கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் வரவேற்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.
தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.
நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் படைக்கட்டளைப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.
கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.
செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் நிறைவையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.
எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற சிக்கலைக் குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு அளவாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான சிக்கல்களை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை.
2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.
இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.
அவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.
- மணிவண்ணன்(காஸ்ரோ)
(அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்.)
No comments:
Post a Comment