தொடர்பாளர்கள்

Thursday, April 14, 2011

வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி 2 - இரா.திருமாவளவன்

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் மனிதன் புரிகின்ற எண்ணுகின்ற நல்லன அனைத்தும் அறம் என்று சொல்லப்படும். இந்த அறத்திற்குப் புறம்பான நான்கு கூறுகள் நம்மிடம் இருக்கக் கூடாதவை. இவை அறமாகா. அவை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்பன. அழுக்காறு என்பது பிறருடைய வளர்ச்சியைக் கண்டு ஏற்றுக் கொள்ள முடியாத மனப் பண்பாகும். இதனை பொறாமை என்றும் கூறுவார்கள். ஒருவருக்கு அழுக்காறு இருந்தால் யார் மீது அது ஏற்பட்டிருக்கின்றதோ அவர்க்குக் கெடுதல் செய்ய முற்பட்டு விடுவார். அடுத்து அவா. இதனைப் பேராசை என்றும் சொல்லுவோம். அவா என்னும் பேராசை உடையவர், தாம் மட்டுமே தமக்கு மட்டுமே என்ற தன்னலத்தால் பிறர்க்கு உரியதையும் பறித்துக் கொண்டு அவர்க்குக் கெடுதல் செய்து விடுவார். மூன்றாவது வெகுளி எனப்படுகின்ற தன்னை மறக்கின்ற சீற்றம், ஆத்திரம். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். இந்த வெகுளியால் ஒருவர் தன்னறிவை இழந்து என்ன செய்கிறோம் ஏது செய்கின்றோம் என்பது கூட அறியாமல் பிறர்க்குக் கேடு செய்துவிடுவார்கள். சில வேளை கொலை கூட செய்து விடலாம். நான்காவது இன்னாச்சொல். தனக்குப் பிடிக்காதவருடைய மனத்தைப் புண்படுத்துகின்ற வகையில் அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லித் துன்புறுத்துவது. இன்னல் படுத்துவது இன்னாச்சொல் எனப் படும். இவ்வாறு தமக்கும் பிறர்க்கும் பெருந்துன்பத்தைத் தருகின்ற பெருங்கேட்டினை ஏற்படுத்துகின்ற நான்கு கேடுகளையும் விட்டொழித்து தம்மைப் போல பிறரையும் எண்ணி மனித நேயம் பேணுவது சிறப்பல்லவா.

No comments:

Post a Comment