தொடர்பாளர்கள்

Thursday, April 9, 2020

சமூக இடைவெளியா? கூடல் இடைவெளியா?

சமூக இடைவெளியா? கூடல் இடைவெளியா?
கோறனி நச்சில் எனப்படும் கொவிட் 19 நச்சிலால் வரும் கடுஞ்சளிக்காய்ச்சல் நோய் இன்று உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்து எல்லை கடந்த பெருந்தொற்றியாக மாறி உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே.
இந்நோய் பற்றிய தெரிவல்கள் வந்தவுடன் என் போன்றோர் அந்நோய் தொடர்பான கலைச்சொற்கள் பலவற்றைப் படைக்கத் தொடங்கினோம்.
கலைச்சொல் ஆக்கப்பணி என்பது எளிமையானதன்று. ஓர் அயற்சொல்லைத் தமிழில் ஆக்கம் செய்கின்ற வேளையில் மூலச் சொல்லின் நுட்பப்பொருளையும், வேர்ப்பொருளையும், பயன்பாட்டுப் பொருளையும் ஆராய்ந்து மக்கள் மனத்தில் நிலைக்கக் கூடிய எளிய சொல்லாக நாம் நுணுகி ஆய்ந்து அமைக்க வேண்டியிருக்கின்றது. ஆய்வாளர் ஆர்வலர் பலரின் ஆய்வுகளுக்கும்
உட்பட்டே சொற்கள் வழக்கிற்கு வருகின்றன. சில சொற்கள் மக்கள் வழக்கிற்கு வந்த பின் ஆய்வாளர்களின் ஆய்வுக்குச் செல்கின்றன.
பண்டை நாளில் தமிழ் மக்களிடையே அயல் மொழித் தாக்கம் அரிதாகவே இருந்தது. முன்பு வடமொழியால் மட்டுமே பெரும்பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இன்று ஆங்கிலத் தாக்கத்தின் விளைவு கடுமையாகவே உள்ளமையால் சொல்லாக்கம் செய்வதில் நாம் மிக பெரும் இடர்பாட்டை எதிர்நோக்குகின்றோம்.
ஓர் ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லை ஆக்கம் செய்யும் வேளை துறைசார்ந்த அறிவும் தெளிந்த தமிழ் மொழி அறிவும் இன்றியமையாதது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
இக்கால் கொவிட் 19 நோய் குறித்த நூற்றுக்கணக்கான சொற்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு உடனுக்குடன் நடைமுறைக்கு வந்துள்ளன. அவற்றை யாரும் எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.
Social distance என்பது அவற்றுள் ஒன்று இச்சொல்லை சமூக இடைவெளி எனத் தமிழகத்து ஊடகங்கள் அனைத்தும் சொல்லாக்கம் செய்துள்ளன. முதலாவது சமூகம் என்பது நற்றமிழ்ச் சொல் அன்று என்பதை உணர்தல் வேண்டும். இது திரட்சிப் பொருளில் ஆன குல் , கும் எனும் தமிழ் வேர் திரிந்ததன் வாயிலாக உருவான சம் எனும் வடமொழி வேரிலிருந்து உருவானச் சொல்லாகும்.
உல்> கும்> சும்> சம்
கும்> cum > chum > sum
இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் தமிழின் கும் எனும் வேர்ச்சொல்லே சும், சம் எனத் திரிந்தது. மக்கள் குடும்பமாய்க் குடியாய்ச் சேர்ந்து வாழ்வதன் பயனாய்ச் சேர்தல் பொருளில் குமுகம், குமுகாயம், குடும்பம், குடி, கும்பல், கூட்டம், கூடல் முதலானச் சொற்கள் உருவாகின.
உல்> குல்>கும்>குமுகு> குமுகம்.
உல்>குல்>கும்>குமுகு>குமுகாயம்.
இவ்வாறான அடிப்படையில் ஏரணவியலாய் அமைந்த அருந்தமிழ்ச் சொல்லே சமுதாயம், சமூகம் எனத் திரிபுற்றது. இச்சொற்களில் உள்ள வேர் கும் எனும் தமிழ் வேரினின்று திரிந்த சம் எனும் வேராகும். இதே சம் ஆங்கிலத்தில் sum எனக் கூட்டல் பொருளில் வழங்கப்படுகின்றது.
சமுகம், சமுதாயம் எனும் வழக்கம் சேர்தல் பொருளில் பொருளில் அமைந்தாலும் இச்சொற்களின் பயன்பாட்டு வழக்கப்பொருள் மக்கள் கூட்டமாய்க் கூடி நிற்றலைக் குறிக்காமல் ஒரு பண்பாட்டுப் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் சேர்ந்து வாழும் நிலையைக் குறிப்பதாகும். ஆங்கிலத்தில் community என்பதற்கே இச்சொல் ஏற்புடைத்து. மிகப் பொருந்திய நற்றமிழ் வழக்கு குமுகம் , குமுகாயம் என்பதே. வடமொழிக்குத் திரிந்து சென்ற சம் எனும் திரிபால் அமைந்த சமூகம், சமுதாயம் எனும் சொற்களை அவை வடத்திரிபினால் அமைந்தவை என்பதைத் தெள்ளிதின் உணர்ந்ததாலேயே பாவாணர் ஏற்கவில்லை. பாவாணர் குமுகம், குமுகாயம் எனும் தமிழ் மரபுச் சொற்களையே வழங்கினார்.
இனி, கொவிட் 19 நிமித்தமாய் உருவாக்கப்பட்டுள்ள social distance எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான சொல்லாக அமைவது கூடல் இடைவெளி என்பதேயாகும். நோய் தொற்றாமல் இருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் சந்திப்பதற்கும், ஒன்றுகூடுவதற்கும் இடம் சார்ந்த, காலம் சார்ந்த இடைவெளியை ஏற்படுத்துவதே கூடல் இடைவெளியாகும்.
சமூக இடைவெளி என்பது ஒரு சமூகத்திற்கும் அதாவது குமுகத்திற்கும் இன்னொரு குமுகத்திற்கும் இடையே உள்ள பொருளியல் , கல்வி முதலான ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இத்தகு குமுக இடைவெளி இருத்தல் கூடாது. அத்தகு ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டுமே ஒழிய குமுகாயத்தில் குமுக இடைவெளியை ஏற்படுத்தக் கூடாது.
இதன் பொருள் உணராமல் தமிழக ஊடகங்கள் ஆங்கிலச் சொல்லை அப்படியே நேரடி மொழியாக்கம் செய்துள்ளதும் அதனை அப்படியே மலேசிய ஊடகங்கள் பின்பற்றுவதும் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிய கதையை ஒக்கும்.
மலேசிய ஊடகங்கள் தமிழ்காப்புப் பணியில் முந்தைய காலத்தைப் போலவே தனித்தன்மையோடு விளங்குதல் வேண்டும். செம்பனை, எண்ணெய்பனை, இணையம், கணினி, புலனம் முதலான சொற்களை உருவாக்கி உலகில் உலவ விட்ட நாடு மலேசியா.. புதுப்புது சொல்லாக்கங்களைச் செய்யும் தமிழ்வல்லார் இந்நாட்டிலும் உண்டு அத்தகையாரின் அறிவாண்மை ஆற்றலை தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளாமல் இந்தியப் பிழைபாடுகளைப் பின்பற்றுவது தமிழுக்கு ஆக்கம் தராது என்பதை உணர வேண்டுகிறேன் .
1. Stethoscope > நாடிமானி
2. Thermometer> வெப்பமானி
3. Plasters > மருந்தொட்டி
4. Dropper > சொட்டி
5. Dropping bottle> சொட்டல் புட்டி
6. Stretcher> தூக்குப் படுக்கை
7. Eye chart> பார்வை ஆய்வட்டை/ கண் ஆய்வட்டை
8. Mask > முகக்கவரி
9. Facial mask > முகக் கவரிழை
10. Surgical mask > அறுவை முகக்கவரி
11. Oxygen mask > உயிர்வளி முகக்கவரி
12. First ait kit box > முதலுதவி பொருட்பேழை
13. Blood bag > குருதிப்பை
14. Blood bank > குருதியகம்/ குருதி வைப்பகம்
15. Self monitor > தற்காணிப்பு
16. Middle East Respiratory Syndrome > நடுகிழக்கு சளிக்காய்ச்சல் நோய் ( MERS- CoV)
17. Severe Acute Respiratory Syndrome > கொடுஞ் சளிக்காய்ச்சல் நோய் ( nCoV)
18. Alveoli > அள்வளை/ நுண்ணறை ( அள் = நுண்மை , அள்வளை= நுண்ணிய வளைப்பைகள், >> வளை> எலிவளை= எலி மறையும், வாழும் அறை)
19. asymptomatic > நோக்குறியிலி = நோவுக்குரிய அடையாளமின்மை
20. Centre of disease control ( CDC) > நோய் கட்டுப்பாட்டு நடுவம்
21. communicable > தொற்றி / பிணி ( எளிமையில் தொற்றும் நோய் )
22. coronavirus > கோறனி நச்சில்
23. Virus > நச்சில்
24. severe acute respiratory syndrome coronavirus 2 ( SARS-CoV-2.) > கொடுஞ் சளிக்காய்ச்சல் போறனி நச்சில் 2.
25. COVID-19 > கொவிட் 19 (>> கோ.ந. நோய் 19 >> கோறனி நச்சில் நோய் 19)
26. epidemic > குறுந்தொற்றி/ வட்டாரப் பிணி
27. epidemiologist > கொள்ளைநோயியலர்
28. Pandemic > பெருந்தொற்றி / பெரும்பிணி
29. exponential > அடுக்குக்குறி ( நோயின் பரவலால் அடுக்கி வரும் எண்ணிக்கை)
30. exponential growth > அடுக்குக்குறி பெருக்கம் / மடக்கை வளர்ச்சி ( நோயின் எண்ணிக்கை மடங்காய்ப் பெருகல் )
31. exponential curve > அடுக்குக்குறிக் கோடு
32. flatten the curve > தட்டையான வளைகோடு
33. furlough > இடைவிடுப்பு ( இடைக்கால பணி விடுப்பு)
34. herd immunity > குழும நோய்த்தடுப்பாற்றல்/ மந்தை தடுப்பாற்றல்
35. immunity > தடுப்பாற்றல் ( நோய்த்தடுப்பாற்றல்)
36. incubation period > நுண்ணி அரும்பல் காலம்
37. incubation > நுண்ணியரும்பல்
38. Microorganism > நுண்ணி
39. isolation > தனிப்படுத்தம் / கடுந்தனிமை
40. Self-isolation > தன் தனிமை
41. mitigation > தணிப்பு
42. Social distance > கூடல் இடைவெளி
43. antimicrobial product > நுண்ணியெதிர் பொருள்
44. antimicrobial > நுண்ணியெதிரம்
45. case fatality rate (CFR) > பிணி மரிக்கை மதிப்பீடு
46. circulatory system > குருதிச்சுற்று முறைமை
47. clinical trial > பண்டுவ முயல்வு
48. community transmission > மக்களிடை கடத்தம் ( மக்களிடையே நச்சில்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தப்படுதல் )
49. confirmed case > உறுதி நேர்வு
50. CT scan > கணினி மெய்யூடி
51. DNA > இருமத்தீ உட்கரு காடி / மரபணு/ மரபி
52. encephalitis > மூளைக்காய்ச்சல்
53. enzyme > நொதியம்
54. epidemiology > கொள்ளை நோயியல்
55. GenBank > மரபியல் தரவகம்
56. immunocompromised > தடுப்பாற்றல் தடங்கல்
57. immunosuppression > தடுப்பாற்றல் ஒடுக்கல்
58. Morbidity rate > நோயியல் அளவீடு
59. outbreak > வெடிப்பரவல்/ கடும்பரவல்
60. pathogen > நோய்நுண்ணி
61. personal protective equipments (PPE) > தனியாள் காப்பணிகள்/ நோய்க் காப்பணிகள்
62. pneumonia> கொடுஞ்சளிக் காய்ச்சல்
63. preexisting conditions > கட்டுமீறிய உடல்நிலை
64. PUI (Person Under Investigation) > ஆய்வுக்குரியவர்
65. PUM ( Person under monitoring) > கண்காணிப்புக்குரியவர்
66. pulmonary > நுரையீரல் சார்
67. physical distancing > தீண்டல் தவிர்ப்பு
68. respirator > மூச்சுமூடி மூச்சுப்பொறி
69. screening > பீடிப்பாய்வு / பிணிப்பாய்வு
70. shelter in place > உள்ளிருப்பு
71. ventilator > மூச்சுப்பொறி
72. WHO > உலக நலவியல் நிறுவனம்
73. zoonotic > விலங்கத்தொற்றி
74. Close contact > நெருக்கத் தொடர்பு
75. cordon sanitaire > தடைவளாகத் துப்புரவு / தொற்றெல்லை அரண் ( நோய் தொற்றாமல் பரவிய வளாகத்தைத் தடைப்படுத்தி அடுத்த இடத்திற்குப் பரவாமல் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளல்)
76. Communicable disease > தொற்று நோய்
77. Communicable > தொற்றக்கூடிய
78. Contagion > தொடுப்பொட்டி / தொற்றொட்டி ( தொற்றிய ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றுதல் அல்லது ஒட்டுதல்) / ஒட்டுவாரொட்டி
79. community spread > கூட்டுப் பரவல் ( யாரிடமிருந்து பரவியது என அறியமுடியாமல் ஒரு கூட்டுப்பரவல் நோய்)
80. mortality > இறப்புநிலை/ இறப்பியல்
81. upper respiratory infection> மேல் மூச்சுறுப்புத் தொற்று
82. Confirmed > உறுதிப்படுத்தப்பட்டது / உறுதிப்பட்டவர்
83. Suspected > ஐயப்பாட்டுக்குரியவர்/ ஐயத்திற்குரியர்
84. Exposed > அணித்தவர்/ தொடர்புற்றவர்/ தொடர்புபட்டவர்/ வெளிப்பாடு
85. Treatment > பண்டுவம்/ மருத்துவம்
86. Voluntary> தன்னார்வலர்
87. Involuntary > ஆணைப்பணியாளர்/ கட்டாயப் பணியாளர்
88. Direct Medical > நேரடி மருத்துவம்/ நேரடிப் பண்டுவம்
89. Index case > குறியீட்டு நேர்வு
90. Index patient > குறியீட்டு நோயர்
91. Patient zero > முதற்பிணியர்
92. Contact tracing > தொடர்பர் துப்பாய்வு/ தொடர்பர் கண்டறிதல்
93. Super spereader > பாரிய பரப்பாளர்
94. Front line workers > முன்னணிப் பணியாளர்கள்
95. Infection precautions > தொற்று தடுப்பு முன்நடவடிக்கைகள்
96. CT protocol > கணினி மெய்யூடி வரைமுறை
97. Ultrasound > மிகையொலி/ மீயொலி/ புறவொலி
98. Nuclear medicine > அணுவியல் மருத்துவம்
99. Red zone > சிவப்பு வளாகம்
100. Yellow zone > மஞ்சள் வளாகம்
101. Green zone > பச்சை வளாகம்
102. Critical > கடுமை/ கடுநிலை
103. High risk > உயரிடர் / கடும் இடர்
104. term loan > காலவரைக் கடன்/ தவணைக் கடன்
105. Mortality > தவணைக் கடன் நீட்சி/ தவணை நீட்சி
106. Unsung heroes > மறைநிலை வீரர் / பின்னணிச் செயல்வீரர் ( பின் களப்பணி நாயகர் - மிகப் பெரிய செயல்களைச் செய்து உலகறியா நிலையில் இருப்பவர்)
107. One off > ஓரோக்கால்
108. Agglutination - ஒட்டுத்திரள்
109. Antibody - நோவெதிரி
110. Droplet transmission/spread > நீர்த்துளிப் பரவல்
111. Elective surgeries > பாணிப்பு அறுவை / தாழ்ச்சி அறுவை ( முகாமையற்ற அறுவையைத் தள்ளி வைத்தல்/ முறையாக அணியம் செய்த பின் காலந்தாழ்த்திச் செய்யும் அறுவை)
இரா. திருமாவளவன்

No comments:

Post a Comment