்கிய ஒருமையைப் பேசிய இனம் எங்கள் இனம். ஒரே மலேசியா என்று உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று வைத்துப் பேசிய இனம் அல்ல நாங்கள்.

எங்களுக்கு ஒரு நல்லது கிடைத்தால் ஊருக்கே கொடுத்துப் பகிர்ந்துண்ணும் பகுத்தூண் அறம் பேணிய இனம் எங்கள் இனம். வந்து பார் அப்பனே , பரந்து கிடக்கும் எங்கள் இலக்கியங்களில் நிறைந்து கிடக்கும் மெய்யியல்களைப் பார்! யார் பிச்சைக் காரன் என்பது புரியும். என்ன செய்வது இன்று உனக்கு வாழ்வு வந்தது நள்ளிரவில் குடை பிடிக்கிறாய். அதனால் மிகவும் துள்ளாதே ! காலம் தடம் மாறினால் எல்லாமே தலைக் கீழாகி விடும்.

மலேசியா மிகச் சிறந்த நாடு. பல்லின மக்கள் வாழும் நாடு. அமைதியான நாடு. ஆனால் இந்த நாட்டை இது போன்ற இன வெறியர்கள் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவார்கள். ஒரே மலேசியா கொள்கையைப் பற்றி பேசப்படும் இடத்திலேயே அதைக் காலில் போட்டு மிதிக்கும் வண்ணம் பண்பு கெட்ட வகையில் ஓர் அதிகாரி பேசியிருக்கிறார் என்றால் இந்நாட்டில் நற்செயல்கள் வெற்றியடையுமா? இப்படியானவர்கள் நாட்டுக்கு நன்மை சேர்க்கும் குடிமக்களா? போகூழைக் கொண்டு வரும் கேடர்களா? இறைவா எங்கள் நாட்டை இந்தக் கொடியவர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக.....No comments:

Post a Comment