தொடர்பாளர்கள்

Thursday, December 2, 2010

ந.மு .வேங்கடசாமி நாட்டார் கல்லூரி அமைப்பாளர் தமிழறிஞர் விருத்தாச்சலனார் மறைவு .. திருநெறி ஆழ்ந்த இரங்கல்

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனருமான தமிழறிஞர் உலகப் பெருந்தமிழர் பேராசிரியர் பி. விருத்தாசலனார் அவர்கள் 18-11-2010 அதிகாலை இயற்கை எய்தினார்.




பேராசிரியர் பி. விருத்தாசலம் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் அயராது போராடியவர் ஆவார். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றி தமிழ் வழிக் கல்விக்காக பல மாநாடுகளை நடத்தியவர்.

புகழ்பெற்ற கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராக 28 ஆண்டுகள் அவர் பணிபுரிந்தபோது ஆயிரக்கணக்கில் உணர்வுள்ள தமிழாசிரியர்களை உருவாக்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்தபோது பல்கலைக் கழக இலச்சினையில் இடம்பெற்றிருந்த ஆங்கில வாசகங்களை அகற்றி 'தொட்டனைத்தூறும் அறிவும் ஆற்றலும்' என்ற தமிழ்ச் சொற்றொடரை இடம்பெறச் செய்தார். 1982ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, பேரவை, பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெற்று அரிய தொண்டுகள் பல செய்தார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார். உலக நாடுகள் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் சங்க இலக்கியம் குறித்து சிறப்பான ஆய்வுரைகள் நிகழ்த்தியுள்ளார்.

இவரது தமிழ்த்தொண்டினைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை வழங்கியது. 2009ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதயத் திருவிழாவில் இவருக்கு இராசராசன் விருது வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு சனவரியில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது இவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.

வாழ்நாள் முழுவதிலும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்த உலகப் பெருந்தமிழர் பி. விருத்தாசலனாரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரின் பிரிவினால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment